புதன், 30 ஜூன், 2021

183. மன்னிக்கும் தன்மையை உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மன்னிக்கும் தன்மையை உரிமையுடன்-வேண்டுதல்.

என்னைப் பிறரினுள் காண எனக்குக் கற்பி. நான் என் குற்றங்களை மன்னித்து, அவைகளைக் கமுக்கமாகக் களைய விழைவதுபோல், பிறரை மன்னித்து, அவர்களுடைய குற்றங்களை அவர்கள் சரிசெய்ய விரும்பினால் அவைகளை நிவர்த்திக்க அமைதியாக ஆலோசனையளிக்க எனக்குக் கற்பி.

தடுமாறிக் கொண்டுள்ளோர், அடம்பிடிப்போர் ஆகிய அனைவரையும், கோழைத்தனமான அராஜக சக்தியை விலக்கிவிட்டு, மென்மையான பொறுமையின் வலிமையின்மூலம் நான் உன்னை நோக்கி வழிநடத்திச் செல்வேனாக.

உன் ஒளியானது நல்ல, வைரம்போல் பிரகாசிக்கும் ஆன்மாக்களிலும், கெட்ட, கரிய உள்ளமுடையவர்களிலும் சமமாகவே ஒளிர்கின்றது என்பதனைக் காண எனக்குக் கற்பி. தீயவர்களையும், இருண்டமனங் கொண்டோரையும், பளீரெனத் துலங்கும் ரிஷிகளாக ஆக்கி, அவர்கள் உன் பாரபட்சமற்ற ஞானக்கதிர்களை முழுமையாகப் பிரகாசிக்குமாறு மாற்ற என் புரிந்துகொள்ளும் திறனையும், ஆற்றலையும் நீ வழிநடத்து.

என் ஆன்மாவை மூடிச் சுற்றிலும் அலட்சியக் கரிப்பிடித்திருந்ததை நீ தேய்த்துக் கழுவிவிட்டாய், அது உன் ஒளியைப் பிரகாசிக்கின்றது. இப்போது நான் உன் குழந்தையென்பதை அறிகின்றேன். அதேபோல், அன்பினாலே எல்லா ஆன்மாக்களையும் கழுவ என்னைத் திறம்படுத்து. அதன்மூலம், மிகவும் இருண்ட ஆன்மாக்களையும் உன் குழந்தைகளாக, உறக்கத்தின் வசப்பட்ட என்னுடைய சொந்த சகோதரர்களாகக் காண வை. உன் ஒளியானது வலிமைகுன்றிய இருள் மண்டிய ஆன்மாவிலும் மறைவாக இருக்கின்றது; அது சுய-முயற்சியினால் உதிக்கும் நல்லோர் உறவினில் தோன்றும் சக்தியினால் அங்கீகரிக்கப்பெற்று, தானாக வெளிப்பட அது காலவரம்பற்றுக் காத்திருக்கின்றது. அதேபோல், என்னையும் அப்படிப்பட்ட பொறுமையை உடையவனாகப் பண்படுத்து; அதன்மூலம், உண்மையைத் தவறவிட்ட எல்லா ஆன்மாக்களையும் அவர்கள் விரும்பும்போது உதவ நான் எப்போதும் தயாராக இருக்குமாறு செய். 

பெருந்தூற்றலுக்காளான கொலையாளிக்கும் அவன் நல்லவனாக மாற மீண்டும் வாய்ப்பளித்து, புதிதாக மற்றொரு ஜென்மத்தில் அடையாளங் காணமுடியாத படி உடம்பளித்து, வேறு சூழலில் அவனைப் புழங்க வைக்கின்றாய். அதேபோல், தவறிழைத்து உலகத்தால் கைவிடப்பட்டவனையும் எங்கள் மன்னிக்கும் பொறுமைக் கூடாரத்தில் அடைக்கலம் கொடுக்க எங்களுக்குக் கற்பி. பேருணர்வே, உன்னிடமிருந்து பெற்ற எங்கள் அன்பின் கதிரொளி அவனின் தவறினால்-உறைந்த ஆன்மாவின் நடுக்கத்தை விலக்கட்டும்.

இவ்வுலகம் தவறான காரியங்களின் கடலிலிருந்து அதன் இச்சைப்படி எப்போது மீண்டு வெளிவருகிறதோ, அப்போது உன்னை விளங்குமாறு செய்ய நீ ஆவலுடன் காத்திருக்கின்றாய். தவறினுள் ஆழ்ந்த இவ்வுலகின்முன் நீ காட்டும் அமைதி, உன் பொறுமையையும், மன்னிக்கத் தயாராகவுள்ள குணத்தையும் புலப்படுத்துகின்றது. பிறர் எங்களைக் கசப்புணர்வினால் குரூரமாகக் காயப்படுத்தினாலும், எங்கள் இனிமையான உதவும் கரங்களை அவர்களுக்கு நீட்ட மறுக்காமலிருக்க எங்களுக்குக் கற்பி; அதுவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, அவர்கள் தாங்களே தங்களுக்கு உதவிக்கொள்ளுமாறு உதவ எங்களுக்குக் கற்பி. அதன்மூலம், ஒருக்கால் நாங்கள் அவர்களுக்கு உதவமுடியாத பட்சத்தில் அவர்கள் எங்களுக்கெதிராக மாறினாலும், நாங்கள்  அவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம்.   

எங்களை மிகவும் துன்புறுத்துபவர்களை, முதலில் உள்முகமாகவும், பின் வெளிப்படையாகவும் மன்னிக்க எங்களுக்குக் கற்பி. மன்னிக்கும் குணத்தின் நறுமணத்தை நாங்கள் எங்கும் தெளித்து, புளித்துப்போன வியப்பிற்குப் பதிலாக இனிய சொற்களையும், வெறுப்பிற்கு அன்பையும், சினத்திற்கு கருணையையும், தீங்கிற்கு நன்மையையும் நல்குமாறு எங்களுக்கு அருள்புரி. 

மிகவும் இருள் மண்டிய ஆன்மாவும், பிழைபட்ட கனாக்காணும் ஒரு நித்தியனே என்பதை நாங்கள் உணருமாறு எங்களை விழிப்புறச் செய். மன்னிப்புக் குணத்தின் தெய்வீகத் தன்மையினால், அவனின் உணர்வு நிலையை தூய, அமிருத, விண்ணுலக மைந்தன் எனும் ஸ்தானத்திற்கு விழிப்புறச் செய்யுமாறு எங்களுக்கு மேம்படுத்தும் சக்தியளி.   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
183 Demanding forgiveness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 23 ஜூன், 2021

32. உரிமையுடன் வேண்டும் பிரார்த்தனை: என்னை கிறிஸ்துவனாகவோ, இந்துவாகவோ, அல்லது எந்தவொரு மதத்தவனாகவும் ஆக்கு - நான் உன்னை மெய்யாக உணர்வெனெனில்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உரிமையுடன் வேண்டும் பிரார்த்தனை: என்னை கிறிஸ்துவனாகவோ, இந்துவாகவோ, அல்லது எந்தவொரு மதத்தவனாகவும் ஆக்கு - நான் உன்னை மெய்யாக உணர்வெனெனில்.

நான் கிறிஸ்துவனாகவோ, யூதனாகவோ, இந்துவாகவோ, புத்தமதத்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, அல்லது ஸுஃபியாகவோ இருந்தாலும்: நான் எந்த மதத்தவன், எந்த இனத்தவன், எந்த கொள்கையுடையவன், எந்த நிறத்தவன் என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை, உன்னை அடையும் வழியை மட்டும் நான் பரிசாகப் பெறுவேனெனில்! மாறாக, மதச்சடங்கு, சம்பிரதாயங்களின் குழப்பமான வழிகளில் சிக்கிக் கொள்வேனென்றால், நான் இவைகளில் எந்தவொரு மதத்தையும் சாராமல் இருப்பேனாக. நான் உன்னிடம் கொண்டு செல்லும் மெய்யுணர்வெனும் ராஜவீதிப் பாதையில் பயணிப்பேனாக. எந்த மதமெனும் துணைப்பாதையின் வழியே நான் பயணித்தாலும் என் அக்கறையெல்லாம் இறுதியில், உன்னிடம் நேரே இட்டுச் செல்லும் ஒரே உயர்வழிச் சாலையான பொதுவான மெய்யுணர்வுப் பாதையை அடைவதே.

என்னுடைய சக்திகள் அரும்பும் பகற்பொழுதில் என்னை வழிநடத்த உன் ஞானச்சூரியனின் பிரகாசத்தை அனுப்பிவை; சோகத்தின் இராப்பொழுதில் நான் பயணிக்க நேர்ந்தால், உன் கருணைச் சந்திரனை எனக்கு வழிகாட்ட அனுப்பு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
32 Prayer-Demand: Make me anything: a Christian or a Hindu - anything to realize Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 20 ஜூன், 2021

182. நீர்க்குமிழிகளான என் ஊனுடலையும், ரத்தத்தையும் எல்லையற்ற உன் கருணை வெள்ளத்தினால் ஞானஸ்நானம் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீர்க்குமிழிகளான என் ஊனுடலையும், ரத்தத்தையும் எல்லையற்ற  உன் கருணை வெள்ளத்தினால் ஞானஸ்நானம் செய்.

மேகத்தினின்று-தோன்றும் மழைகள், மலையிலிருந்து பெருகும் சுனையூற்றுக்கள், பெற்றோரின் ரத்தம், தாயின் நெஞ்சில் சுரக்கும் பால் - இவை எனக்குச் ஊனுடம்பின் உணர்வினை அறிமுகப்படுத்தின. 

தாயின்  பாசமிகுந்த அரவணைப்புடன், காயப்படத்தக்க சதைக்கூண்டில் சிறைப்படுத்தப்பட்டு அடைந்துகிடந்த என் ஆன்மா சுதந்திரத்திற்காகக் கதறி அழுதது. இனிய புலன் தோட்டங்களின் இரும்பு-வேலிகளுக்குள்ளே மேலும் அடைந்துகிடக்க எனக்கு விருப்பமில்லை. 

பின்பு, அமைதி மேகம் இடித்து உன் கருணை மழையை வெகுவாகப் பொழிந்து, உன் அருள்பொங்கும் வெள்ளத்தை உருவாக்கியது. உன் பேருணர்வின் வேகம் என் ஆன்மாவின் எல்லைகளை உடைத்தெறித்தது. நான் தடைகளை உடைக்கும் உன் நிரந்தரத்தின் பொங்கும் வெள்ளநீரினால் ஞானஸ்நானம் செய்யப்பட்டேன். 

உன் பிரபஞ்சப் பேருணர்வின் வெள்ளத்தின் ஆற்றல், என்னைச் சுற்றிமூடிய என் புலன்களாலான வேலிகளை உடைத்தது; சிறிய நீர்க்குமிழிகளான என் ஊனுடலும், ரத்தமும் எல்லையற்ற சர்வவியாபகத்தினில் கரைந்து ஞானஸ்நானம் செய்யப் பெற்றன.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
182 Baptize the bubbles of my blood and flesh in the flood of Thy Grace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 17 ஜூன், 2021

103. கடவுளை எல்லாவற்றிலும் காணுமாறு ஆன்மீகக் கண்ணைத் திறக்கக் கோரி உரிமையுடன்-வேண்டுதல்*.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளை எல்லாவற்றிலும் காணுமாறு ஆன்மீகக் கண்ணைத் திறக்கக் கோரி உரிமையுடன்-வேண்டுதல்*.

இறைத்தந்தையே, பூக்களின் அழகு, கடந்துசெல்லும் வாழ்க்கைக் காட்சிகளின் கோலம், அமைதியாகத் தவழ்ந்து செல்லும் மேகங்களின் வனப்பு ஆகியவை என் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. என்னுள்ளே உள்ள கண்ணை உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதவண்ணம் திறக்க வை. 
அதன் பார்வையால் - மேலே, கீழே, சுற்றிலும், உள்ளே, வெளியே என எங்கும் உன்னையே காண வேண்டும். எல்லாவற்றிலும் உன்னையன்றி வேறெதையும் காணாமலிருக்க எனக்குக் கற்பி. மகத்தான உன் ஆட்கொள்ளும் அழகை எல்லா அழகுகளிலும் காணுமாறு, என்னுள்ளே உள்ள அந்தக் கண்ணினைத் திற!    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

* - இந்த பிரார்த்தனை-எண்ணம் நம் உயருணர்வில் தோய்ந்து நிலைபெறும் வரை, இந்த வேண்டுதலை மனத்திலே முழு கவனத்துடன், நம்பிக்கையுறுதியுடன் ஜபிக்க வேண்டும்.  

Original: 
103 Demand* for the opening of the spiritual eye, to find God in everything.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 16 ஜூன், 2021

170. உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.

என் புன்னகை கீதங்களுடன் உன்னிடம் நான் வருகின்றேன். என்னென்ன பொக்கிஷங்கள் என் உள்ளத்தின் ரகசிய சேமநிதியில் உள்ளதோ, அவற்றை உன்னிடம் நான் ஆவலுடன் கொண்டு வந்துள்ளேன். என் இதய தேன்கூட்டிலுள்ள எல்லாத் தேனையும் நான் எடுத்து வந்துள்ளேன். என்னுடையதெல்லாம் உன்னுடையதே!

என் சஞ்சலமான எதிர்பார்ப்புகளும், சந்தோஷங்களும் என்னை அதிருப்தியால் பகலவனாய்ச் சுட்டெரித்துக் கொண்டுள்ளன; இப்போது உன்னைப் பருகுவதனால், என் ஆசைத் தாகங்கள் எல்லாம் நிரந்தரமாகத் தணிந்துவிடும்.

என் சந்தோஷ மெழுகுவர்த்தியின் சுடர் உன் ஆனந்தப் பெருஞ்ஜோதியில் கலந்துவிடும். உன் சுகந்தமான சுடரின் மணமும்,  பொரிபொரிக்கும் அதன் ஆனந்த தூப அலைகளும் மிதந்து என்னை நோக்கி வருகின்றன. உன் பரமானந்த ஜோதியில், நான் தொடர்ந்து எப்போதும் நீந்துவேன். கானல்-சொர்க்கமான ஒரு லோகாயத உலகில் வாழ்ந்து மடிவதைக் காட்டிலும், உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
170 Teach me to drown in Thy Light and live. (Inspired by a Hindu song.)
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 11 ஜூன், 2021

178. உன் இசையை என் உடைந்த குழலின்மூலம் ஊது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் இசையை என் உடைந்த குழலின்மூலம் ஊது.

[பிரணவ] வேணுகானம் இசைப்போனே,  உன் இசையை உடைந்த குழல்களெனும் மதங்கள் எல்லாவற்றின் வழியேயும் ஊதி, உன் ஒரே உண்மைக்கானத்தை வெளிக்கொணர். அந்த தெய்வீக கானத்தை உன் பேருணர்வின் வளமை பொதிந்த பலவித பொன்மய ஆடைகளினால் போர்த்தி அலங்கரி.  

வேணுகானம் இசைப்போனே, அகன்ற, குறுகியவழிகளிலெல்லாம் வெளிப்படு பாவனைகளான உன்னுடன் ஒத்திசைக்க நாடும் முழுமையடையாத இதயகானங்கள் எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி, அவற்றை அன்பிசைக்கும் வாழ்க்கைக் குழலின் மூலம் முழுமையான ஆனந்தத்தை நோக்கி செலுத்து.    

அந்த பரிச்சயமுள்ள உன் சன்னமான-மிருதுவான ஸ்வரங்களுக்காக, நான் அனுதினமும் அமைதியுடன்-லயித்த என் மன-வானொலிப் பெட்டியில் தொடர்ந்து செவிமடுத்தேன். நான் வெகுதொலைவிலிருந்து உன்னுடன் ஒத்திசைக்க முயன்றேன். முதலில், பல ஆரவார சத்தங்கள் குறுக்கிட்டு என் அமைதியைக் குலைத்தன. ஆனால், என் ஒருமுகப்பாட்டில் ஜாக்கிரதையாக சில நுண்ணிய மாற்றங்களை செய்தபின், நீ விண்வெளி இறக்கைகளில் பறந்து வந்து சேர்ந்தாய். உடனே, பூமியின் அனைத்து நல்லவைகளுடனும், எல்லா இதயங்களின் புனிதங்களுடனும் சேர்ந்து நீ பாடும் அமைதி கானத்தை நான் கேட்டேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
178 Blow Thy music through my shattered reed.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 7 ஜூன், 2021

135. செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி.

இறைத்தந்தையே, செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி. எலும்பு, நரம்பு, சதைகளால் ஆக்கப்பட்ட என் உடல் எந்திரத்தை இயக்கும் என் வாழ்வின் மின்சாரம் நீ என நான் உணருமாறு செய். ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், ஒவ்வொரு சுவாசகதியிலும், உயிர்த்துடிப்புடன் வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும் உன் ஆற்றலை நான் உணருமாறு எனக்குக் கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
135 Teach me to perform every work just to please Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 6 ஜூன், 2021

91. அறியாமையிருளை இறையொளி விரட்ட உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அறியாமையிருளை இறையொளி விரட்ட உரிமையுடன்-வேண்டுதல்.

தெய்வ நண்பனே, என் அறியாமையிருள் இவ்வுலகம் தோன்றிய கால அளவுக்குப் பழமையானதாக இருந்தாலும், உன் ஒளி உதயமாகும் போது அந்த இருள் முன்னம் மண்டிய சுவடின்றி மறைந்துவிடும் என்பதனை எனக்கு நன்கு உணரச்செய்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
91 Demand that God's Light drive dark ignorance away.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 4 ஜூன், 2021

205. ஒரே மெய்ஞ்ஞான உயர்வழிச்சாலையை அடைய உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒரே மெய்ஞ்ஞான உயர்வழிச்சாலையை அடைய உரிமையுடன்-வேண்டுதல்.

கலங்கரை ஒளிவிளக்கே, சுகந்தமலரே, எங்கள் புலன்களை விழிப்புறச்செய்!

"தேவலோக வேட்டைநாய்"* மோப்பம் பிடிப்பது போல, எங்களையும் நேரே உன்னிடம் கொண்டுசெல்லும் அந்த ஒரே மெய்யுணர்வு வேகவழிச்சாலைக்கு விரைவாக இட்டுச் செல்லும் சரியான அணுகுசாலையை நாட வைப்பாயாக. 

அணையா கலங்கரை ஒளி விளக்கே, உன் ஒளிரும் வெளிச்ச விரலை எங்கள் அறியாமை இருளின்மேல் காட்டு; அதன்மூலம் வழிதவறாமல், தாமதமின்றி நாங்கள் சரியான வழியை கண்டுகொள்ள முடியும்.

எந்த மரபு வழிபாட்டு நெறியைப் பின்பற்றினாலும், எங்களை இறுதியில் உன்னிடம் கொண்டுவிடும் பொதுவான விவேகஞான உயர்வழிச்சாலைக்கு வழிநடத்து.

குறுகிய கொள்கைப் பிடிவாதமெனும் சந்துகளுக்கும், விட்டுக்கொடுக்காத மனச்சாய்வு சுவர்களுக்கும் மேலே, எங்கள் உள்ளங்கள் உன் மேன்மையாக்கும் விமானத்தில் பாதுகாப்பாகப் பயணிக்கட்டும்.  இறுதியில், அனைத்துப் பிரபஞ்சமும் கூடும் பொது வழிபாட்டுக்காக நாங்கள் (மனிதனால் உருவாக்கப்பட்ட, விளக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட நம்பிக்கைகள், குறுக்கல்களால் தடுக்கப்பட முடியாத) சுதந்திரமான வானவெளிக் கோயிலில் சந்தித்து, எங்கள் இதயங்களின் எல்லா புனித மந்திரங்களையும் கொண்டு உன் சர்வவியாபக சாந்நித்தியத்திற்கு நாங்கள் ஓதுவோமாக!

முக்திபெறுவதற்கான விஞ்ஞானபூர்வ வழிமுறைகளையும், விஞ்ஞான-தாயகத்தின் ஒளியில் பிறந்த குழந்தையான மெய்யுணரும் ஆன்மநெறியையும் எங்களுக்குக் கற்பி. 

ஸ்தூல விமானங்கள் பறக்கும் இந்த யுகத்தில் செய்வதுபோல, எங்கள் இரும்புப்பறவை விமானங்களை பனிமூட்டம் மற்றும் இரவினிருள் தடைகளை ஊடுருவி, ஒரு கட்டுப்பாட்டறை கோபுரத்திலிருந்து மற்றொன்றிற்கென மனித-நெறிமுறைப்படி இயங்கும் ஒளிரும் மின்சார திசைகாட்டியைப் பின்பற்றி, ஒரு ஊரிலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கென பாதுகாப்பாய் வழிநடத்துவோமாக. 

பெருஞ்ஜோதி விளக்கே! எங்கள் அறியாமையிருளை ஊடுருவிச்சென்று வழிகாட்ட உன் இனிய மணங்கமழ் ஞானப்பிரகாசக் கதிரை அனுப்பி வை; அதன்மூலம் நாங்கள் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இறங்குமிடத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றிற்கென எங்கள் ஆன்மவழியைக் கண்டுகொண்டு பயணிப்போமாக.

மேலும், சுகந்த மலரே! நாங்கள் மெய்ஞ்ஞான கோளத்தில் முன்னேறுகையில் எங்களை எல்லாப் பொழுதிலும் உற்சாகமூட்ட உன் அன்பின் சுவாசக் காற்றை அனுப்பி வை; அதன்மூலம், உன் வானத் தோட்டம் எங்கள் கற்பனைக்கு எட்டி, தணியாமல் உன்னைத் தேடும் எங்கள் தாகமான எங்கள் ஆன்ம பயணங்களை விரைவுபடுத்துவோமாக.  

---
தேவலோக வேட்டைநாய் - "The Hound of Heaven" எனும் தலைப்பில் பிரான்சிஸ் தாம்ப்ஸன் இயற்றிய செய்யுள், ஜீவர்களின் [குறிப்பாக தவறிழைப்பவர்களின்] மேலுள்ள கடவுளின் தீவிரமான அன்பை, ஒரு வேட்டைநாய் முயலைத் துரத்துவது போன்ற உருவகத்தில் சித்தரிக்கின்றது.
---
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
205 Prayer-Demand to reach the One Highway of Realization.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!