திங்கள், 18 அக்டோபர், 2021

80. சுயமாக உருவாக்கிய தீய பழக்கங்களிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சுயமாக உருவாக்கிய தீய பழக்கங்களிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட உரிமையுடன்-வேண்டுதல்.

பேருணர்வே, ஆன்மாவின் நிரந்தர சுகத்திற்கும், தொடுவுணர்வு, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய புலன்களின் அநித்திய இன்பத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பகுத்து அறிய எனக்குக்கற்பி. என் இச்சா சக்தியை வலிமைப்படுத்து; தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க எனக்குக்கற்பி; நல்லோர் நட்பினாலும் தியானத்தினாலும் அமைந்த நற்பழக்கங்களின் வழிநடக்க எனக்குக்கற்பி; அனைத்திற்கும் உச்சமாக, ஞானத்தின் வழிகாட்டுதலின்படி நடக்க எனக்குக்கற்பி; விவேகத்துடன் கூடிய சரியான நிர்ணயத்தினால், என்னைத் தீவினைகளிலிருந்து விலகியிருக்க எனக்குக்கற்பி; இறுகிப்போன கெட்ட பழக்கங்களினால் பலவந்தப்படுத்தப்படாமல், என் சுதந்திரமான இச்சாசக்தியினால் வழிகாட்டப்பட்டு நல்லவற்றை விரும்பி மேற்கொள்ளுமாறு எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
80 Demand to be freed from self-created evil habits and temptations.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 16 அக்டோபர், 2021

78. பொருட்செல்வத்திற்காக உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பொருட்செல்வத்திற்காக உரிமையுடன் வேண்டுதல்.

நீ என் தந்தை, நான் உன் குழந்தை. நீ பேருணர்வு, நான் உன் பிரதிபிம்பம். நீ அகிலப் பிரபஞ்சத்திற்கும் தந்தை, அதன் பூரண உரிமையாளன். நான் நல்லவனோ அல்லவோ, ஆயினும் நான் உன் குழந்தை, ஆதலால், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது; ஆனால், நான் பொறுப்பற்று ஊதாரியாய் உன் பிரபஞ்ச செழுமையெனும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றிக் கொண்டுள்ளேன். முதலில், என் உணர்வினை உன் பேருணர்வுடன் ஐக்கியப்படுத்த நான் கற்க நீ உதவு. என் பயணக்கப்பல் உடலெனும் சின்னஞ்சிறு தீவினில் இடித்து அதனில் அகப்பட்டுக் கொண்ட என் உணர்வினை மீளச்செய். என் உணர்வினை விரிவுபடுத்தி, அது உன் பிரதிபிம்பமாக உள்ளதை நான் மீண்டும் உணரச்செய். உன் அருளால், என்று, உன்னைப் போலவே, நானும் எல்லா இடங்களிலும் மேவியிருப்பதாக உணர்வேனோ, அன்று நீ அனைத்தையும் உடையவராக இருப்பது போல், நானும் எல்லாப் பொருள்களையும் ஆளும் உரிமை கொள்வேன்.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
78 Demand for prosperity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 13 அக்டோபர், 2021

74. ஆன்ம-அறியாமையை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்குச் சேனாதிபதியாகத் தலைமைவகி!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்ம-அறியாமையை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்குச்  சேனாதிபதியாகத் தலைமைவகி!

உன் நாமத்திற்காக நான் ரத்தம் சிந்தியுள்ளேன், உன் நாமத்தின் பொருட்டு நான் எப்போதும் ரத்தம் சிந்த தயாராகவுள்ளேன். அங்கங்கள் சிதிலமாக்கப்பட்டு, பழுதடைந்த உடலுடன், தன்மானம் அவமதிக்கப்பட்டு, அவதூறெனும் முட்கீரிடத்தைத் தலையில் சுமந்தும் - நான் ஒரு பெரும் போர்வீரனைப் போல, எவ்வளவு திடமான சோதனைகள் வந்து என்னை வாட்டினாலும், தளர்ந்து பின்வாங்காமல் போரிடுவேன்.

என்னை ஏளனப்படுத்திக் கொடுமைப்படுத்த வரும் சிப்பாய்களை, சாந்தமெனும் வாளால் நான் தண்டிப்பேன். உன் கட்டுப்பாட்டுடன் கூடிய அன்பின் என் படைகள், உன் நாமத்தை போர்க்கொம்பினால் முழக்கிக் கொண்டே, இருண்ட உள்ளங்களின் ராஜ்ஜியத்தை வென்று ஆக்கிரமிக்க வீறுநடையுடன் அணிவகுக்கின்றன.

உதவ உயர்த்திய என் கரங்கள் அடிவாங்கலாம், அன்பிற்குப் பதிலாய் ஏளன தண்டனையின் காயங்களைப் பெறலாம், ஆனால் உன் நாமத்தின் புகழ்பரப்பத் துடிக்கும் உன் போர்வீரனின் ஏக்கத்தை நீ அறிவாய் என்பதை உணரும்போது நான் திருப்தியடைகின்றேன். நான் எனக்கு வரும் சோதனைகளை, வடுக்களாக அன்றி, வீரத்தினாலும், ஊக்கத்தினாலுமான ரோஜாமலர்களாய் அணிந்து, உன் பொன்மய ஜோதியின் எண்ணத்தின் துணைகொண்டு, ஆன்ம-அறியாமையின் இருளை வெல்ல அதனுடன் போரிடுவேன்.

என்னவனே! ஆன்ம-அறியாமையின் படைகளை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்கு சேனாதிபதியாக தலைமைவகி! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
74 Be Thou my General in my invasion of Ignorance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 5 அக்டோபர், 2021

73. என் கவனத் திசைமுள்ளை எப்போதும் உன்னையே நோக்கித் திருப்பு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் கவனத் திசைமுள்ளை எப்போதும் உன்னையே நோக்கித் திருப்பு.

இரும்புப்பறவைகளுடன் ஆகாயத்தில் பறந்தாலும், இயந்திரக் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களால் சுற்றிவந்தாலும், ரப்பர் சக்கரங்களால் உருண்டோடினாலும், உள்ளத்தைப் பிளப்பதான சத்தங்கள் செய்பனவற்றின் தாயகமான ஒன்றில் பயணித்தாலும், என் கவனத் திசைமுள், உன்னால் காந்தமயமாக்கப்பட்டு, எப்போதும் தவறாமல் உன்னையே நோக்கி திரும்பும்.

துரதிருஷ்டமெனும் காற்றினால் அடித்து வீசப்பட்டாலும், துன்பமெனும் மழையினால் நனைத்து முழுக்காட்டப்பட்டாலும், சிக்கவைக்கும் செயல்களெனும் சேற்றில் உழன்றாலும், என் வாழ்க்கைப் பயணம் இருள்-மண்டிய பாதைகளில் அங்குமிங்குமென அலைக்கழிக்கப்பட்டாலும், என் மனம் எப்போதும் உன்னையே நோக்கித் திரும்பிக் கொண்டேயிருக்கும்.

என் மனப்படகு, ஆசைகளின் சூறாவளியினால் முடுக்கமடைந்து, திருப்தியடையாத அவாவெனும் கற்பாறைகள் மிகுந்த பகுதிக்கு நகர்ந்து சென்று கொண்டிருந்தது. 

எங்கள் ஞானவானில் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரமே, உன் ஜோதியின் மின்னும் ஒளி என்னை பூரணதிருப்தியெனும் உன் நிரந்தரமான கரைக்கு திருப்பி அழைத்து வந்தது.

என் அன்பின் புறாவானது, விதியின் சுழல்காற்றில் மாட்டிக் கொண்டு தத்தளித்தாலும், விக்னங்களின் பீரங்கிக் குண்டுகள் சுற்றி வீசப்படும் வழியே சென்றாலும், அல்லது அச்சமுறுத்தும் மோகங்களின் அடர்ந்த புகைமண்டலங்கள் வழியே பறந்து சென்றாலும், அது எப்போதும் உன்னையே நோக்கி கவரப்பட வேண்டும். 
    
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
73 Keep the needle of my attention ever pointing toward Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 2 அக்டோபர், 2021

72. இறைச்சிற்பியே, என் வாழ்வினைச் செதுக்கு!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இறைச்சிற்பியே, என் வாழ்வினைச் செதுக்கு!

நான் செய்யும் ஒவ்வொரு சப்தமும், உன் குரலின் அதிர்வலைகளுடன் வெளிப்படட்டும். நான் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், உன் சாந்நித்தியத்தின் உணர்வால் நிரம்பட்டும். 

நான் உணரும் ஒவ்வொரு உணர்வும், உன் அன்பினால் ஒளிவீசட்டும். என் இச்சாசக்தியினால் செய்யும் ஒவ்வொரு செயலும், உன் தெய்வீக உயிர்ச்சக்தியினால் உள்ளார்ந்து பொதியட்டும். என் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வெளிப்பாடும், ஒவ்வொரு லட்சியமும் உன்னால் அலங்கரிக்கப்படட்டும்.

இறைச்சிற்பியே, என் வாழ்வினை உன் இஷ்டம்போல் செதுக்கு!   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
72 O Divine Sculptor, chisel my life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

71. என்னை உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை.

அன்பின் பேரூற்றே, எங்கள் இதயங்களையும், எங்களை நேசிப்பவர்களின் மேல் செலுத்தும் அன்பினையும், உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை. எங்கள் ஆசைகளெனும் நதிகளின் பெருந்தோற்றுவாயே, தாற்காலிகமான புலன்-சுகங்களெனும் மணல்களில் அங்குமிங்குமாய் ஓடி எங்கள் ஆசை-நதிகளை வற்றிப் போகாமல் இருக்குமாறு எங்களுக்குக் கற்பி.

எங்கள் ஏக்க நதிகளைப் பணிவு, சுயநல-தியாகம், மற்றும் பிறர்மேல் அக்கறை எனும் தாழ்வான நிலங்கள் வழியாகப் பாய்ந்து செலுத்துமாறு உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம்; அன்பின் பேரூற்றே, உன்னால் எங்கள் நீரோட்டம் மேலும் உறுதியடைந்து, இறுதியில், நிறைவெனும் கடலான உன்னில் சங்கமிக்குமாறு செய்ய உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம்.

எங்கள் கருணை, பாசம், அன்பெனும் நீரோடைகள் யாவும் அலைக்கழிக்கும் சுயநலத்தின் வறண்டபூமியில் ஓடி வற்றாமலிருக்க எங்களுக்கு அருள்புரி.

உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பு நதிகள் மெல்லியதாக, தனிமையில், பிரிந்து-ஓடியவையாவும், இறுதியில் உன் மகத்தான சாந்நித்தியத்தில் வந்து லயிக்கட்டும்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
71 Flood me with Thine Omnipresent Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 1 அக்டோபர், 2021

70. என்னை முன்னேற்றத்தின் கருடனாக ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை முன்னேற்றத்தின் கருடனாக ஆக்கு.

குறுகிய மனப்பான்மை மற்றும் பிடிவாதங்களாலான சிறு சந்துகளில் அகப்படாமல், அவைகளுக்கு வெகு மேலாகப் பறக்கும் முன்னேற்றத்தின் கருடனாக என்னை ஆக்கு. மேன்மேலும் மேன்மையடைவதற்கு என்னைக்  கூவியழை, நான் பூலோக அதிர்வலை மூட்டங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பறந்து செல்வேன்.

என் ஆன்மாவின் கூர்மையான கவ்வு நகங்களால், மனிதர்களைப் பதம்பார்க்கும் சோகப்பறவைகள் எல்லாவற்றையும் பிடித்துக் கிழித்தெறிவேன். மனித மன-வானில் சாந்தப் புறாக்களைத் தாக்கும் ஆன்ம-அறியாமைக் கழுகுகள் அனைத்தையும் அதிலிருந்து விரட்டி வெளியேற்றுவேன்.

உன் பார்வைபடும் நுண்ணிய பிரதேசங்களில், தர்ம-வாழ்வெனும் நடுநிலை மேவிய சிறகுகளையடித்துப் பறந்து செல்ல விரும்புகிறேன். சோக-அதிர்வுகளாலான சுழல்-சூறாவளிகளுக்கு மேல், நான் வெகு உயரமாகப் பறந்து, நீ உறைகின்ற கற்பனைக்கு எட்டாத உயரங்களுக்கு மேலெழும்ப விரும்புகிறேன்.

என்னை உனது பணிபுரியும் முன்னேற்றத்தின் கருடனாக ஆக்கு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
70 Make me the Eagle of Progress.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 27 செப்டம்பர், 2021

52. எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

எங்கள் இதயமொட்டுக்களைச் சிறைப்படுத்தும் இதழ்களைத் திற; எங்கள் சிறைப்பட்ட அன்பின் சுகந்தமணம் உன்னைச் சந்திக்க விரைந்து பரவட்டும். பிரபஞ்ச நோக்கெனும் காற்றினால், எங்கள் சுகந்தமணம் உன் எல்லையற்ற கோயிலுக்குத் தவழ்ந்து செல்லட்டும். 

எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, செம்மையான மேகங்களாலும், அழகு-மிளிரும் மனிதக் கனவுகளாலுமான உன் சாளரக் கதவுகளையெல்லாம் திறந்துவிடு. எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

இயற்கையின் அனைத்து சாளரங்களுக்கும் பின்னே மறைந்துநிற்கும் உன் கட்புலனாகாப் பாதத்தை வருடுமாறு எங்கள் சுகந்தமணம் வீசவேண்டுமென்பதே எங்கள் ஆசை.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
52 O King of all our ambitions, open the doors of noble aspirations in the mansion of our souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

51. லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.

மாற்றமெனும் மீனவன் எங்கள்மேல் பிரபஞ்சமாயையெனும் வலையை வீசியுள்ளான். மனிதக் காப்பீட்டின் பொய்யான வாக்குறுதிகளெனும் நீரில், எங்களை மரணவலை தொடர்ந்து நெருங்குவதையறியாமல், நாங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாயவலைப் பிடிப்பிலும், பல மாட்டிக்கொள்கின்றன - ஒருசிலதே தப்புகின்றன. நான் ஆழ்கடல் தளத்தில் அமைதியான யோகசமாதியில் ஆழ்ந்து மூழ்கி, காலவலையிலிருந்து தப்பிவிட்டேன்.

அளவற்ற கருணைக்கடலே, என்னையும் என் சகோதரர்களையும் இந்த லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
51 Save us from the net of matter attachment.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

40. நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?

இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன் வருகையை முன்னரே அறிவிக்கும் தூதுவனாக என் உள்ளமைதியிலிருந்து இன்பக் கிரணங்கள் பரந்து விரிகின்றன.

பல இரவுகளில் மினுமினுக்கும் வஸ்திரங்களில், பல விடியற்காலைகளில் பளபளக்கும் மரகத முகத்திரைகளையும், பனித்திவலை முத்துக்களையும் அணிந்துகொண்டு, பல சந்திக்காலங்களில் மாட்டின் மணியோசைகளுடன் இயைந்து நாட்டியமாடி, பல வருடங்கள் வசந்தகால மலர்களுடனும், வேனிற்கால காய்கனிகளுடனும், பனிக்கால வைரத்தைப் போன்ற ஆலங்குச்சிகளாலும், மடமடவெனப் பெய்யும் மழைகளாலான பளீரென்று மின்னும் வஸ்திரங்களாலும் அலங்கரிப்பட்டு, உன்னை ஆவலுடன் எதிர்பார்த்து என் ஸ்ம்ருதித் தோட்டத்தில் காத்திருந்தேன். 

உன் பக்தர்களிடமிருந்து நாட்களைக் கால ஓநாய் திருடிச் சென்றுவிடுவதால், இவையெல்லாம் இப்போது இல்லை. நான் இப்போது தனியாக - தன்னந்தனியாக -  உள்ளேன்; கணப்பொழுதில் மறையும் விழாக்கோலங்களின் மேலிருந்த ஆசைகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும், நான் உன் பாதையைக் கண்டுகொள்ள எப்போதும் சுழலும் மணிநேரங்களுடன் பயணித்துத் தேடிக்கொண்டேயிருப்பேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும் எனக்கு கவலையில்லை, ஏனெனில், இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன்னை நிரந்தரத்தின் எல்லையில் எப்போதாவது பிடித்துவிடுவேன் என்பதை நான் அறிவதனால்!    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
40 May I seize Thee at Eternity's end?
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!