வியாழன், 29 ஏப்ரல், 2021

208. தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.

அழகிய பலவண்ணமான பக்திப் பூமாலைகளால் உன் சர்வவியாபகமான அன்பின் தாமரைப்பாதங்களைச் சுற்றி அலங்கரிக்கின்றேன். 

நான் உன் செயல்களின் நாட்டியமாடும் பாதத்தை நட்சத்திரங்களின் மின்மினுப்பில் கண்டுற்றேன். உன் ஒளியின் நடனத்தை நீலக்குவளை மலர்களிலும், ஊதாநிற மத்தாப்புப்பூக்களிலும் கண்டுற்றேன். உன் காலடிகளின் பிரதிபலிப்பு அலையலையாக விரவும் அரோரா ஒளிர்மேகங்களில் தெரிகின்றது. உன் அற்புத நடனத்தை ஜீவராசிகளின் வாழ்க்கைப் பரிணாமவளர்ச்சி அரங்கங்களில் கண்டுற்றேன். ஆனால், தெய்வத்தாயே, உன் ஆனந்தமுகத்தின் சாந்தமான கருணை வெளித்தோற்றங்களின் மேகமூட்டங்களின் பின்னும், என் அலைபாயும் எண்ணங்களின் மாயத்திரைக்குப் பின்னும் எப்போதும் மறைந்தே இருக்கின்றது.

நான் வெகுகாலமாய் உன் முகத்தைத் தரிசிக்க காத்திருக்கின்றேன். என் பொறுமையின்மை லட்சக்கணக்கான தீநாக்குகளினால், உனக்காக ஏங்கும் என் ஏக்கத்தின் பெரும் சுடருடன் சுட்டெரித்துக் கொண்டுள்ளது. 

நான் வானத்தை எரித்தேன். நட்சத்திரங்களைப் பற்றவைத்தேன். கோளங்களுக்கு கட்டமைப்புதரும் அணுக்களை உருக்கினேன். என் உருகும் ஒளியில், உன்னைத் தேடும்போது, வான ஒளிவிளக்குகள் தங்கள் நிலை தடுமாறி, தலைக்குப்புற விழுந்தன. வான்வெளியின் நிழல்கள், மனோ நிழல்கள், அறியாமை நிழல்கள் எல்லாம் என் வாழ்வின் ஒளியின் ஆற்றல்மிக்க சிதறலால் விலகி ஒதுங்கின. 

என் பேராற்றலுடைய ஜோதி எல்லாவற்றையும் விழுங்கி, என் ஒளிரும் அன்பின் பலகரங்கள் உன்னை பிடித்துக் கட்டித்தழுவ யத்தனிக்கும்போது,  எல்லாப்புறங்களிலும் இருந்து என்னை நோக்கிப் பாழ்சூன்யம் நகைத்தது; அந்தோ, என் அன்பொளியின் இதயம் சுக்குநூறாய் உடைந்தது!

எல்லா வெட்டவெளியிலும் எனது ஒளியின் கிரணங்கள் நிரப்பும்வரை, என் ஒளி மினுமினுக்கும் விண்மீன்களாய் கண்ணீர்சிந்தியது. என் கதறும் சுடர் எல்லாப்புறங்களிலும் உன்னை நாடிக் கூவியழைத்தது,  உனது சர்வவியாபக வெளியில் எதிரொலித்த அதன் சத்தத்தில், உனது குரல் நிசப்தமாகச் சொல்லியது:

"எல்லாவற்றையும் ஒரே ஜோதியில் விழுங்கிய உன் அன்பின் ஜோதியானது நானே! நீ நீயாக ஆகிய என்னைத்தான் தேடியுள்ளாய், ஆனால் என்னை உன்னிடமிருந்துத் தொலைவில் இருத்தியிருந்தாய். உன்னை என்மூலம் கண்டுகொண்டபின், என்னை உன்னிடமிருந்து தள்ளியிருப்பதாக, உனது இதய எல்லைக்கு வெளியே இருப்பதாக எண்ணி இனி என்னை நாடாதே.  நீயே நான்; நானே நீ!"

பூமி தூள்தூளாகத் தெறித்து விண்வெளியில் எறியப்படினும், காலமெனும் திரையில் பல பிரபஞ்சத் திரைப்படங்கள் வந்து சென்றாலும், தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
208 O Divine Mother, I am Thine, for Thou art eternally mine.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 24 ஏப்ரல், 2021

218A. ஒரு பிரார்த்தனை (கடவுளின் பெரும் சோதனைக்குப்பின் வழங்கப்பட்டது).


ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒரு பிரார்த்தனை (கடவுளின் பெரும் சோதனைக்குப்பின் வழங்கப்பட்டது).

நோய்வாய்ப்படினும், சுகமாய் இருப்பினும், தோல்வியிலும், வெற்றிக்களிப்பிலும், வறுமையிலும், வளத்திலும், பெருநஷ்டத்திலும், பாதுகாப்பிலும், சாவிலும், வாழ்விலும், என் பரலோகத் தந்தையே, நான் உனக்கு என்றென்றும் விசுவாசத்துடன், பக்தியுடன், அன்புடன், விகாரமடையாமல், குறைப்படாமல், மாறுபடாமல் என்றென்றும் உறுதியாக நிற்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
218* - A prayer (Received after a great test of God).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

152. புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.

தெய்வகுருவே, என் ஆன்மாவின் நிரந்தர இன்பத்திற்கும், கடந்துபோகும் புலனின்பங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிய என்னைப் பழக்கு. என் கண்களை நன்கு திறந்திருக்கமாறு செய்; அதனால், புலன்கள்  களவாடிய ராஜவேஷம் பூண்டு, கானல்நீர் போன்று புனிதமான இன்பத்தோற்றத்தை நிஜம்போலப் பொய்யாகக்காட்டி, என் வாழ்க்கை மாளிகைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து என்னை ஏமாற்றத்துணிவதைத் தடுக்கமுடியும்.  

என் விவேகமற்ற, தடுமாறும் புலன்களை ஒழுக்கப்படுத்து, அதன்மூலம் அவைகளினால் ஏற்படும் சுகங்களை ஆன்மீகமயமாக்கி, பளபளவென மின்னும் புலன்படும் தோற்ற ஜாலத்தைக் கடந்து, எளிமையின் தூய வெண்ணிற அங்கிக்குப்பின்னே மறைந்திருக்கும் தெய்வீக சுகத்தை அவை  எப்போதும் நாடப் பழகட்டும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
152 Teach me not to be deceived by the senses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 22 ஏப்ரல், 2021

109. விழிப்புற்றுத் தயாரான நிலையில் வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

விழிப்புற்றுத் தயாரான நிலையில் வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, நீ என்னை விழிப்புறச் செய்தால், அப்புறம் மறுபடியும் எப்படித்தான் நான் உறங்கமுடியும்? ஒருக்கால் உறக்கம் என்னை  மயக்கி ஆட்கொண்டு விட்டால் , நீ மறுபடியும் என்னை விழிப்புறுத்துவாயா? வாழ்க்கையெனும் கனவுலோகத்தின் பயங்கரங்கள் இப்போது மறைந்துவிட்டன. என் சோகத்தை நீ ஆனந்தக்கண்ணீராய் மாற்றிவிட்டாய். என் இன்பங்கள் ஆனந்தமாக ஒளிர்கின்றன. என் தேக-கோயில் உன் ஒளியினால் நிரம்பியுள்ளது. உன் ஒளியின் கிரணங்கள் என் ஞானக்கண்கள் சொக்கி மயங்குவதிலிருந்து காக்கின்றன. என்னை எப்போதும் விழிப்புற்றுத்  தயாராக வைத்துக்கொண்டிருப்பதற்காக, என் தந்தையே, நான் உனக்கு மனமார நன்றி செலுத்துகின்றேன்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
109 Demand to be kept awake and ready.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

87. தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.

இறைத்தந்தையே, ஆனந்தத்தினில் இருந்து நான் தோன்றியுள்ளேன்; ஆனந்தத்திற்காக நான் வாழ்கின்றேன்; அந்த ஆனந்தத்தில் நீ என்னை உருக்கி விடு! நீ புனிதமான இடையறாத ஆனந்தம்; நீ தான் நான் விரும்பித் தேடும் அந்த ஆனந்தம்; நீ என்றும் நிலைத்திருக்கும் ஆன்ம ஆனந்தம். வழிதவறிய புலனின்பங்களினால் அன்றி, தியானத்தினிலும், நற்செயல்களிலும் உதிக்கும் ஆனந்தத்தினால் மட்டுமே உன்னைத் துதிக்க எனக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
87 Worship of God as sacred Joy found in meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

79. எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி.

எங்கள் அனைவருக்கும் தந்தையான ஒரே இறைவனே, எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி. உன் கருணையால் எனக்குத் தாற்காலிமாக இருப்பிடமாக அமைந்துள்ள நாட்டை எப்படி  நான் நேசிக்கின்றோனோ, அப்படி என் எல்லா சகோதர-நாடுகளையும் நேசிக்க எனக்குக் கற்பி. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை நேசிக்காதவர்களையும்  நான் நேசிக்க எனக்குக் கற்பி. தவறிழைக்கும் என் உடன்பிறந்தவர்களிலும் உன் சாந்நித்யத்தைப் பார்க்க எனக்குக் கற்பி. அறியாமை-தீண்டிய என் உடன்பிறந்தவர்களை, நான் எப்படி முனைப்புடன் என்னைக் குணப்படுத்த முயற்சிப்பேனோ அப்படி அவர்களையும் குணப்படுத்த எனக்குக் கற்பி.

தெய்வத்தாயே, முரட்டுத்தனத்தினின்று மெலிந்தோரைக் காக்கும் பொருட்டு, தவறிழைக்கும் உடன்பிறந்தவர்களைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில் தனிமைப்படுத்தும்போதோ தண்டிக்கும்போதோ, நான் களிப்புறாமல் இருக்க எனக்குக் கற்பி. வழிதவறியவர்களை உன் கருணையினாலும், என் முன்னுதாரணமான நடத்தையினாலும் குணப்படுத்த எனக்குக் கற்பி.  

மரணமே சம்பவிக்குமாறு என்னை அடித்துக் காயப்படுத்துபவனும் உன் பிரதிபிம்பத்தில் உள்ள என் சகோதரனே என்றுணர எனக்குக் கற்பி; ஏனெனில் அவன் அறியாமை தற்காலிமாகமானதே. என்னுள் பழிக்குப்பழி வாங்கும் வஞ்சகுணத்தை அறவே ஒழிப்பாயாக. என் குற்றவாளிச் சகோதரர்களைத்  தண்டனையின்றி குணப்படுத்த எனக்குக் கற்பி. அவர்களின் அறியாமையை என் தவறான வழிகளினாலோ, பழிவாங்கும் எண்ணத்தினாலோ அதிகப்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்பி. மாறாக, என் மன்னிக்கும் குணத்தினாலும், ஒழுக்க நெறியினாலும், நெஞ்சுறுதியினாலும், ஞானத்தினாலும், மேன்மையான முன்னுதாரணத்தினாலும், பிரார்த்தனையினாலும் மற்றும் உன் அன்பினாலும் அவர்களை மேம்படுத்த எனக்குக் கற்பி.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
79 Teach me to feel that all men are my brothers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 15 ஏப்ரல், 2021

118. தியானம் துவங்குமுன் செய்யும் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தியானம் துவங்குமுன் செய்யும் பிரார்த்தனை.

இறைத்தந்தையே, என் எளிய பிரார்த்தனைகள் எல்லாம் உன்மீதுள்ள மரியாதையினால் விழிப்புற்று உனது வருகைக்காகக் காத்திருக்கின்றன. என் எளிய இன்பங்கள், கோயில் மணியோசையுடன் லயித்து ஆனந்தநடனம் புரிகின்றன. என் ஏக்கங்களின் மந்தமான பறையோசை உனக்காக ஆழமாக அறைகின்றன. என் ஆசைத் தாபங்கள், என் அறியாமை, உன் பீடத்தின்முன்னர் பலிகொள்ளப்போகும் அச்சத்தில் பயந்து நடுங்குகின்றன. என் தூய கண்ணீர்த்துளிகளால் செய்யப்பட்டு, என் அன்பினால் மெருகூட்டப்பட்டப் புனிதமான மணிகளால் ஆன மாலையுடன், நான் எனது பிரார்த்தனை மந்திரங்களை ஓதுவேன். நான் என் இதயபீடத்தைப் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்துவேன். வா! வா! உன் வரவுக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
118 Prayer before Meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

211. உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்.

விடியலின் இதயத்திலிருந்து நான் ஒளியினாலான பூக்களைப் பறித்து உனக்கு சமர்ப்பணமாக அர்ச்சிக்கின்றேன். விடியற்காலையின் விளக்கையும், என் விழிப்பின் விளக்கையும் கொண்டு, என் காலை அமைதிக்கோயிலில் ஒளியேற்றுகின்றேன். 

பன்னெடுங்காலமாக உன்னை மறைத்திருந்த அறியாமை நிழலினிலிருந்து விலகி வெளிப்பட்ட உன் ஆனந்தமுகத்தைத் தரிசனம் செய்தேன். பிறகு உன் ஆனந்த முகத்தை என் உள்முக கண்ணின்மணி வழியே பார்த்து, என் வாழ்க்கையின் முகம் உனது ஆனந்த அருட்முகத்தை ஒத்தே அமைந்துள்ளது என்று கண்டுகொண்டேன்.

உன் அன்பின் கண்ணாடியில், என் அன்பின் வெளித்தோற்றமானது உன் சாயலை பிரதிபலிப்பதை கண்டுகொண்டேன்.

விதியினை இனி நான் சாடமாட்டேன். அன்பான தெய்வத்தாயே, என்னாலே உருவாக்கப்பட்ட அறியாமை இருள்தான் நம் அன்பின் ஒளியை இதுவரை மறைத்திருந்தது.  இனி, உன் ஆனந்த முக ஸ்படிகக் கண்ணாடியில், நான் என்னைப் பார்த்து, நான் பூரணமான ஆனந்த ஸ்வரூபன் என அறிகின்றேன்.  நிஸ்சலனமான என் இன்பக் கண்ணாடியில், நான் உன்னை - என்றும் புனிதமான, ஒன்றேயொன்றான, பூரண ஆனந்தமாகக் காண்கின்றேன்.

உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்! என் ஆன்மச் சிமிழிலிருந்து பொங்கி வடியும் என் இதயத்தை நான் தாரை வார்க்கின்றேன்! என் மரியாதையின் மயக்கும் பரிமள கஸ்தூரியை அனைவற்றையும் முன்னேற்றும் உன் என்றும்-இயங்கும் பாதங்களில் நான் தாரை வார்க்கின்றேன்!     
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
211 I pour my love at Thy roseate Feet of Immortality.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

203. பொங்கும் நீலக்கடலில் நான் உன்னுடன் துள்ளிக்குதித்து விளையாடுவேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பொங்கும் நீலக்கடலில் நான் உன்னுடன் துள்ளிக்குதித்து விளையாடுவேன்.

பொங்கும் நீலக்கடலில், ஆனந்தத்தினால் என் ஆவி அமைதியான கடற்கரையில் துள்ளிக்குதிக்கின்றது. தாழ்வுநில துர்நாற்ற வாயுக்கள், தனிமையில் ஒதுங்கி நிமிர்ந்திருக்கும் வறண்ட குன்றுகளும் நீங்கின. உப்பு மணம் என் ரத்தவோட்டத்தில் கலந்து, என் ஆற்றல் கரைபுரண்டு ஓடுகின்றது. ஆஹா! கடற்காற்றினால் என்னே ஒரு ஜீவப் புத்துணர்வு அயராமல் என்னுள்ளே பாய்கின்றது! ஆஹா, நீலக்கடலோரச் சீரான கடற்கரையே, நீ ஆரோக்கியத்திற்கு பெயர்பெற்ற தேவலோகத்தை அடுத்த ஒரு சொர்க்கம். நீலக்கடலோரத்தின் அருகில் உன்னிடமிருந்து நான் ஆரோக்கியத்தைப் பருகுவேன். நீ ஆழமான நீலக்கடலை எப்படி வெளிரிய நீலவானுடன் பின்னிப் பிணைக்கின்றாயோ, அதுபோல மகத்தான உன் பேருணர்வை எங்கள் அரும்பும் நம்பிக்கையுடன் நெய்து, அதனை எல்லாத்திசைகளிலும் பரப்ப விழைகின்றாய்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
203 In the bursts of blue brine I shall bound with Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 1 ஏப்ரல், 2021

56. என்னை மௌனியாக்கு, அதன்மூலம் உன்னிடம் விஸ்தாரமாக உரையாடுவதற்காக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை  மௌனியாக்கு,  அதன்மூலம் உன்னிடம் விஸ்தாரமாக உரையாடுவதற்காக. 

நான் காடுகள் பலவற்றில் அலைந்து திரிந்து இடைவிடாமல் வழிதேடி, உன் இருப்பிடத்தின் ரகசிய வாயிலுக்கு வந்துசேர்ந்துள்ளேன். அந்த அமைதியான வாயிற்கதவில் என் விடா நம்பிக்கையினால் பலமாகத் தட்டி ஓசையெழுப்பினேன். வெட்டவெளியின் அக்கதவுகள் திறந்தன. ஆங்கே, உன்னதமான ஒளிரும் தரிசன பீடத்தில், நீ அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

நான் அலைபாயும் கண்களுடன் நீ பேசுவாயென எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தேன். உன் ஆக்க-பூர்வ பிரபஞ்ச ஒலி எனக்குக் கேட்கவில்லை. இறுதியில் நிஸ்சல ஸ்திதி என்னைக் கவ்விக் கொண்டு, மெல்லிய ரீங்காரத்தில் தேவதைகளின் பாஷையில் அது எனக்கு போதித்தது. புதிதாகப் பிறந்த சுதந்திரத்தின் குளறுமொழியால் நான் பேச எத்தனித்தேன், உன் கோயிலின் விளக்குகள் திடீரென பேரொளி சிந்தி, ஒளியால் அக்ஷரங்களை எழுதிக் காட்டியது.

சிறிய என் நிசப்த அறைக்குள், நான் எப்போதும் அமர்ந்துகொண்டு: நான் வாயெடுத்துப் பேசுவதில்லை ஆனால் மௌனமொழியால் பேசுகின்றேன். என் மௌனத்தின் வழியே என்னிடம் நீ விஸ்தாரமாக உரையாடு. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
56 Make me silent, that I may eloquently converse with Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!