சனி, 28 ஆகஸ்ட், 2021

14. இரவுப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இரவுப் பிரார்த்தனை.

கண்களை மூடிக்கொண்டு, இரவுக்கோயிலில் அமர்ந்து உன்னை வழிபடுகின்றேன். பலகோடி வசீகர விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியவொளி மறைந்துவிட்டது. ரோசாப்பூவின் மணமோ, குயிலின் பாட்டோ உன்மேல் காட்டும் என் அன்பினுக்கு இடையூறு விளைவிக்குமோ எனும் அச்சத்தால், ஒன்றொன்றாக நான் என் புலன்களின் கதவுகளை மூடிக்கொண்டிருக்கின்றேன். நான் மட்டுமே இப்போது இந்த கும்மிருட்டுக் கோயிலில் அமர்ந்துள்ளேன். அனைத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன், ஆனால் எங்கே இருக்கின்றாய் நீ? இருள் என்னை பயமுறுத்துகின்றது; ஆயினும், பயமின்றி நான் உன்னைத் தட்டுத் தடுமாறி, அழுதுகொண்டே தேடிக்கொண்டுள்ளேன். என்னைத் தனியே தவிக்க விட்டுவிடுவாயா? வா, நீ எனக்குத் தரிசனம் கொடு! 

என் நினைவின் கதவுகள் திறக்கின்றன. இதயம் துடிதுடிப்புடன் உன்னைத் தேடுகின்றது, அய்யகோ, உன்னை நான் காண முடியவில்லை! ஏ, பலகோடி அனுபவ எண்ணங்களின் எழுச்சியே! நில்! என் புனிதக் கோயிலுக்குள் நுழையாதே. நான் கொந்தளிப்புடன் படபக்கும் என் எண்ணக் கதவினை அழுத்தி மூடிவிட்டு, அங்குமிங்குமாக எல்லாவிடங்களிலும் உன்னைத் தேடி ஓடினேன். எங்கே இருக்கின்றாய் நீ?

இருள் மென்மேலும் படர்ந்து அழுத்தியது, திக்குத்தெரியாமல் வருத்தத்துடன் நான் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் போது, என்னுள் சிறிதாக எரியும் கவன மெழுகுவர்த்தியினைக் கண்டுற்றேன். நான் எழுந்து மெலிதான  வெளிச்சத்தில் துலங்கும் கோயிலுக்கு முரட்டுவேகத்தில் ஓடினேன் - நான் ஓட ஓட, இருள் மேன்மேலும் என்னை கவ்வியது. உனைப் பிடிப்பதாக எண்ணி நான் பாழும் இருளைக் கட்டியணைக்கின்றேன். வெறுங்கையுடன் உனைக்  காணாமல் நான் திரும்புகின்றேன். என்னுள் மெழுகுவர்த்தி லேசாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன்.

நான் பலத்தகுரலில் பிரார்த்தனையை ஓதுகின்றேன். பெரிதாகச் சுரக்கும் என் கண்ணீர்த் துளிகளும், என் பிரார்த்தனையின் பெருமூச்சும் எனது மெழுகுவர்த்தியை அணைத்தே விட்டுவிடும் போல் இருந்தது. நான் இனி  வார்த்தைகளால் பிரார்த்திக்க மாட்டேன், இங்குமங்குமாக நரக இருள் கவ்விய கோயிலில் நான் ஓடியலைய மாட்டேன். என் மெழுகுவர்த்தியை என் கண்ணீர்ப் பெருக்கினால் இனி அமிழ்த்தவும் மாட்டேன். உன்மேல் வைத்த என் ஆரவார அன்பினைச் சாடினேன். இப்போது என் தியான மெழுகுவர்த்தி வெளிச்சமாக ஒளிர்கின்றது. 

புத்திபேதலிக்கும் என்னே ஒரு திகைப்பு! என்னால் வார்த்தைகளால் உன்னை வழிபட முடியவில்லை, ஆனால் ஏங்கும் ஏக்கத்தினால் மட்டுமே உன்னை வழிபட முடிகின்றது. ஒளி மென்மேலும் பெருகுகின்றது: உன்னை நான் இப்போது காண்கின்றேன். நீயே நான். நான் உன்னை வழிபடுகின்றேன்.

இரவு எல்லாவற்றையும் மறைப்பது போல், நான் உன்னை மறைவான அமைதியில் வழிபடுகின்றேன். 

இரவில் எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன: இரவில் இருட் போர்வைக்குள் நான் உன்னுள்ளே - நீயும் நானுமாக அன்பினில் கலந்திணைந்து -  படுத்துறங்குவேன். எல்லா மனங்களின் இன்பசுகத்தையும் ஒருங்கே அனுபவித்து நான் மகிழ்கின்றேன். நாட்பொழுதினில் மயக்கியிழுக்கும் பொருட்களிலிருந்து என்னை மறைத்துக்கொள்ள நான் இரவுத்திரையை உபயோகிப்பேன். 

இரவே, நான் கவலையுறும் போது, உன் அமைதியான இருளினாலான மூடுதிரையை என்னைச் சுற்றி வீசு. நான் எங்கெங்கு சென்றாலும் அங்கே ஒரு இருண்ட கோயிலை எனக்காக உருவாக்கு. அதன்மூலம் நான் நேசிக்கும் பெருமானை எந்நேரத்திலும், எந்தவிடத்திலும், எல்லாவிதங்களிலும் கூவியழைப்பேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
14 Prayer at Night.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: