செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

18. தியானக்கடலில் உன் ஞானமுத்துக்களைப் பெறுவதற்கு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தியானக்கடலில் உன் ஞானமுத்துக்களைப் பெறுவதற்கு உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, தியானமெனும் கடலில் ஆழ்ந்து மூழ்கி ஞான முத்துக்களைக் கொணர எனக்குக்கற்பி. ஆசாபாசங்களெனும் சுறாக்கள் வந்தெனை அழிக்காமலிருக்க மனசாட்சியெனும் நீர்மூழ்கியாடையை கவசமாகக் கொண்டு கடலின் அடித்தளத்திற்கு தலைக்குப்புற முழ்குவதற்கு எனக்குக்கற்பி. நான் ஓரிருமுறை முத்துகுளித்துவிட்டு ஞானமுத்துக்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனில், தியானக்கடலிலே உன் ஞானமுத்துக்கள் இல்லையென குறைகூறாமலிருக்க எனக்குக்கற்பி. அதற்குப் பதிலாக, என் முத்துக்குளிப்பில் குறைகாண எனக்குக்கற்பி.  உன் அழியா ஞான முத்துக்களையும், தெய்வீக ஆனந்தத்தையும் கண்டுகொள்ளும் வரை, தியானத்தில் மீண்டும் மீண்டும், ஒவ்வொரு முறையும் மென்மேலும் ஆழமாகச் செல்ல எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
18 Demand for Pearls of Wisdom to be obtained in the sea of meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 28 ஆகஸ்ட், 2021

14. இரவுப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இரவுப் பிரார்த்தனை.

கண்களை மூடிக்கொண்டு, இரவுக்கோயிலில் அமர்ந்து உன்னை வழிபடுகின்றேன். பலகோடி வசீகர விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியவொளி மறைந்துவிட்டது. ரோசாப்பூவின் மணமோ, குயிலின் பாட்டோ உன்மேல் காட்டும் என் அன்பினுக்கு இடையூறு விளைவிக்குமோ எனும் அச்சத்தால், ஒன்றொன்றாக நான் என் புலன்களின் கதவுகளை மூடிக்கொண்டிருக்கின்றேன். நான் மட்டுமே இப்போது இந்த கும்மிருட்டுக் கோயிலில் அமர்ந்துள்ளேன். அனைத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன், ஆனால் எங்கே இருக்கின்றாய் நீ? இருள் என்னை பயமுறுத்துகின்றது; ஆயினும், பயமின்றி நான் உன்னைத் தட்டுத் தடுமாறி, அழுதுகொண்டே தேடிக்கொண்டுள்ளேன். என்னைத் தனியே தவிக்க விட்டுவிடுவாயா? வா, நீ எனக்குத் தரிசனம் கொடு! 

என் நினைவின் கதவுகள் திறக்கின்றன. இதயம் துடிதுடிப்புடன் உன்னைத் தேடுகின்றது, அய்யகோ, உன்னை நான் காண முடியவில்லை! ஏ, பலகோடி அனுபவ எண்ணங்களின் எழுச்சியே! நில்! என் புனிதக் கோயிலுக்குள் நுழையாதே. நான் கொந்தளிப்புடன் படபக்கும் என் எண்ணக் கதவினை அழுத்தி மூடிவிட்டு, அங்குமிங்குமாக எல்லாவிடங்களிலும் உன்னைத் தேடி ஓடினேன். எங்கே இருக்கின்றாய் நீ?

இருள் மென்மேலும் படர்ந்து அழுத்தியது, திக்குத்தெரியாமல் வருத்தத்துடன் நான் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் போது, என்னுள் சிறிதாக எரியும் கவன மெழுகுவர்த்தியினைக் கண்டுற்றேன். நான் எழுந்து மெலிதான  வெளிச்சத்தில் துலங்கும் கோயிலுக்கு முரட்டுவேகத்தில் ஓடினேன் - நான் ஓட ஓட, இருள் மேன்மேலும் என்னை கவ்வியது. உனைப் பிடிப்பதாக எண்ணி நான் பாழும் இருளைக் கட்டியணைக்கின்றேன். வெறுங்கையுடன் உனைக்  காணாமல் நான் திரும்புகின்றேன். என்னுள் மெழுகுவர்த்தி லேசாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன்.

நான் பலத்தகுரலில் பிரார்த்தனையை ஓதுகின்றேன். பெரிதாகச் சுரக்கும் என் கண்ணீர்த் துளிகளும், என் பிரார்த்தனையின் பெருமூச்சும் எனது மெழுகுவர்த்தியை அணைத்தே விட்டுவிடும் போல் இருந்தது. நான் இனி  வார்த்தைகளால் பிரார்த்திக்க மாட்டேன், இங்குமங்குமாக நரக இருள் கவ்விய கோயிலில் நான் ஓடியலைய மாட்டேன். என் மெழுகுவர்த்தியை என் கண்ணீர்ப் பெருக்கினால் இனி அமிழ்த்தவும் மாட்டேன். உன்மேல் வைத்த என் ஆரவார அன்பினைச் சாடினேன். இப்போது என் தியான மெழுகுவர்த்தி வெளிச்சமாக ஒளிர்கின்றது. 

புத்திபேதலிக்கும் என்னே ஒரு திகைப்பு! என்னால் வார்த்தைகளால் உன்னை வழிபட முடியவில்லை, ஆனால் ஏங்கும் ஏக்கத்தினால் மட்டுமே உன்னை வழிபட முடிகின்றது. ஒளி மென்மேலும் பெருகுகின்றது: உன்னை நான் இப்போது காண்கின்றேன். நீயே நான். நான் உன்னை வழிபடுகின்றேன்.

இரவு எல்லாவற்றையும் மறைப்பது போல், நான் உன்னை மறைவான அமைதியில் வழிபடுகின்றேன். 

இரவில் எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன: இரவில் இருட் போர்வைக்குள் நான் உன்னுள்ளே - நீயும் நானுமாக அன்பினில் கலந்திணைந்து -  படுத்துறங்குவேன். எல்லா மனங்களின் இன்பசுகத்தையும் ஒருங்கே அனுபவித்து நான் மகிழ்கின்றேன். நாட்பொழுதினில் மயக்கியிழுக்கும் பொருட்களிலிருந்து என்னை மறைத்துக்கொள்ள நான் இரவுத்திரையை உபயோகிப்பேன். 

இரவே, நான் கவலையுறும் போது, உன் அமைதியான இருளினாலான மூடுதிரையை என்னைச் சுற்றி வீசு. நான் எங்கெங்கு சென்றாலும் அங்கே ஒரு இருண்ட கோயிலை எனக்காக உருவாக்கு. அதன்மூலம் நான் நேசிக்கும் பெருமானை எந்நேரத்திலும், எந்தவிடத்திலும், எல்லாவிதங்களிலும் கூவியழைப்பேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
14 Prayer at Night.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 25 ஆகஸ்ட், 2021

13. சாயங்காலப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சாயங்காலப் பிரார்த்தனை.

நாட்பொழுது முடிந்தது. நாட்பொழுதில் சூரியவொளியினால் நான் புத்துணர்வும், சுத்திகரிப்பும் அடைந்தபின், மங்கி மினுமினுக்கும் நட்சத்திரங்களுடன் மங்கலாக அலங்கரிக்கப்பட்ட சாயங்காலப் படித்துறைகளின் வழியே உன் அமைதிக்கோயிலுக்குள் நுழைந்து உன்னை வழிபடச் செல்கின்றேன். அங்கு உன் பேருணர்வின் அரும்பிவரும் சாந்தத்தை நான் வழிபடுகின்றேன். என்ன சொல்லி நான் பிரார்த்தனைகளை உனக்கு சமர்ப்பிப்பது, ஏனெனில் உன்னைத் தொழுவதற்கு என்னிடம் வார்த்தைகளேயில்லை? நான் என் பக்தியின் சிறு சுடரை என் ஆன்மபீடத்தில் ஏற்றுவேன். ஆனால், அந்த ஒளி என் அறியாமையின் இருளால் சூழப்பட்டு, மங்கலான வெளிச்சம் கொண்ட என் இருண்ட கோயிலுக்கு போதிய வெளிச்சம் தருமா? வா! நான் உன்னை கெஞ்சியழைக்கின்றேன்; உனக்காக நான் ஏங்குகின்றேன், வா! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
13 Prayer at Eventide.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

12. மத்தியானப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மத்தியானப் பிரார்த்தனை.

உச்சிவேளையில் விண்ணுலகினின்று பகலவன் ஓங்கி ஒளிர்கின்றது: அனைத்தும் நன்கு விழிப்புடன் உள்ளன. நீ என்னை அதுபோல விழிப்புறச்செய்! நீ புலனாகாதவன், இருப்பினும் உன் சக்தி பகலவனின் கதிர்கள் வழியே ஒளிர்கின்றது. என் நரம்புநாளங்களில் உன் புலனாகா கதிர்களை நிரப்பி, என்னை வல்லவனாகவும், சோர்வுறாதவனாகவும் ஆக்கு. ஜனநெருக்கடியுள்ள தெருக்களில் எப்படி சூரியன் வெளிச்சம் தருகின்றதோ, அப்படி நான் உன் காக்கும் அன்பினை நெருக்கடியுறுத்தும் என் வாழ்வின் செயல்களிலும் நான் காணுமாறு செய். ஜனநெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் எப்படி ஒளி ஸ்திரமாக, சலனமின்றி பிரகாசிக்கின்றதோ, அப்படி நான் என் வாழ்வின் நெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் உலவும்போது என் சாந்தத்தையும், உறுதியையும் நான் ஸ்திரமாகக் கடைப்பிடிக்குமாறுச் செய். எனக்கு வலிமையைக் கொடு; நான் பெறுவதை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எனக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
12 Prayer at Noon.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
http://www.joytoyou.com/wfe29/wfe29-p-036.htm
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

11. விடியற்காலைப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

விடியற்காலைப் பிரார்த்தனை.

சிற்றஞ்சிறு விடியற்பொழுதும் தாமரை-மொட்டுக்களும் மலர்கையில், எனது ஆன்மா உன் ஒளியைப் பெறப் பிரார்த்திக்கும் பாவனையில் சன்னமாக விரிகின்றது. என் மனத்தின் ஒவ்வொரு இதழையும் உன் பிரகாசமான கதிர்களால் குளிப்பாட்டு. நான் உன் மணக்கும் சாந்நித்தியத்தில் என்னை அமிழ்த்தி, உன் சுகந்தமணம் கமழ் அன்பின் செய்தியை எல்லோருக்கும் பரப்பத் தயாராகவுள்ளேன். பரவும் இந்த காலைப்பொழுதில், உன் அன்பை எல்லாவிடங்களுக்கும் நான் பரப்ப என்னை ஆசிர்வதி. விடியும் இந்த காலைப்பொழுதில், என் ஆன்மாவினால் மற்ற எல்லா உள்ளங்களையும் ஆன்மவிழிப்புறச் செய்து, உன்னிடம் கூட்டிக் கொண்டுவர என்னை ஆசிர்வதி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
11 Prayer at Dawn.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
http://www.joytoyou.com/wfe29/wfe29-p-036.htm
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

10. எல்லாவிடங்களிலும் ஆன்மீகக் கோயில் கதவுகளைத் திறக்க வேண்டி உரிமையுடன்-முறையிடுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாவிடங்களிலும் ஆன்மீகக் கோயில் கதவுகளைத் திறக்க வேண்டி உரிமையுடன்-முறையிடுதல்.

இறைத்தந்தையே, நான் முன்பு [ஆன்மீகத்திற்கு] குருடாயிருந்த போது, உன்னையடையும் வழிகாட்டும் ஒரு வாசற்கதவையும் நான் காணவில்லை. ஆனால், என் [ஆன்மீகக்] கண்களை இப்போது நீ திறந்து விட்டபின், பூக்கும் நெஞ்சங்களிலும், நட்பின் குரலோசையிலும், நேசமான அனுபவங்களின் இனிய நினைவுகளிலுமென வாசற்கதவுகளை நான் எல்லாப்பக்கங்களிலும் காண்கின்றேன். என் ஒவ்வொரு பிரார்த்தனையின் எழுச்சியும் உன் சாந்நித்தியத்தின் மகத்தான கோயிலுக்கு எவரும் நுழையாத  ஒரு புதிய கதவைத் திறக்கின்றது.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
10 Demand for the opening of the Spiritual Temple Doors everywhere.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

6. பிரபஞ்சக் கோயிலில் செய்யும் பொது வழிபாடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்சக் கோயிலில் செய்யும் பொது வழிபாடு.

ஜீவனுள்ள பல்வேறு எண்ணங்களாலான பக்தியினால், நான் உனக்கு விழிப்புணர்வுடன் கூடிய அமைதிக் கோயில் எழுப்பியுள்ளேன். நான் எல்லா நல்மதங்களில் உதித்த ஞானத்தினாலான பலவண்ண விளக்குகளை உனக்கு எடுத்து வந்துள்ளேன். அவை எல்லாமே உன் ஒரே மெய்ம்மையின் ஒளியினைப் பிரகாசிக்கின்றன. 

உனக்காக ஏங்கும் மனித ஆசைகளின் ஒன்றுகலந்த வாசனை எங்கள் இதய ஜாடிகளிலிருந்து சுருள்சுருளாக மேலெழும்புகின்றது. உன் புனித சாந்நித்தியம் எல்லாவிடங்களிலுமுள்ள பீடங்களிலும் ஜொலிக்கின்றது. 

கோயில்கள், கூடாரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என இவை அனைத்திலும் துலங்கும் எல்லா பிரார்த்தனைகளும் ஒரே உலகமொழியான ஆழமான அன்பினால் உன்னை எண்ணி ஜபிக்கின்றன. எங்கள் உணர்வுகளின் வாத்தியக்குழு, எல்லா ஆன்ம கீதங்களின் கூட்டு கானத்திற்கும், அனைவரின் ஆனந்தக்கண்ணீர் ததும்பலுக்கும், அனைத்து ஆனந்தகும்மியினில் பொங்கியெழும் கூக்குரலுக்கும், எல்லா பிரார்த்தனைகளின் மங்களவொலிக்கும் இயைவாக ஒத்திசைக்கின்றது. 

எங்கள் உள்ளங்களின் சுவரற்றப் பிரபஞ்சக் கோயிலில், எங்களின் ஒரே தந்தையான உன்னை வழிபடுகின்றோம். எங்களுக்கு நீ எப்பொழுதும் இவ்வாறு தரிசனம் தர விருப்பம் கொள்வாயாக. ஆமென், ஓம், ஆமின். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
6 Universal prayer of the Cosmic Temple.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

5. நீ தான் குண்டுவீச்சுகளிலிருந்து காக்கும் தலைசிறந்த கவசம்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ தான் குண்டுவீச்சுகளிலிருந்து காக்கும் தலைசிறந்த கவசம்.

நிர்மூலமாக்கும் போர் மேகங்கள் நெருப்பையும், மரணத்தையும் மழையாகப் பெய்யும் போது, கடவுளே, குண்டுவீச்சுகளிலிருந்து என்னைக் காக்க நீ தான் எனக்குத் தலைசிறந்த கவசம் என்பதனை நான் மறக்க மாட்டேன். வாழ்விலும், சாவிலும், வியாதியிலும், பஞ்சத்திலும், தொற்றுநோயிலும், ஏழ்மையிலும், நான் உன்னை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்வேன். ஏனெனில் நீ மட்டுமே வாழ்க்கை தரும் இருமை அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நான் பாதிக்கப்படாமலிருக்க எனக்கு வழி காட்டமுடியும். மாறிக்கொண்டிருக்கும் பால்ய, இளமை, முதுமைப்பருவங்களாலும், உலக ஆரவார நடப்புகளாலும் தீண்டப்பட முடியாத நான் மரணமற்றவன் என என்னை உணருமாறு செய்வதற்கு, நீ என்னை எப்போதும் ரட்சித்துக் கொண்டுள்ளாய். 
   
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
5 Thou art the best bomb-shelter.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 14 ஆகஸ்ட், 2021

3. உடம்பு-பேட்டரியை புத்துணர்வூட்ட உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உடம்பு-பேட்டரியை புத்துணர்வூட்ட உரிமையுடன்-வேண்டுதல்.

பேருணர்வே, எங்கள் உடம்பை உன் பிரபஞ்ச சக்தியினால் புத்துணர்வூட்டி ஆரோக்கியம் அடைய, மனத்தைக் கவனவொருமுகப்பாட்டினாலும் புன்னகைகளாலும், உள்ளத்தை தியானத்திலுதிக்கும் பிரக்ஞையினாலும் பேணிப் பராமரிக்க எங்களுக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
3 Demand for recharging body-battery. [#4 in the link below]
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

123. தெய்வ மானே, நான் என் ஆன்மக் காட்டில் உன்னை வேட்டையாடிப் பிடிப்பேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வ மானே, நான் என் ஆன்மக் காட்டில் உன்னை வேட்டையாடிப் பிடிப்பேன்.

தெய்வ மானே, நான் என் சுயநல ஆசைகளினாலான ஈட்டிகளைத் தாங்கிக்கொண்டு உன்னைப் பிடிக்க உன் பின்னால் ஓடினேன். நீ தப்பி ஓடிவிட்டாய்! நான் பலத்த சத்தத்துடன் கூடிய பிரார்த்தனைகளாலான விமானத்திலேறி உன்னை விடாமல் பின்தொடர்ந்தேன். அது என் மேலுங்கீழுமான சஞ்சலமெனும் பூமியில் இடித்து நொறுங்கி விழுந்தது. அந்த பயங்கரமான ஆரவாரம் உன்னை என்னிடமிருந்து துரத்தியடித்தது! என் கவன ஒருமுகப்பாடென்னும் வில் அம்புடன் உன்னை நாடி மறைவாக ஊர்ந்து பின்சென்றேன். ஆனால் என் கரமோ நிலைதடுமாற்றத்தினால் நடுக்கமுற்றது, நீ என் பார்வையிலிருந்து குதித்து ஓடி மறைந்துவிட்டாய். உன் பாதங்கள், "பக்தியில்லாமல் நீ வெறுமனே ஒரு அசட்டு வில்லாளனே!" என்று எதிரொலித்தன. நான் உறுதியான பக்தியுடன், தியான அம்பினை வில்லில் பூட்டுகையில், உன் தெய்வீகக் காலடிகள், "உன் மனோ அம்புகளின் வீச்சிற்கு நான் அப்பாற்பட்டவன்; நான் அப்பாற்பட்டவன்!" என மீண்டும் ஒலித்துரைத்தன. பெருங்கலக்கமுற்று இறுதியில், நான் என் தெய்வீக அன்பின் இருதய குகையில் தஞ்சம் புகுந்தேன். ஆஹா! அந்த தெய்வ மானான நீ ஆசையுடன் என்னுள்ளே வந்து புகுந்தாய்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
123 O Divine Hart, I will hunt for Thee in the forest of my Soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

142. தெய்வத்தாயே, மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வத்தாயே, மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.

புனிதமும் தூய்மையுமுடைய உன் தேசப்பொலிவுடன் என்னை அலங்கரித்து இங்கு விளையாட அனுப்பியுள்ளாய். நான் இருளில் அறியாமையினால் விளையாடி துன்ப வலையில் அகப்பட்டு வழிதெரியாமல் என்னை இழந்து தவித்தேன். நான் தூய்மையாகச் சென்றேன், ஆனால் உன்னிடம் திரும்பி வருகையில் மோகச் சேற்றை முழுவதுமாய் பூசிக்கொண்டு வந்துள்ளேன். தெய்வத்தாயே, என்னை உன் ஞானத்தினால் கழுவி மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
142 Make me clean again, Divine Mother.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 11 ஆகஸ்ட், 2021

22. ஆன்ம-மெய்யுணர்வுக்காக உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்ம-மெய்யுணர்வுக்காக உரிமையுடன் வேண்டுதல்.

பிரணவ நாதமே, நீ பிரபஞ்சமயமான, அறிவார்ந்த ஒலியாய் என்னுள்ளே அதிர்ந்து ஒலிப்பாயாக. உன்னுள்ளே பிரதிபலிக்கும் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வைக் கண்டுணர எனக்குக் கற்பி. புனித நாதமே, என்னைக் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வுடன் ஐக்கியமாக்கி பிரக்ஞையடைய வழிநடத்து.

சர்வ வியாபக, பிரபஞ்ச ஒலியான ஆமென், ஓம் நாதமே, என்னுள்ளே அதிர்ந்தொலித்து, என் உணர்வுத்தளத்தை என்னுடலிலிருந்து விரித்து இப்பிரபஞ்சம் முழுதும் பரவுமாறு செய். எங்கும்-கமழ் வற்றாத ஆனந்தத்தை உன்னுள்ளே உணர எனக்குக் கற்பி.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
22 Prayer-Demand for Self-Realization.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

150. தவறான நம்பிக்கைகளிலிருந்து என்னைக் காப்பாயாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தவறான நம்பிக்கைகளிலிருந்து என்னைக் காப்பாயாக.

இறைத்தந்தையே, நான் தவறான நம்பிக்கைகளின் சேற்றில் வழிதவறித் தொலைந்துவிட்டேன்; என் வீட்டிற்கு வழி தெரியவில்லை. நான் உன் வரவை எதிர்பார்த்து என் ஆன்மக்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளேன், ஆயினும் நான் உன்னை இன்னும் கண்டுகொள்ள முடியவில்லை. என் இருளின்மேல் வந்துதித்து, தத்தித் தடுமாறும் என் மனத்திற்கு துருவ நட்சத்திரமாய் ஒளிர். என்னை என் வீடாகிய உன்னிடம் நீ வழிநடத்து!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
150 Save me from wrong beliefs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 7 ஆகஸ்ட், 2021

36. அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு பிரார்த்திக்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு பிரார்த்திக்கின்றேன்.

பக்தியினால் கோர்க்கப்பட்ட என் அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு என் பிரார்த்தனைகளை ஜபிக்கின்றேன். கடவுள், பேருணர்வு, பிரம்மம், கிறிஸ்து, ஆதிசங்கரர், ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், முகம்மது நபி என எந்த ஒரு நாமத்தையும் நான் குறிப்பிட்டுப் பற்றிக் கொள்வதில்லை; ஏனெனில் இவையாவும் உன் நாமங்களே. நீ பல நாமங்களை விரும்பி ஏற்பதை நான் அறிந்ததனால், சில சமயங்களில் நான் இவை எல்லாவற்றையும் சேர்த்து விளிப்பதும் உண்டு.

பன்னெடுங்கால மேடையில் நடக்கும் உன் பிரபஞ்ச நாடகங்களில், அதில் தோன்றும் உன் எத்தனையோ விதமான பாத்திரங்களில், நீ பல்வேறு நாமங்களினால் அழைக்கப்படுகிறாய்; ஆயினும், நீ இடையறாத இன்பம் எனும் என்றும் மாறாத ஒரு பெயரைக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறிவேன்.

நான் உன்னுடன் பலமுறை இணைந்து நடித்தும், உன்னுடைய கானங்களைப் பாடியுமுள்ளேன். எல்லா ஜீவனங்களுக்கும் ஆதாரமான உன் நெஞ்சகக் கடலில், ஒரு சிறுதுளி உயிரான என்னைக் காத்துப் போஷித்து வந்துள்ளாய். பிரிவெனும் குளிர்காலம் முடிந்து நான் உனைநாடி வீடு திரும்பும் போதெல்லாம், பல நூற்றாண்டுகளாய் அளாவிய உன் இதமான ஸ்பர்சங்களை நான் நினைவுகூர்கிறேன். மீண்டும் இந்தப் பகல்வேளையில் உன்னுடன் இணைந்து நடித்து உன் கீதங்களைப் பாடுகின்றேன்.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
36 Prayers on the beads of love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

001. பிரபஞ்ச வணக்கம்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச வணக்கம்.

பேருணர்வே, நான் என் முற்புறத்திலும், பின்புறத்திலும், இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலுமாகத் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என் மேற்புறத்திலும், கீழ்புறத்திலுமாக உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என்னைச் சுற்றி எல்லாத்திசைகளிலும் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என்னுள்ளேயும், வெளியேயுமாக உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நீ சர்வவியாபகன் என்பதால் எல்லா இடங்களிலும் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
1 Cosmic Salutation [Listed as 3 in the URL].
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!