சனி, 27 பிப்ரவரி, 2021

215. அனைத்து இதயங்களினிலிருந்தும் தொலைந்து போன என் இசை ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனைத்து இதயங்களினிலிருந்தும் தொலைந்து போன என் இசை ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.

என் கனவுகளின் ஒளிமயங்கிய சோலையில், இனிமையானதும் சுவாரஸ்யமானதுமான என் வாழ்வின் இசையை நான் சன்னமாகக் கேட்டேன். ஆவலுடன் அதை நான் கேட்க, அந்த இசை மிக மென்மையான இனிமையுடன் ஒலித்துக்கொண்டே, மென்மேலும் மெலிவுற்று இறுதியில், நான் அதை என் ஸ்தூலக் காதுகளினால் கேட்கமுடியாதவாறு ஆகிவிட்டது.

இந்தப் புதிய இசையின் தெய்வீக கீதத்தைப் போல் வேறு ஏதேனும் இசையைக் கேட்டுள்ளோமா என நினைத்தவாறு, பொறுமையுடன் நான் காத்திருந்தேன். அப்படி ஒன்றும் சிக்கவில்லை; கனவில் வந்து செல்லும் மங்கலான ஆவி போல் வந்து சென்ற அந்த இசையினைப் போன்றதொரு இசையை என் வளமான ஞாபகப் பெட்டகத்துள் நான் முழுவதுமாகத் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. 

நான் அந்த இசையை உண்மையிலேயே கேட்டுள்ளேனா? அல்லது நான் அதன் ஒத்திசையை கனவுகண்டேனா?  அது என் எல்லாக் கனவுகளின், எல்லா லட்சியங்களின் அதியற்புத நிஜமான இசையா? அல்லது கலைந்து போகும் கனவில் ஒத்திசைத்த மெல்லோசையா?

நான் காத்திருந்தேன். என்னுள்ளே புகுந்து அடியாழத்திற்கு ஆழ்ந்தேன். எல்லா புலன்களின் துறைகளின்பின்னும் சென்று பித்தனாய் அலைந்து, பேயாய்ப் பறந்து, நான் என் கனவுகளில் கேட்டு, பின் தொலைந்த அந்த இசையை மீண்டும் ஒருமுறை கேட்கத் தவித்தேன்.

கடைசியில், நான் என் கனவுகளின் ஒளியலைகளைக் கண்டேன்; அவற்றில் என் பூலோக ஜென்மங்களிலுற்ற எல்லா ஆசைகளின் விருப்ப அலைகளும் நடனமாடுவதையும் கண்டேன். நான் பல தேவலோக இன்னிசைகளை செவிமடுத்துக் கேட்டேன்; ஆனால் அவை முன்னம் நான் ஒருமுறை கேட்டு, பின் தொலைந்த அந்த இசையைப் போன்றில்லை. 

திடீரென்று, நான் கனாக்கண்டு மறுபடியும் என் ஆன்மாவின் அந்த தொலைந்த இசையைக் கேட்டது போல் எனக்குத் தோன்றியது.

நான் எல்லாக் கனவுகளையும் ஒரேகணத்தில் கண்டுற்றேன் -  குறிப்பிட்ட எந்த ஒரு இசைக்காகவும், அந்த இசை ஒலித்த ஒரு குறிப்பிட்ட கனவிற்காகவும் என் நாட்டம் செல்லவில்லை. ஆஹா, அத்தருணத்தில், தொலைந்து போன என் இசை, என் எல்லாக் கனவுகளிலும் கண்ட அனைத்து வாழும் இதயங்களினிலிருந்தும் ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.  

எந்த செவியும் கேட்காதது,
எந்த எண்ணத்தாலும் பிடிக்க முடியாதது,
எந்த அன்புணர்ச்சியும் உணராதது,
எந்த கனவின் கற்பனைக்கும் எட்டாதது, 
எந்த நாக்கும் விளக்காதது,
எவரால் கூற முடியும்,
அந்த என் ஆருயிர் இசையைப்பற்றி.
ஆனால் அனைவற்றையும் மறைத்திருக்கும் திரைகளுக்குப் பின்னே -
என் ஆன்மாவின் ஆருயிரான,
அந்த தொலைந்து-மீட்கப்பட்ட இசையை நான் உணர்ந்தேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
215 My lost music sprang from the heart of everything.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: