புதன், 11 நவம்பர், 2020

43. என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.

இறைவியின் சிங்கக்குட்டியான நான் துர்பலமுடைய மனித ஆட்டுமந்தை வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் தூக்கி எறியப்பட்டேன்.

பயம், தோல்வி, நோய்களுக்கு வசமாகும் ஆடுகளின் நடுவே வெகுகாலமாய் வாழ்ந்து, நானும் அவைகளைப் போலே 'மே-மே'யென கோழைத்தனமாய் கத்தினேன். வஞ்சகமாய், தொடர்ந்து நைக்குந் துன்பங்களை நடுக்கி அச்சமுறுத்தும் என் உறுமலை மறந்து போனேன்.

மெய்யணர்வின் சிங்கமே,  நீ என்னை ஆட்டுமந்தையில் இருந்து வெளியிலிழுத்து என்னை தியானக் குளத்திற்கு இட்டுச்சென்றாய்.  'கண்ணைத்திற! உறுமல் செய்!' என நீ எனக்குக் கட்டளையிட்டாய். ஆனால், நான் என் விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டு 'மே-மே'யென பயத்தில் அலறினேன். உன் ஞான கர்ஜனை என்னுள்ளே முழுதும் பரவி அதிரவைத்தது. உன்னுடைய பலமான ஆன்ம வலுவுள்ள ஆட்டுவித்தலினால் என் கண்கள் திறந்தன. ஆ! அங்கு சலனமற்ற தெளிந்த குளத்தில் பிரதிபலிக்கும் என் முகம் உன் முகத்தைப் போலவே இருப்பதை எனக்குக் காட்டினாய்!

நான் என்னை இப்போது பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கிய சிங்கமாய் அறிகிறேன். அச்சத்தால், தளர்வால், துன்பத்தால்  நடுங்கி எழும்  ஆட்டுக்கத்தல் இன்றோடு ஒழிந்தது; இனி, எல்லாம் வல்லவனின் உயிரூட்டும் சக்தியைக் கொண்டு நான் கர்ஜிப்பேன்!  அனுபவமெனும் காட்டில் உலாவி, சிறு ஜந்துக்களாய்த் திரியும் விரக்தியூட்டும் கவலைகள், தளர்த்தும் அச்சங்கள், அலைக்கும் கோணாய் அவநம்பிக்கைகள் போன்றவைகளைக் கவ்விக் பிடித்து இரக்கமற விழுங்குவேன்.

மரணமில்லா சிங்கமே, என்மூலம் சர்வவல்லமை படைத்த உன் ஞான கர்ஜனையால் உறுமுவாயாக! 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
43 Make me a lion of Thy all-conquering Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

செவ்வாய், 10 நவம்பர், 2020

165. என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே

என் வானவில்-கனவு விறகுகளால் மூட்டப்படும் என் லட்சியத்தீ மேன்மேலும் வளர்கிறது. பழைய கனவுகள் நினைவிலிருந்து மறைய மறைய, விடாப்பிடியான புது எதிர்பார்ப்புகள் தணிக்க முடியாத, புதிதான சுடர்களாய் பெருகி, என் புத்துணர்வு சக்தியெனும் திடமான பல மரங்களைச் சுட்டெரித்து விழுங்குகின்றன.

என் தோட்டத்தை வாழ்க்கையின் பசுமை நிறைத்திருந்தது. இப்போது, உயிருணர்ச்சி பாதி இழந்த, ஒளிமங்கிய நடைப்பிணங்கள் இருண்ட சந்தேகங்களினூடே உலவுகின்றன. அவை உன்னை நோக்கி நான் எடுத்து வைக்கும் என் தயக்கமான காலடிகளை மிரள வைக்கின்றன.

தெய்வ நண்பா, என் உதவிக்கு வா, வழித்துணையாக வந்து என்னை இடைவிடாமல் முன்னோக்கி விரைவாக வழிநடத்து.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
165 The fire of my ambition and all my rainbow-dreams are for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

ஞாயிறு, 8 நவம்பர், 2020

42. நான் "வீடு" திரும்ப வேண்டுகிறேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் "வீடு" திரும்ப உரிமையுடன் வேண்டுகிறேன்

தடைகளே, உஷார்! என் பாதையை விட்டு அகலுங்கள்! நான் "வீடு" நோக்கிச் செல்கிறேன். 

காலத்தின் நீள் பாதையில், நான் தவறெனும் குழிகளில் பன்முறை விழுந்து, விழும்போதெல்லாம் உன் மறைவான கைகளால் தூக்கிவிடப்பட்டு, நான் என் நடையைத் தொடர்ந்துள்ளேன்.

உன் வீடு நோக்கி பயணிக்கும் என் வழியில் விரக்திதரும் இருள், முள்வேலியிடும் பழக்கங்கள், கல்பாறைநிகர் சோம்பல், மலைபோல் உதாசீனம், கடலளவு அவநம்பிக்கை, புலன் அபாயங்கள் போன்றவை குறுக்கிட்டு இடைமறிக்கலாம்; ஆனால் கோடிக்கணக்கான ராஜ்யங்கள், எண்ணிலடங்கா வருடங்களுக்கு மைந்துற அளவில்லா உலக இன்பங்கள் பெறினும், அவைகள் நான் உன்னை விட்டுவிடுவதற்கு என்னை தூண்டாது.

ஏ மஹா சமுத்திரமே, எனது மனிதத் தேவைகளெனும் நதிகள் உன்னிடம் கலந்து நிறைவுறுகின்றன. பல்வேறு இடும்பைப் பாலைவனங்கள் வழியே சுற்றி ஓடிய என் ஆசைநதிகள் உன்னில் சங்கமமாகி லயிக்க வேண்டுகிறேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
42 I Demand to return Home
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

சனி, 7 நவம்பர், 2020

24. என் குருநாதர்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் குருநாதர்

என் வாழ்வின் ஒளியே - நீங்கள் என் ஆன்ம பாதையை ஞானசுடரால் ஒளிர்விக்க வந்துள்ளீர்கள். பலநூற்றாண்டுகளாகப் படிந்துகிடந்த இருள் உங்கள் ஒளிப்பிரகாசத்தின் அருளால் மறைந்து போயின. 

சிறுவயதில், நான் தெய்வத்தாய்க்காக ஏங்கி அழுததின் பயன் அவள் என் குருவாய் - சுவாமி யுக்தேஸ்வராய் [பரமஹம்ஸ  யோகானந்தராய்] - வடிவெடுத்து என்னை அணுகினாள். என் குருநாதரே, அச்சந்திப்பின் போது ஒரு ஒளிக்கீற்று உங்களிடமிருந்து வெளிப்பட்டு, பிறவிதோறும் கடவுளுக்காக ஏங்கிய என் தாபங்களை உருக்கி, ஆனந்தச்சுடராய்ப் பரிமளித்தது.  என் எல்லா கேள்விகளும் அந்த சுடரும் பொன்மய ஸ்பரிசத்தில் விடைபெற்றன. உங்கள் அருளால் நிலையான, நிரந்தர திருப்தி என்னில் குடிபுகுந்தது.

கடவுளின் குரலாய் ஒலிக்கும் என் குருதேவரே, உங்களைக் கண்டது என் ஆன்மதாபங்களின் பயனே. என் துன்பகர உறக்கம் ஒழிந்தது, நான் எல்லையில்லா ஆனந்தத்தில் விழிப்படைந்து விட்டேன்.

எல்லா தேவர்கள் என்மேல் குறைகாணிணும் பரவாயில்லை, உங்கள் மகிழ்ச்சி ஒன்றே எனக்குப் போதும், நான் உங்கள் திருப்தியெனும் கோட்டையில் பத்திரமாய் இருப்பேன். மாறாக, எல்லா தேவர்களும் என்னை அவர்கள் ஆசீர்வாத வரங்களினால் காக்கினும், உங்கள் அருளாசி எனக்கு கிட்டவில்லையெனில், நான் ஒரு அனாதையாய், உங்கள் ஆன்ம  அதிருப்தியெனும் பாழடைந்த இடுபாடுகளில் அலைந்து  உழல்வேன். ஏ குருநாதரே, நீங்கள் என்னை அடியில்லாத புதைகுழி இருளிலிருந்து மீட்டு சாந்தி சொர்க்கத்தில் புகுவித்தீர்கள்.

நம் உள்ளங்கள் வெகுகாலம் பொறுத்து சந்திக்கின்றன. அவை இப்போது எங்கும்நிறை பூரிப்பினால் நம்முள்ளே அதிர்கிறது. நாம் முன்னர் சந்தித்துள்ளோம், அதனால் தான் இங்கு சந்தித்திருக்கின்றோம்.

நாம் இருவரும் இணைந்து கடவுளின் தீரத்திற்கு பறந்து செல்வோம். அங்கு நம் குறுகிய விமானங்களை முழுதுமாய் சுவடு தெரியாமல் நொறுக்கி அழித்து, நம் எல்லையற்ற வாழ்வினில் கலந்து மறைவோம். 

அமைதியான கடவுளின் பேசும் குரலாயுள்ள உங்களை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். முக்திக் கோயிலின் தெய்வ வாசலாய் இருக்கும் உங்களை என்றும் தலை வணங்குகிறேன். உங்களையும், உங்கள் குருநாதர் - யோகா அவதாரமாய் தோன்றிய லாஹிரி மஹாசாயரையும் நான் மறவாமல் தலைவணங்குகின்றேன்; என் பக்தி மலர்களை நம் மாபெரும் குருவான மஹாவதார் பாபாஜி பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
24 My Guru
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

வெள்ளி, 6 நவம்பர், 2020

192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எனக்காக நான் செலவிடுவதைப்  போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

எனக்கு தூய நலத்தைக்  கொடு, ஆனால் என் உடன்பிறந்தவர்களுக்கு அதிக நலத்தைக் கொடு. அதனால், நான் என் விரிவுபெற்ற உள்ளத்தினில் என் மேம்பட்ட நலத்தினால் மகிழ்வேன்.

எனக்கு ஆற்றலைக் கொடு, ஆனால் என் நேசர்களுக்கு அதனை விட அதிகமாய் அள்ளிக் கொடு. அதனால், நான் எல்லா மனங்களின் சக்தியையும்  ஒருங்கிணைக்கப்பட்ட என் மனத்தினால்  உபயோகிப்பேன்.

எனக்கு ஞானத்தைக் கொடு, அதன் மூலம் என் அன்பர்களை நான் மேன்மையான ஞானியர்களாக்குவேன். அதனால், எல்லையில்லாமல் அகன்று இணைந்த என் சகோதர உள்ளங்களில் விரியும் ஞானஒளிக்கதிர்களை நான் உணர்வேன்.

நான் அனைவருடைய விழிகளினால் காணவும், அனைவருடைய கைகளின் மூலம் செயல்புரியவும், அனைவருடைய இதயத்துடிப்பை உணரவும் எனக்கு கற்றுக் கொடு.

நான் எவ்விதம் எனக்கு செய்துகொள்கிறேனோ, அவ்விதமே நான் அனைவருக்காகவும் நெஞ்சுணர, செயலாற்ற, கடினமாய் உழைக்க, ஊதியம்பெற, குறிப்பாக, செலவிட எனக்கு கற்றுக் கொடு.

எனக்கு ஆரோக்கியம் வேண்டும், எனக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வதற்காக. நான் திறனாளியாக வேண்டும், புவியின் வாசலிலிருந்து திறனின்மையை விரட்டுவதற்காக. எனக்கு ஞானத்தின் சுதந்திரம் வேண்டும், அதனால் நான் என் உரிமையை அனைவரின் ஆன்ம விடுதலையுடன் கூடிய பூரண சுதந்திரத்தில் மட்டுமே மகிழ்ந்து அனுபவிக்க!   

Translation: Phd Siva

Original:
192 Teach me to spend for God's work as I spend for myself
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வியாழன், 5 நவம்பர், 2020

160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

பரப்ரம்மமே! எங்கள் எல்லோருக்கும் தந்தையே! என் மூளையைத் தகிக்கும், நரம்புகளைப் புடைக்கும், ரத்தத்தை விஷமாக்கும் கோபம் என்னும் தீய நோய் என்னை அணுகாமல் காப்பாயாக.

என்னைச் சினம் தீண்டும் போதெல்லாம், மனக்கண்ணால் என்னை ஆராய்ந்து பார்க்கும் கண்ணாடியை என் முன் காட்டு. அஷ்டகோணலாய், அசிங்கமாய் என்னாலேயே சகிக்க முடியாத சினம் தாக்கிய மூஞ்சியை நான் பிறரிடம் காட்டும்படி செய்து விடாதே!

என்னையும், பிறரையும் துயர்ப்பட வைக்கும் கோபத்தைக் கரைக்க எனக்குக் கற்பி. எனக்கும் பிறருக்கும் இடையிலுள்ள பரஸ்பர அன்பினை என் சுயவிரக்தியால் மாசு படுத்தாமல் இருக்க அருள்புரி!

மேன்மேலும் கோபம் கொண்டு என் கோபத்தை வளர்க்காதிருக்க ஆசிர்வதி. என் சினத் தீயினால் பொசுங்கிய பிறர் நெஞ்சங்களில், சுயமரியாதை மருந்து கொடுத்து, கருணைக்களிம்பு தடவி நான் அவர்களைக் குணப்படுத்த எனக்கு வரம் அருள்!

துன்புறுத்தும் கோபப்புயலால் என் அன்புப்பொய்கை எப்போதும் சஞ்சலமடையாதிருக்க ஆணையிடு!
 
மிக மோசமான என் பகைவனும் என் சகோதரனே என எனக்கு அறிவுறுத்து. என்னை நேசிப்பது போலவே அவனையும் நீ நேசிக்கின்றாய் என்னும் உண்மை எனக்கு எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வரமருள வேண்டும்!

Translation: Phd Siva, VR Ganesh Chander

Original:
160 Demand for the cure for the anger habit
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

புதன், 4 நவம்பர், 2020

67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

என் வழிபாட்டு ஊர்தி உனை நோக்கி நகர்கிறது. தயை பொழியும் எல்லா மனிதர்களின் விழிகளிலும், உன் கருணையொளி சிந்துவதைக் காண்கிறேன். இருண்ட ஜீவித மரங்களில், உன் பிரகாசம் மின்மினிப்பூச்சியாய் அவ்வப்போது மின்னுகிறது.

மனக்கலக்கமெனும் கடூரமான புழுதிப்புயலினூடே சிக்கி என் வழிபாட்டு ஊர்தி மெதுவாய் முன்னோக்கி ஊர்கிறது. மிக்க சிரமத்திற்குப் பின், கடைசியாக உன் அமைதியான உறுதிமொழிப் பாலைவனச்சோலையின் அறிகுறி தென்படுகிறது. அது என் தளர்ந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. 

உன் ஆனந்தச்சுனையில் என் வறண்ட நம்பிக்கை உதடுகளை அமிழ்த்தி அதிலூறும் ஆரா அமுதை அகங்குளிரச் சுவைத்துப் பருகுவேன்.  

Translation: Phd Siva

Original:
67 The Caravan of my Prayers is moving toward Thee
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 30 அக்டோபர், 2020

66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது.

ஆனால், தெய்வ சிற்பியே, 

என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு; 
எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;
ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு.

என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி.

மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.

Translation: Phd Siva

Original:
66 Burn Thou with frailties in the furnace of trials
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 5 ஜூன், 2020

213. பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

தெய்வீக அன்னையே !, நம் சோதனைக்காலங்களின் தாக்கங்கள் அனைத்தும் உன் அன்புக்காக மட்டுமே அழட்டும். நாங்கள் சுமக்கும்  சோதனைகள் தரும் அழுகை,  உன்னை நோக்கிய, நிற்காத  அழைப்பாக இருக்குமாறு மாற்று.

தெய்வீக அன்னையே!, எங்கள்  வலியின் ஓலத்திற்கு, உன் ஆறுதலுட்டும் கீதத்தை இசைக்கக் கற்பி. எங்கள்  கர்வத்தை உன் தூய்மையாக்கும் ஜுவாலைகளைக் கொண்டுள்ள அடுப்பில் உருக்கி, அதனை பணிவு எனும்  ஆனிப்பொன்னாக உருமாற்று.

தெய்வீக அன்னையே, அறியாமை எனும்  குறும்புச் சிறுவர்கள் கும்மாளம் போடும் எங்கள் சுயநலம் எனும் குக்கிராமத்தை நொறுக்கி, உன் சர்வவியாபகம் எனும்  கோவிலை, பக்தி, மரியாதை, ஆன்மீக அன்பு ஆகியவைகளை ஆதரிக்கும்  பக்தர்கள் உனக்குச் சரணாலயம் எழுப்பி இதயராக கீதம் பாடுவதற்காகக் கட்டுவாயாக.

அந்தப் பொற்கோவிலில், நிற்காத இதயகானத்தால் என்றும் மணக்கும் சுகந்த தூபத்தை அவர்கள் ஏற்றுவார்கள்.

எங்கள் பக்தியார்வத்தில் தினமும் மலரும், என்றும் மணக்கும் மலர்களை உன் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

எங்கள் ஒருங்கிணைந்த இதயபீடத்தில் உன் சர்வவியாபகத்தை  நிலைநாட்டு.

எங்கள் ஆத்மாவின் அன்புக்குரிய ஒரே வஸ்துவாக நீ இரு.

எங்கள் லௌகீகத்தை, உன் அநந்த ஜ்வாலையால் சுட்டெரி
பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள், நிதானமிழப்பு, அறியாமை அகியவற்றை எரி.

எங்கள் மனதை உன் நினைவுகளால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் இதயத்தை உன் அன்பால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் ஆன்மாவை உன்  ஆநந்தத்தால் ஜ்வலிக்கச் செய்!

Translation: V.R. Ganesh Chander

Original:
213 With The Torch of our Devotion, blaze our dark indifference
Whispers from Eternity 1929

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Thou dost Ever Behold Me - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou dost Ever Behold Me

கண்ணிமைக்காமல் காக்கும் ஸர்வ ரக்ஷகனே,

உன் விழிகள் காலம் தவறாத பகலவனாகவும், வளர்ந்து தேயும் நிலவாகவும் என்னைத் தொடர்ந்து நோக்குகின்றன.

பரந்து விரிந்த உன் பார்வை விதம்விதமான துவாரங்கள் வழியும், இரவில் மின்னும் விண்மீன்கள் மூலமும், எங்கு சென்றாலும் என்னை விடாமல் பார்த்துக் கொள்கின்றது.

அவ்வப்போது வீசும் தென்றலாய் நீ என்னைத் தழுவிப் பேணுகிறாய்.

உன் மேலும், உன் குழந்தைகள் மேலும் நான் கொண்ட பிரேம எண்ணங்களில், நீ உன் அருள்மழையை நிசப்தமாய்ப் பொழிந்து என்னைப் போஷிக்கின்றாய். 

 #PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda