புதன், 17 பிப்ரவரி, 2021

105. பிரபஞ்ச நாதத்தில் என் விரிவடைந்த உணர்வை உணரவைக்குமாறு உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச நாதத்தில் என் விரிவடைந்த உணர்வை உணரவைக்குமாறு உரிமையுடன் வேண்டுதல்.

இறைத்தந்தையே, பகுத்தறிவின் சுடராக, ஞானத்தின் கனலாக, இயைபான ஒற்றுமையின் தென்றலாக நீ எனக்கு விளங்கவேண்டும்.

அணுக்களும், எலெக்ட்ரான்களுமிடும் ரீங்கார கானத்தின் மூலமாகவும், அவற்றின் அதிர்வுகள் இசைக்கும் இசைகளின் மூலமாகவும் நீ வந்து விளங்கவேண்டும். 

எல்லா ஸ்வரங்களையும் ஊற்றெடுக்கச் செய்ததும், ராகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவ கானத்தைப் பாடப் பணித்ததுமான உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க எனக்குக் கற்பி. 

பிரபஞ்சத்தில் பல்வகைப் பாடல்களின் ஓசைகளுக்கடியில் அமிழ்ந்து தாழாத உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க நான் விரும்புகின்றேன். 

தியான மந்திரக் கோல் எல்லா சப்தங்களையும் தொட்டு, பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் அதிர பவனி வரும் பிரபஞ்சத்தின் ஒருமை சப்தமான ஓம் எனும் பிரணவத்தில் அவற்றை சங்கமிக்கின்றது. எல்லா சப்தங்களின் பிரபஞ்ச கீதமான ஓம், ஓம் எனும் பிரணவநாதமாக எனக்கு விளங்கு. என் எல்லா உடற்திசுக்களும், எல்லா நாடிநரம்புகளும் இப்பொழுது உன் ஓம் எனும் பிரபஞ்ச கீதத்தைப் பாடட்டும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
105 Demand for realizing the expansion of consciousness in the Cosmic Vibratory Sound.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: