வெள்ளி, 25 டிசம்பர், 2020

25. ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஏசு கிறிஸ்துவே - அரிய இருதயாம்புஜ மலரே! நீ புயல் கொந்தளிக்கும் உட்கோட்டமுள்ள மனங்களினாலான ஏரியில் இறங்கினாய். அதன் தீயநாற்றமுடைய இருண்ட எண்ண அலைகள் உன் இளகிய அல்லிமலர்நேர்  உள்ளத்தை அடித்துத் துன்புறுத்தின. அவற்றின் கொடிய குரூரத்தினால் நீ சிலுவையில் அறையப்பட்டாய். ஆயினும், உன் பிழைபொறுக்கும் நற்குணமணம் தொடர்ந்து வீசியது; நீ அவர்கள் தங்கள் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்திக் கொள்ள உதவினாய். அதன்மூலம், எல்லாவற்றையும் நேசத்தால் கவர்ந்திழுக்கும் உன் மணங்கமழ் மலருள்ளம் போன்று அவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள உதவியது. 

தவறுதலினால் சிதைந்த மனிதகுலத்தை நேசிக்கும் பேரருளாளா! "அவர்களை மன்னித்தருள், அவர்கள் தாம் செய்வதை அறியார்," என்னும்  உன் இயல்கடந்த வார்த்தைகள், கண்ணுக்குப் புலப்படாத, அன்பின் பேரற்புதமான வானோங்கி உயர்ந்த பெருங்கோபுரத்தை ஒவ்வொரு நெஞ்சிலும் எழுப்பியது.

நீ எங்கள் கண்களில் படர்ந்துள்ள அறியாமைப் புரையை அகற்றினாய். இப்போது, "உன் பகைவராயிருப்பினும் அவர்களை நீ உன்னை நேசிப்பது போல் நேசிப்பாயாக. அவர்களின் மனம் களங்க நோய்ப்பட்டிருப்பினும், மருளில் உறங்கிக் கொண்டிருப்பினும், அவர்கள் யாவரும் உன் சகோதரர்களே," என்னும் உன் உபதேசமொழியின் அழகைக் கண்டு அக்கண்கள் இன்புறுகின்றன.

அவர்களின் கிறுக்கடிக்கும் வெறுப்பின் உதைகளுக்குப் பதிலாக, பழிக்குப் பழிவாங்கும் தடியினால் சரமாரி அடித்து, அவர்களின் பகைமையை அதிகப்படுத்தாமல் இருக்க எங்களுக்குக் கற்றுக் கொடு. உன் மரணமில்லா தயை, கோபப் பித்தத்தினால் அவதியுறும் எங்கள் சகோதரர்களை, நாங்கள்   மன்னிக்கும் பொறுமைக் களிம்பு தடவி, அவர்களை சுகப்படுத்தி விழிப்புறச்செய்ய எங்களுக்கு நல்லூக்கம் நல்குகின்றது.

நீ சிலுவையேற்றப்பட்ட நிகழ்ச்சி, நாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வின் சோதனைகளை: பொறுமையைச் சோதிக்கும் தொந்தரவுகள், அறிவை மயக்கும் அறியாமை, புலனடக்கத்தை நடுக்கும் ஆசைகள், அன்பைத் தகர்க்கும் தப்பெண்ணங்கள் போன்றவைகளை நாங்களும் எதிர்கொள்ள நினைவுறுத்துகின்றது.

சிலுவையில் உன்னை அறைந்த கடும்சோதனை, அறியாமையை ஞானம் வெல்லும், ஊனுடம்பை ஆத்மா வெல்லும், துக்கத்தை சுகம் வெல்லும், வெறுப்பை அன்பு வெல்லும் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சோதனைகளை வீரத்துடன் எதிர்கொள்ள, இச்சம்பவம் என்றும் அழியாத உதாரணமாய் எங்களை உரப்படுத்தட்டும். 

அராஜக அவதிகளுக்குப் பதிலாக பணிவின் இனிமையை அளித்திடவும் , கவலைத் தாக்குதல்களை சாந்தமான பொறுமையினால் தாங்கவும், தவறாகப் புரிந்துகொண்டு எங்களை வெறுப்பவர்களுக்கு நன்மைபயக்கும் புரிதலை இடையறாமல் அளிக்கவும் எங்களுக்குக் கற்றுக் கொடு.

ஆன்மாக்களின் நன்மேய்ப்பனே! அலைந்து திரியும் நெஞ்சங்கள் எல்லாம் ஒருமை பக்தியையே நாடுகின்றன. எங்களை இடைவிடாமல் அழைக்கும் உன் வரம்பற்ற கருணையிசையை நாங்கள் கேட்டுவிட்டோம். எங்கள் ஒரே விருப்பம்: உன்னுடன் நம் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்து, நம் பிரபஞ்சப்  பரமபிதாவை ஆனந்தமாய், ஞானக் கண்களைத் திறந்து வரவேற்று, நாம் அனைவரும் நம் ஒரே கடவுளின் குழந்தைகளே என மெய்யாக அறிவது தான்.  

எல்லா சகோதர-உள்ளங்களும் ஒரே கடவுள்நெறியின் கீழ் ஒன்றுபடுவதைத் தடுத்துக் கூறுபடுத்தும் சுயநல சாத்தானை நீ வென்றதுபோல் நாங்களும் வெற்றி கொள்ள எங்களுக்குக் கற்பி.

நாங்கள் ஒருவரையொருவர், "உன்னை நேசிப்பவரை நீ நேசி; உன்னை நேசிக்காதவர்களையும் நீ நேசிப்பாயாக," என்னும் உன் உறுதிபயக்கும் மொழியினால் அரவணைத்து, பிரபஞ்ச நோக்குடைய ஒருமை-கிறிஸ்துவின் வானத்தினடியில் ஒன்றுகூடி அணிவகுத்துச் செல்வோமாக. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
25 Come to me, O Christ, as the Divine Shepherd of Souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       
------

கருத்துகள் இல்லை: