செவ்வாய், 27 நவம்பர், 2007

நீதான் அவனிடமிருந்து ஒளிந்து கொண்டிருந்தாய்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

YOU WERE HIDING FROM HIM
By Paramahansa Yogananda

நீ மறந்து தடுமாறும் ஆட்டத்தை ஒழிப்பாயாக!
உனது உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் மெளனி
அதிதியை நீ என்றும் மதிக்கத் தவறுதலாகாது
என்பதைப் புரிந்து கொண்டு அடங்கியிருப்பாயாக.
எந்தவொரு பகைவனையும் மன்னிக்கலாம்!
ஆனால், உன் ஆத்மாவின் மிகப்பெரிய எதிரியான
உன்னை மன்னிக்கவே முடியாது, ஏனெனில்
தற்காலிக நிலையமான இவ்வாழ்க்கையில்
என்றும் காத்திருக்கும் உன் தலைசிறந்த
நண்பனை நீ நட்பு கொள்ள மறந்ததினால்!

வாழ்வின் ஒளி மங்குகிறது; இருள் விரைவாக
சூழ்கிறது. ஆதலின், அன்பென்னும் அணையா
விளக்கை ஏற்று; உன் மரண தருவாயில்
வெங்காலன் கரிய திரையால் சூழும் நேரம்
அவ் விளக்கொளியால் அவனைக்
(கடவுளைக்) காணலாம்.

இவ்வளவு காலம் நீ எங்கோ விலகியிருந்தாய்;
அவன் உன் நெஞ்சுக்குள்ளே இமைக்காமல்,
சலிக்காமல் உனக்காக காத்துக் கொண்டே
இருக்கின்றான். இப்போது வந்து நீ, "நான் தான்
காத்துக் கொண்டிருந்தேன்" என்று புலம்புகிறாய்.
இது முறையல்ல, நீயே தான் அவனிடமிருந்து
மறைந்திருந்தாய்! சரி, போனது போகட்டும்,
இப்பொழுது நீ அவனை கண்டுகொண்டாகிய
பின், உன் அறிவற்ற வலையால் பின்னப்பட்ட
கூட்டிலகப்பட்டு, அவனை உன் பார்வையிலிருந்து
மறுபடியும் நழுவ விட்டுவிடாதே.

தவறின் மயக்கத்தில் சொருகும் உன் கண்களைத்
திறந்து, மூடிய இமைகளுக்குப் பின்னால் ஒளிரும்
ஜோதியைக் காண்பாயாக! சாந்தம் தவழ் அகக்
கண்களைத் திறப்பாயாக; அவன் உன்னில்
எங்கும் பரவியிருப்பதைப் பார்ப்பாய்.
கவலைத் திரையை விலக்கு; அவனுடைய
ஆனந்தக் கூத்தைக் கண்டுகளி.
தன்பிழையாலான இருள்மயக்கத்தை நீக்கி,
அவனை உன் உள்ளத்துக்குள்ளே கண்டுகொள்.

நீ எல்லாம் நிறைந்த ஆத்ம வீட்டினிலிருந்து ஓடி,
துச்சமான சுகத்தை நாடி, இருண்ட குடிசையில்
வாழ நேர்ந்தாய். இப்பொழுது வா! எல்லா
செல்வங்களையும் ஈனும் அகத்தை நீ உன்னகத்தே
காண்! அவனல்ல உன்னிடமிருந்து ஒளிந்து
கொண்டிருந்தது; நீதான் அவனிடமிருந்து ஒளிந்து
கொண்டிருந்தாய்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

வெள்ளி, 23 நவம்பர், 2007

மருட் குப்பையை அகற்றுதல்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

REMOVING THE DEBRIS OF DELUSION
By Paramahansa Yogananda

என் மனோராஜ்யம் அடர்ந்த மருளினால்
கல்மஷம் அடைந்துள்ளது. என் ஆத்ம கவனக்
குறைவுள்ள நகரங்களில் மனமாசு பன்னெடுங்
காலமாய் குப்பைமேடாகக் குவிந்துள்ளது.
அவைகளை என் சுயக்கட்டுப்பாட்டு முயற்சியான
தொடர்மழையின் மூலம் நான் அகற்றுவேனாக.

குறுகிய மனப்பான்மை, இன மதங்களினால்
வேறுபடுத்தும் தப்பெண்ணம் போன்ற உருமாற்றும்
சேரிகளை ஊழிவெள்ளம் அடித்துச் செல்லட்டும்.

இறைவா! மண்ணில் உழன்று களைத்த என்
எண்ணக் குழந்தைகள் உன் தூய்மையான
ஒழுக்கப் புனலில் நீராடிப் புனிதமடையட்டும்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

---
ஆத்ம கவனக் குறைவுள்ள நகரங்கள் - the cities of spiritual carelessness
கல்மஷம் அடைதல் - begrimed
மருள், மனமாசு - delusion
குப்பை - debris
தப்பெண்ணம் - prejudice

சனி, 17 நவம்பர், 2007

அகண்ட ஏகத்துவம்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

UNBROKEN ONENESS
By Paramahansa Yogananda

எந்தையே! உள்ளே சாந்தத்தில் ஆகட்டும்,
வெளியே அமளியில் ஆகட்டும், நான்
உன்னுடன் இரண்டறக் கலந்து ஐக்கியம்
காண வழி சொல்லிக் கொடு.

நிசப்தம் நிலவினுமென்ன? கூச்சல்
அலறினுமென்ன? எனக்கு கவலையேயில்லை!
உன்னுடைய காக்கும் கரங்கள் எந்நேரத்திலும்,
எவ்விடத்திலும் எனை சூழ்ந்திருப்பதை நான்
உணரும் போது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
அகண்ட - Unbroken
ஏகத்துவம், ஐக்கியம் - Oneness