புதன், 13 ஏப்ரல், 2011

காந்தி, மகாத்மா - "பெரிய ஆத்மா"

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Gandhi, the Mahatma - "great soul"

காந்தி! மக்கள் உன்னை வெகு பொருத்தமாக மகாத்மா, "பெரிய ஆத்மா" என்று அழைக்கின்றனர். நீ இருந்தமையால் பல சிறைச்சாலைகள் கோயில்களாயின. உன் குரல், அடக்குமுறைக்கு உட்பட்டு இருந்த போதிலும், மேன்மேலும் அதிக சக்தியுடன் பெருகி, உலகெங்கிலும் ஒலித்தது. சத்தியாகிரகத்தின் ("சத்தியத்தில் உறுதி") மூலம் அடைந்த உன் வெற்றி முழக்கம் மனித இன உள்ளத்தைத் தொட்டது.


பீரங்கியின் மீதல்லாது, கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து, வெளிநாட்டவரின் அரசாட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு பரந்த தேசத்திற்கு வெறுப்பின்றி, ரத்தக் களரின்றி விடுதலை வாங்கிக் கொடுத்து சரித்திரம் காணாத, நிகரில்லாத ஒரு சாதனையைப் படைத்தாய்.

நோன்பினால் நொந்த உன் தேகத்தை ஒரு மதிகலங்கிய மூடனின் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, நீ நிலத்தில் சரியும் போது உன் கைகள் சிரமமின்றி மேலெழும்பி அவனை மன்னித்தருள சைகை செய்தன. உன் வாழ்வின் எல்லா நாட்களிலும் நீ கள்ளங் கபடமற்றக் கலைஞனாய்ச் செயல் புரிந்தாய்; ஆனால் மரணத் தருவயிலோ, நீ உன்னதக் கலைஞனாய்க் காட்சியளித்தாய். உன் தன்னலமற்ற வாழ்வின் அனைத்துத் தியாகங்களே தான் அருளின் சிகரமான அந்தக் கடைசிச் சைகைக்குக் காரணம்.

மனிதனை நல்வழிப்படுத்தக் கடவுள் எப்படித் தனது அற்புத மாயா சக்தியைப் பிரயோகிக்காமல் அன்பினை உபயோகிக்கின்றாரோ, அப்படியே நீயும் முரட்டுச் சக்தியைத் தவிர்த்து சாந்தமான குணங் கொண்ட அறவழியை மேற்கொண்டாய்.

சத்தியத்தின் வடிவான எளிமையான துறவியே! வருங்கால போர்வீரர்கள் உன் உபதேசத்தை உன்னிப்பாகப் படித்து, "மனிதனின் இன்றியமையாத பகைவர்கள் ஒரே தந்தையான கடவுளிடம் தோன்றிய அவனின் இதர சகோதரர்கள் அன்று, அழியத்தகு அறியாமையில் பிறந்த அகங்கார எதிரிகளே அவனின் பகைவர்கள்,"என்ற உட்கருத்தை உணரட்டும்.

குறுகிய சுயதேச நலம், பேராசை, வஞ்சனை, போருக்கான ஆயுத்தம் போன்றவைகளால் தற்சமயம் தடுமாறியிருக்கும் தேசங்கள் உன் தீர்க்க தரிசனமான வார்த்தைகளை திறந்த நெஞ்சத்துடன் உட்கொள்ளட்டும்: "அஹிம்சை மனித சமுதாயத்தில் வேரூன்றியுள்ளது. அது மென்மேலும் ஓங்கி வளரும். அது உலக அமைதிக்கு இட்டுச் செல்லும் அடிகோலி (harbinger)."

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

கருத்துகள் இல்லை: