வியாழன், 11 பிப்ரவரி, 2021

57. என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி.

வாழ்க்கைச் சோதனைகளால் ஏற்பட்ட ஒவ்வொரு வடுவையும், உன் தர்மமான நியதியின் புனிதக் கரங்களால் எனக்கு வழங்கப்பட்ட தண்டனைப் பரிசுப் பதக்கங்களாக அணிந்துகொள்வேன். பிறரின் செய்கையால் உண்டான வருத்தத்தினால் சிந்தும் என் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் என் மனதில் மறைவாகப் படிந்திருக்கும் மாசினைக் கழுவி நீக்கட்டும்.

கூரிய அனுபவக் கோடாலியின் ஒவ்வொரு வீச்சும் என் வாழ்க்கை மண்ணை மென்மேலும் ஆழமாகத் தோண்டட்டும். சுகஜீவித மண்ணில் சூழ்நிலையால் தோண்டப்படும் ஒவ்வொரு வடுப்படுத்தும் அடியும், என்னை என்னுள்ளே பொங்கும் உன் சாந்திச் சுரப்பியினருகே கொண்டுசெல்லட்டும். வாழ்வின் ஒவ்வொரு காயமும் உன் அன்பிற்காக உரக்கக் கூவவைக்கட்டும். எல்லாச் சோதனைகளும் கசப்பான அனுபவத்திற்கு மாற்றுமருந்தாய் ஆகி, என் ஆன்மாவிற்குக் குணமுண்டாக்கட்டும். பிறரின் அருவருப்பான கருணையின்மை, நான் லாவண்யமான காருண்யத்தை மேன்மேலும் பொழிய என்னை உத்வேகமூட்டட்டும். குருடாக்கும் இருள், என்னைத் தூண்டிவிட்டு உன் ஒளியை நோக்கி விரைய வைக்கட்டும். கடுஞ்சொற்கள் என்னைத் திட்டித் தாளித்து, எப்பொழுதும் நான் இனிய சொற்களை மட்டுமே உபயோகிக்கச் செய்யட்டும். என்மீது எறியப்பட்ட தீவினைக் கற்களால் ஏற்பட்ட ஒவ்வொரு காயச்சிராய்ப்பும், நல்லவையின்மேல் கொண்ட என் உறுதியையும், நல்லெண்ணத்தையும் தீவிரப்படுத்தட்டும்.

மல்லிகைப்பூக் கொடிப்பந்தலின் வேரை வெட்டும் கோடாலியின் கைகளை, அது புறக்கணிக்காமல் எப்படி அக்கைகளின்மேல் மலர்ச்சொரியுமோ, அப்படி என்னை வஞ்சனையால் அறுப்பவர்களுக்கு நான் என் மன்னிக்கும் பொறுமையெனும் மலர்ப்பொழிவைத் தவறாமல் வழங்கவும், அவர்களுக்கு உதவவும், நீ எனக்குக் கற்றுக்கொடு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
57 Teach me to use every dig of criticism to bring myself nearer to the Fountain of Goodness in me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: