வியாழன், 31 டிசம்பர், 2020

30. நீ புத்தராய் என்னிடம் வருக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ புத்தராய் என்னிடம் வருக.

புத்தரே, உன் கருணைச் சொற்பொழிவுகளின் பொன் நாளங்கள், இருள்மண்டிய, கல்நெஞ்சங்களில் விரவி அவைகளின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கியது.   

நீ துறவில் வானைத்தொடும் மகிமை பெற்றவன். உன் கடவுட்நோக்குக்  கண்களுக்குக் கீழ், புலன்சுகங்கள் தரும் ராஜ்ஜியம், பருமையான பேராசை நதிகள், காமத்தால் எரிக்கப்பட்ட பரந்துவிரிந்த ஆசைப் பாலைவனங்கள், உயர்வான அநித்தியக் குறிக்கோள் மரங்கள், அரிக்கும் உலக-கவலைக் கள்ளிச் செடிகள் - என இவையாவும் உருகி கண்ணுக்குப் புலனாகாமல் சிறுத்து மறைந்தன. 

புத்தரே, உன் தயையின் ஒளிவீச்சு குரூர நெஞ்சங்களின் கடினத்தை உருக்கி இளக்கியது. நீ ஆட்டின் உயிரை பலியினின்று காக்கும் பொருட்டு, அதற்குப் பதிலாய் உன் உயிரையே தியாகம் செய்ய முனைப்பட்டாய்.

ஆனந்தக்களி-லயத்தை நாடும் நெஞ்சங்களைத் தேடி, உன் சாந்தமான எண்ணங்கள் இன்னம் மனவெளிகளில் அமைதியாக பவனி வருகின்றன. 

போதி ஆலமரத்திற்கடியில் அமர்ந்து, நீ பேருணர்வுடன் அமைதியான ஒரு சபதத்தை மேற்கொண்டாய்: 

"ஆலமரக் கிளைகளுக்குக் கீழே,
புனித ஆசனத்தில் அமர்ந்து நான் இச்சபதம் செய்கிறேன்:
தோல், எலும்புகள், அநித்திய சதை - இவை கரைந்து மறைந்தாலும் சரி;
நான் வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்து,
அனைவரும்-நாடும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை அடையும்வரை,
இவ்விடத்திலிருந்து நான் ஒருபொழுதும் அசையமாட்டேன், இது உறுதி."

நீ கருணையின் சின்னம், தயையின் அவதாரம், உன் உறுதியை எங்களுக்கும் அளி, அதன்மூலம் நாங்களும் உன்னைப் போலவே விடாமுயற்சியால் மெய்ம்மையை நாடுவோம். நாங்களும் உன்னைப் போல மெய்விழிப்புணர்வு பெற்று, பிறரின் சோகத்துடிப்புகள் நிவிருத்தியடைவதற்காக நாங்கள் எங்களுக்காக எப்படி நாடுவோமோ அப்படி அவர்களுக்காகவும் நாட எங்களுக்கு அருள்புரி.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
30 Come to me as Buddha.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 29 டிசம்பர், 2020

161. பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.

எல்லையற்ற பேருணர்வே, பயப்படுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை எனக்கு நன்கு புரியுமாறு கற்பி. மரணம் என்பது ஒருமுறை நேர்ந்தால், அது மறுபடியும் வரப்போவதில்லை என்பதை என் நினைவில் நிறுத்த உதவு; எப்போதோ அது நேரும்போது, இயற்கையின் கருணையால் அதைப் பற்றிக் கவலை ஏதுமின்றி, என் அறிவிற்கு எட்டாமலேயே அது நேர்ந்துவிட்டுப் போகட்டும். அதனால், நான் அனாவசியமாக மரணத்தை நினைத்து நடுங்கத் தேவையில்லை.   

நானே கற்பித்துக் கொண்ட விபத்தின் பயங்கரத்தினாலே என் நரம்புநாளங்களை முடக்கி, அதனை ஒருக்கால் நிஜமாகவே நடக்குமாறு செய்துவிடாமல் இருக்க எனக்குக் கற்பி.

வாழ்க்கையின் கஷ்டங்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள, உன் குழந்தையாகிய எனக்கு அளித்த வரம்பற்ற ஆற்றலை நான் பயத்தினால்  மூர்ச்சையடைவிக்காமல் இருக்க எனக்கு அருள்புரி. நான் உறங்குகையிலும், விழித்திருக்கையிலும், கவனத்துடன் இருக்கும் போதும், கற்பனைக்கனவு கண்டுகொண்டிருக்கும் போதும், உன் எல்லாம்-புரக்கும் இருப்பு என்னைச் சூழ்ந்துள்ளதை நான் அறியுமாறு செய்.

நான் இதை நன்கு உணரும்படி செய்: உறுதியான, மனிதனால் கட்டப்பட்ட கோட்டைக்குள்ளே நான் அங்க கவசங்களை தரித்திக்கொண்டு இருந்தாலும், நீ என்னுடன் கூடி இல்லையெனில் நான் நோய், பூகம்பம், விபத்து இவற்றிற்கு ஆளாகக்கூடும். மாறாக, துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பறந்து கொண்டிருப்பினும், பாக்டீரியக் கிருமிகள் நிறைந்த இடத்திலும், நீ என்னுடன் இருப்பாயெனில் எக்காலத்திலும் காக்கும் உன் கோட்டை மதில்சுவரின் பின் பத்திரமாக நான் இருப்பேன்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
161 Demand to be able to conquer fear.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 28 டிசம்பர், 2020

60. உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.

என் ஆன்ம-ஆன்டெனாவை நுட்பமாகத் தொட்டு மாறுபாடுகள் செய்து, என் உள்ளொலி வானொலியை ஒத்ததிர (tuning) வைத்தேன். முதலில், நான் உன் அருகிலிருந்து வரும் குரல்களைக் கிரகித்தேன் - ஓர் ஆன்ம-இயைபின் பேரின்னிசைக் கச்சேரி, என் பாடும் இதய உணர்வு வாத்தியக்குழுவின் இனிமையான மெல்லிசை, பன்நெடுங்காலமாய் உனக்காக ஏங்கும் என் தாபங்கள் ஒன்றுபட்டு எழுப்பிய கூட்டிசை - இவையாவும் என் ஆன்ம வானொலியில் இசைத்தன. நான் மேலும் என் கிரகிப்பு மாறுபாடுகளைத் தொடர்ந்து செய்து, எல்லா ஜீவாத்மாக்களின் பரதேவதையான உன் குரலைக் கிரகிக்கக் காத்திருந்தேன்.   

வரம்புகாணா பொறுமையுடன் நான் தொடர்ந்து நுட்பமாற்றங்களைச் செய்து கொண்டிருந்தேன்; அப்படியே நான் கண்ணயரப் போகும் வேளையில், உன் கீதம் என் இதயத்தில் துடிப்புடன் ஒலித்தது. உன் கீதங்களின் இன்னிசைத் தொகுப்பை என் வாழ்வின் குரலினால் பாடி அதனை நான் பரவலாக ஒலிபரப்புவேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
60 I will broadcast my Voice with the Chorus of Thy Songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 26 டிசம்பர், 2020

62. குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.

சாத்துக்குடிப் பழம் நசுக்கப்படினும் அல்லது கடிக்கப்படினும் எப்படி தனது இனிய சாற்றை வழங்கத் தவறுவதில்லையோ, அப்படி நானும் ஒழுக எனக்குக் கற்பி. கருணையின்மையால் துன்புறுத்தப்படினும், கடுமையாக குற்றம்சாட்டப்படினும், கொடியவார்த்தைகளாலும் குரூர செயல்களாலும் அறுபட்டு புண்படினும், என் இனிமை தோய்ந்த அன்பினை இடைவிடாமல் வார்க்க எனக்குக் கற்பி.  

சோப்புச் சீவல்களைப் (soap-flakes) போல் நானும் ஆக எனக்குக் கற்பி. அவை நன்கு துவைபட்டு அடிபடினும், அவற்றின் தூய்மைப்படுத்தும் நுரைக்குமிழ்களைத் தருகின்றது. நன்றித் துரோகத்தினால் நான் சோதனைக்குட்பட்டு வெகுவாக அடிபடினும், என் ஞானத்தின் உதவிகொண்டு தூயவெண்ணிற மனப்பாங்கு நுரைக்குமிழ்களை அதற்கு மாறாக நான் வழங்க எனக்குக் கற்றுக்கொடு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
62 Teach me to give Sweet Forgiveness, though crushed by Criticism.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 25 டிசம்பர், 2020

25. ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஏசு கிறிஸ்துவே - அரிய இருதயாம்புஜ மலரே! நீ புயல் கொந்தளிக்கும் உட்கோட்டமுள்ள மனங்களினாலான ஏரியில் இறங்கினாய். அதன் தீயநாற்றமுடைய இருண்ட எண்ண அலைகள் உன் இளகிய அல்லிமலர்நேர்  உள்ளத்தை அடித்துத் துன்புறுத்தின. அவற்றின் கொடிய குரூரத்தினால் நீ சிலுவையில் அறையப்பட்டாய். ஆயினும், உன் பிழைபொறுக்கும் நற்குணமணம் தொடர்ந்து வீசியது; நீ அவர்கள் தங்கள் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்திக் கொள்ள உதவினாய். அதன்மூலம், எல்லாவற்றையும் நேசத்தால் கவர்ந்திழுக்கும் உன் மணங்கமழ் மலருள்ளம் போன்று அவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள உதவியது. 

தவறுதலினால் சிதைந்த மனிதகுலத்தை நேசிக்கும் பேரருளாளா! "அவர்களை மன்னித்தருள், அவர்கள் தாம் செய்வதை அறியார்," என்னும்  உன் இயல்கடந்த வார்த்தைகள், கண்ணுக்குப் புலப்படாத, அன்பின் பேரற்புதமான வானோங்கி உயர்ந்த பெருங்கோபுரத்தை ஒவ்வொரு நெஞ்சிலும் எழுப்பியது.

நீ எங்கள் கண்களில் படர்ந்துள்ள அறியாமைப் புரையை அகற்றினாய். இப்போது, "உன் பகைவராயிருப்பினும் அவர்களை நீ உன்னை நேசிப்பது போல் நேசிப்பாயாக. அவர்களின் மனம் களங்க நோய்ப்பட்டிருப்பினும், மருளில் உறங்கிக் கொண்டிருப்பினும், அவர்கள் யாவரும் உன் சகோதரர்களே," என்னும் உன் உபதேசமொழியின் அழகைக் கண்டு அக்கண்கள் இன்புறுகின்றன.

அவர்களின் கிறுக்கடிக்கும் வெறுப்பின் உதைகளுக்குப் பதிலாக, பழிக்குப் பழிவாங்கும் தடியினால் சரமாரி அடித்து, அவர்களின் பகைமையை அதிகப்படுத்தாமல் இருக்க எங்களுக்குக் கற்றுக் கொடு. உன் மரணமில்லா தயை, கோபப் பித்தத்தினால் அவதியுறும் எங்கள் சகோதரர்களை, நாங்கள்   மன்னிக்கும் பொறுமைக் களிம்பு தடவி, அவர்களை சுகப்படுத்தி விழிப்புறச்செய்ய எங்களுக்கு நல்லூக்கம் நல்குகின்றது.

நீ சிலுவையேற்றப்பட்ட நிகழ்ச்சி, நாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வின் சோதனைகளை: பொறுமையைச் சோதிக்கும் தொந்தரவுகள், அறிவை மயக்கும் அறியாமை, புலனடக்கத்தை நடுக்கும் ஆசைகள், அன்பைத் தகர்க்கும் தப்பெண்ணங்கள் போன்றவைகளை நாங்களும் எதிர்கொள்ள நினைவுறுத்துகின்றது.

சிலுவையில் உன்னை அறைந்த கடும்சோதனை, அறியாமையை ஞானம் வெல்லும், ஊனுடம்பை ஆத்மா வெல்லும், துக்கத்தை சுகம் வெல்லும், வெறுப்பை அன்பு வெல்லும் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சோதனைகளை வீரத்துடன் எதிர்கொள்ள, இச்சம்பவம் என்றும் அழியாத உதாரணமாய் எங்களை உரப்படுத்தட்டும். 

அராஜக அவதிகளுக்குப் பதிலாக பணிவின் இனிமையை அளித்திடவும் , கவலைத் தாக்குதல்களை சாந்தமான பொறுமையினால் தாங்கவும், தவறாகப் புரிந்துகொண்டு எங்களை வெறுப்பவர்களுக்கு நன்மைபயக்கும் புரிதலை இடையறாமல் அளிக்கவும் எங்களுக்குக் கற்றுக் கொடு.

ஆன்மாக்களின் நன்மேய்ப்பனே! அலைந்து திரியும் நெஞ்சங்கள் எல்லாம் ஒருமை பக்தியையே நாடுகின்றன. எங்களை இடைவிடாமல் அழைக்கும் உன் வரம்பற்ற கருணையிசையை நாங்கள் கேட்டுவிட்டோம். எங்கள் ஒரே விருப்பம்: உன்னுடன் நம் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்து, நம் பிரபஞ்சப்  பரமபிதாவை ஆனந்தமாய், ஞானக் கண்களைத் திறந்து வரவேற்று, நாம் அனைவரும் நம் ஒரே கடவுளின் குழந்தைகளே என மெய்யாக அறிவது தான்.  

எல்லா சகோதர-உள்ளங்களும் ஒரே கடவுள்நெறியின் கீழ் ஒன்றுபடுவதைத் தடுத்துக் கூறுபடுத்தும் சுயநல சாத்தானை நீ வென்றதுபோல் நாங்களும் வெற்றி கொள்ள எங்களுக்குக் கற்பி.

நாங்கள் ஒருவரையொருவர், "உன்னை நேசிப்பவரை நீ நேசி; உன்னை நேசிக்காதவர்களையும் நீ நேசிப்பாயாக," என்னும் உன் உறுதிபயக்கும் மொழியினால் அரவணைத்து, பிரபஞ்ச நோக்குடைய ஒருமை-கிறிஸ்துவின் வானத்தினடியில் ஒன்றுகூடி அணிவகுத்துச் செல்வோமாக. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
25 Come to me, O Christ, as the Divine Shepherd of Souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       
------

வியாழன், 24 டிசம்பர், 2020

90. அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.

பரலோகத் தந்தையே, கடந்த காலத்தில் உன்னைப் புதிதாய்க் கண்டுகொண்ட ஒரு அனுபூதிமான் எப்படி உன்னை அன்புசெய்துப் பிரார்த்தித்தாரோ, அத்தகைய அன்பையும், பிரார்த்தனைகளையும் என் இருதயத்தில் தினமும் நிரப்பு. உன்னை யாரெல்லாம் இதுவரை நேசித்துக் கண்டுகொண்டார்களோ அவ்வனைத்து அனுபூதிமான்களின் அன்பினையும் என் இருதயத்தில் நிரப்பச் செய். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
90 Demand to love God as all Saints love Him.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 21 டிசம்பர், 2020

45. என் கனவுகளின் சோலைக்கு வா.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் கனவுகளின் சோலைக்கு வா.

என் கனவுகளின் சோலையில் பல கனவு-மலர்கள் பூத்தன. என் கற்பனையில் மிக அரிய பூக்கள் எல்லாம் அரும்பின. என் கனவுகளின் கதகதப்பில்  இன்னம் விரியாத மொட்டுக்களான நிலவுலக விருப்பங்கள் துணிவுடன் தங்களின் பூர்த்தியடைவெனும் இதழ்களை  விரித்தன. மங்கிய வெளிச்சத்தில், நான் மறந்துபோன என் அன்புக்குரியவர்களின் முகங்களை ஒற்று பார்த்தேன்; வெகுகாலத்திற்கு முன் மரித்து மனநிலத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட நேச உணர்வுகள் பிரகாசமான உடைகளை உடுத்திக்கொண்டு பீறிட்டுக் கிளம்பின. என் கனவு-தேவதைகளின் ஏவலுக்கு, என் எல்லா அனுபவங்களும் புனர்ஜென்மம் பெறுவதை நான் கண்டேன்.

என் கனவுகளின் மற்றும் எண்ணற்ற கனவுலகங்களின் அரசே, உன் கனவு-கேலக்ஸிகளில் (பலகோடி விண்மீன்களின் கூட்டத் தொகுப்பு) , நான் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனாய் இருக்க விரும்புகிறேன்; அல்லது உன் அன்புக்குரிய சிறு கனவு-விண்மீனாக உன் பிரபஞ்ச கனவுகளின் மன்றத்தில் நான் உன்னருகில் மின்ன விழைகிறேன்; அல்லது, அப்படி உன் கனவு மணிமாலையில் வாழ்க்கையின் ஒரு சிறு விண்மீன்-மணியாக நான் ஆகமுடியாவிடில், உன் கனவுகளின் நெஞ்சத்தில் எனக்கு எளிமையான ஒரு இடத்தைக் கொடு.  

உன் இருதய வாசஸ்தலத்தில், நான் புனிதமான வாழ்க்கைக் கனவுகள் உதயமாவதைக் காண்பேனாக. கனவுகளை நெய்வதில் தலைசிறந்த நிபுணனே, உன் நிரந்தரக் கனவுகளின் கோயிலை நோக்கிப் பயணிக்கும் உன் கனவுக் கோலங்களை ரசிக்கும் எல்லா அன்பர்களும் நடந்து செல்லுமாறு விரிக்க, பல வண்ணங்களில் கனவுக் கம்பளங்களை உற்பத்தி செய்ய எனக்குக் கற்றுக்கொடு. மேலும், திவ்யதரிசனக் காட்சிதரும் உன்னை வழிபடும் தேவர்கள் குழாத்துடன் நானும் சேர்வேனாக. அவர்களுடன் சேர்ந்து, புதிதாக உதித்த உன்னைப் பற்றிய என் கனவுகளின் மலர்க்கொத்தை நான் உன் சந்நிதியில் சமர்ப்பிப்பேன்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
45 Come into the Garden of my Dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 19 டிசம்பர், 2020

64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி.

கண்மறைக்கும் தவறுகளின் இரவினில், நாங்கள் சதக்க-வெளிச்சம் போன்ற போலி சுகத்தை நாடிச் சென்றோம். இருளுக்கு மேல் இருள் கவ்வியது. முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த எங்கள் கால்கள் சறுக்கி பாசம் மண்டிய மோகக்குழப்ப சதுப்புநிலக் கழியில் நாங்கள் வீழ்ந்தோம். இந்த மயக்கும் புகைமூட்டத்தினால் ஏற்படும் ஆசைக்கனல், பலபேரை அழிவிற்கு இழுத்துச் செல்கிறது. பல்லாயிரக் கணக்கானோர் திகட்டும் புலனின்ப சதக்கலில் மூழ்குகின்றனர். 

கைகொடுக்கும் தெய்வமே, உன் வீடுநோக்கிப் பயணிக்கும் உன் ரத்தபந்தங்களை தடுமாற்றி நாசமேற்படுத்தும் இந்தப் பொய்யான பந்தவிளக்கை ஊதி அணை. அதற்கு மாறாக, உன் புனித ஒளிவிளக்கை ஏற்று; அதன் துணையால், ஆவலுடன் விரையும் உன் குழந்தைப் பயணிகள் பாதுகாப்பாக உன் வீட்டை வந்தடைவார்கள்.

---
"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp): இரவு வேளைகளில் சதுப்புநில சகதிப் புதர்களிலிருந்து பாக்டீரிய கிருமிகள் மட்கும் செயல்களால் ஒரு வகை வெளிச்சம் தோன்றும். இந்த இரவுநேர வெளிச்சம் பகல்வேளைக் கானல்நீரைப் போன்றது.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
64 Teach us not to follow the Will-o'-the-Wisp of False Happiness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 12 டிசம்பர், 2020

9. ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மூடி மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.

ஓ தெய்வக்காளி அன்னையே, நீ தேச-கால-ரூப-நிகழ்வுண்மையை உருவாக்கி, ஒரு எல்லையுள்ள ஆனால் பிரம்மாண்ட வடிவெடுத்து, எல்லாவற்றிற்கும் இடம்கொடுக்கும் இயற்கை மூர்த்தியாகத் தோன்றுகிறாய். புலனாகா பரப்பிரம்ம உணர்வே புலனாகும் ரூபத்தில் தெய்வத்தாயான உன் வடிவை எடுத்துள்ளது. அனைத்தையும் காத்து ரட்சிக்கும், தாயின் கருணையால் துடிக்கின்ற இதயம் உன்னுள்ளே உறைகின்றது. 

ஓ மகாமாயீ அம்பாளே! சந்தியாகாலம், நிசியெனும் உன் இரு புருவங்களுக்கு மத்தியில் சந்திரனே அழகுப்பொட்டாய் அமைந்துள்ளது. நிரந்தரத்தின் மேகங்கள் உன் முகத்தை மூடிமறைக்கின்றன. அருளாளர்களின் வாழ்வெனும் பருவக்காற்று அவ்வப்போது உன் மர்மமான முகத்திரையைத் துணிவுடன் பொருத்தமாக விலக்கி, எங்கள் அறியாமைப் பார்வைக்குப் புலப்படாத உன் திருமுகத்தை சிறிதுகாலத்திற்குப் புலப்படுத்துகின்றது. 

ஓ மகாமாயீ அம்பாளே, தோற்றத்தின் விடிவுகாலத்தில் நீ நாகரீகம் வளராத பிராகிருத கோலத்தில் சிறு, பருவான பொருட்களுடன் பக்குவமற்ற மனங்களாலான உடைகளையும், கரடுமுரடான இயற்கைக்  கிரீடமும் அணிந்துகொண்டு காலப்பாதையில் சுற்றுவதை நான் கண்டேன். 

தோற்றத்தின் பகல்பொழுதில், தங்கள் பொருளாசைத் தீயினால் வெந்து புழுங்கும் ஜீவாத்மாக்களையும், பளீரெனத் துலங்கும் மனங்களாலாலுமான ஆடை போர்த்திய கோலத்தைக் கண்டேன். உன் செயல் உடம்பு ஆரவாரத்தில் வியர்வை சிந்தியது. உன் எல்லா மக்களும் போராட்டத்தின் வெம்மையைத் தாங்கமுடியாமல், சாந்தமெனும் குளிர்த்தென்றலை அனுப்புமாறு அவர்கள் உன்னிடம் வந்து முறையிட்டனர். 

உன் மத்தியான மனோ வஸ்திரத்துடன், நீ விழாக்கோலமான பல நூற்றாண்டுகளைக் கடந்து பெரும் கனவு கண்டுகொண்டு பயணம் செய்தாய். மனித வாழ்வு-சாவு, கோளங்களின் வளர்வு-சிதைவு, நாகரீகங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளி ஆவிப்படரால் (nebulae) உருவாக்கப்படும் உலகங்கள் - இப்படி புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட கோளங்கள், நிலநடுக்கங்கள், முடிவுறாத பிரளயங்கள் என ஒரு பெருங்கனா.  

அப்புறம் கருமையான இரவு நெருங்கியது. நீ இறுக்கமான, சோகக் கருந்திரையை உடுத்திக் கொண்டு, பிரபஞ்சத்தை பயங்கரமான, ஆனால் சுத்தப்படுத்தும், பிரளயத் தீயில் போட்டுப் புரட்டினாய். சூரியன் வெடித்து, நெருப்பைக் கக்கியது; பிரளய பூகம்பம் வானத்தைப் பிளந்தது; விண்மீன்கள் வானிலிருந்து கனலுடன் நழுவி விழுந்தது; முழுத் தோற்றமும்  பெரும்சுடருடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்புலையாய்க் காட்சியளித்தது. எல்லாமே நெருப்புமயம்: பொருள்கள், பாபம், இருள் என இவையனைத்தும் உன் தீக்குவையில் இடப்பெற்று, அதில் அவை தூய்மையடைந்து பிரகாசமாய் ஒளிவீசின.   

பிரபஞ்சத் தோற்றம் நெருப்பிலிருந்து உருவானது: பொருட்களின் சாம்பலுக்குக் கீழ், தகதகக்கும் பிரபஞ்சம் உறங்கியது; அத்தோற்றம் உன் கரங்களினால், ஓ மகாமாயீ, உலுக்கிவிடப்பட்டு அது தனது சுடரொளி விடும் உடம்பினை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது.

சக்தியினாலான உன் ஒரு கையினால், கட்புலனாகா ஆக்கசக்தியை எழுப்பி, பலவண்ணங்களில் வரம்புக்குட்பட்ட அழகிய ரூபங்களைப் படைக்கின்றாய். மற்றொரு கை, பாதுகாக்கும் சூட்சும அரிவாளைக் கொண்டு, அனைத்து கோளங்களையும் அதனதன் பாதையினில் கதி தவறாமல் சுழற்றிக் காக்கின்றது. உன் மூன்றாவது கை, பிரபஞ்சத்தின் அறுபட்ட தலையைப் பிடித்துக்கொண்டு, பிரளயத்தின்போது எல்லா அகிலாண்டமும் உன்னுள்ளே தான் உறங்குகின்றது என்பதை சூசகமாக உணர்த்துகிறது. உன் நான்காவது கை, மோகக்குழப்பச் சூறாவளிகளைத் தடுத்து அமைதிப்படுத்தி, நாடுகின்ற பக்தர்களுக்கு மோட்சத்தின் ஒளிக்கிரணங்களை நல்குகின்றது. 

ஓ காளி, நீ மனிதமனங்களைத் தார்மாலையாய் அணிந்து ஆக்கச்செயல்களின் ஆழ்ந்த தோற்றுவாயான ஜனனியாய் விளங்குகிறாய்; உன் பாதம், உன் வரம்பற்ற-கட்புலனாகா-பதியாம் சிவபிரானின் அனைத்திற்கும் அப்பாற்பட்ட நெஞ்சினைத் தொடுகையில் மட்டுமே, உன் பிரபஞ்சத் தோற்றத்தின் கோர நடனத்தின் ஆட்டம் முழுதுமாக நிற்கின்றது. அவ்வமயம் தோன்றிய அகில பிரபஞ்சமும், சிவனிடம் லயம் அடைகின்றது.

ஓ முன்னேற்றத்தின் தாயே, உன் வாழ்க்கை நடனத்தை நான் இயற்கை இயைபுடன் வாழ்வோரின் எளிமையான சிரிப்பு மணிகளினில் காண்கின்றேன். என் தளிர்க்கும் எண்ணங்களின் தளத்தில், உன் அண்டகோளங்களின் இசையை ஒத்திசைக்கும் உன்  உற்சாகமூட்டும் எண்ணங்கள் மெதுவாக நடனம் புரிகின்றன.  

பிரபஞ்சத்தோற்றச் சபையில், ஓ காளி, பலத்த அதிரடியுடன் இடிக்கும் மின்னலிலும், சன்னமாக ரீங்காரிக்கும் அணுக்களிலும் என எல்லாப்புறங்களிலும் நான் உன் திருவடித் தாளத்தைக் கேட்கிறேன்.

வரம்பற்ற பரம்பொருள் புரிபடாத மாயமோகத்தினடியில் உறங்குகின்றது; இருப்பினும், பரத்தின் நெஞ்சிலிருந்து புறப்பட்டு, ஓ ரூபங்களின் இறைவியே, உன் எல்லைக்குட்பட்ட அற்புத நடனங்கள் துவங்குகின்றன. என் ஆன்மத்துடிப்பைக் காட்டிலும் அருகாமையிலே நீ நாட்டியமாடுகின்றாய்; உன் பாதங்கள் எழுப்பும் கூட்டு இசையோசையை என் மனத்தின் வெகுகோடியில் உள்ள திசையந்தத்திலும் நான் கேட்கின்றேன். ஓ மகமாயித் தாயே, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடு; ஆனால், நான் உன்னை இறைஞ்சுகிறேன்,  என் ஆன்மாவின் புனித சந்நிதியில் உன் அற்புதத் திருவடிகளின் இசையை என்றும் விடாமல் தொடர்ந்து இசைப்பாயாக!       

ஓ காளி மா, உன் மாறிக்கொண்டேயிருக்கும் உடுப்புகள் தோற்றத்தின் ஆக்குதல், காத்தல், அழித்தல் எனும் கனவு நூல்களால் நெய்யப்பட்டுள்ளது. தெய்வத்தாயே, உன் அழகிய மனத்திரையில் பலகோடிப்  பிரபஞ்ச சினிமாப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனால், உன் நல்ல குழந்தைகளை உல்லாசமாய் பொழுதினைக் கழிக்கச் செய்கின்றாய்; உன் விஷமக் குழந்தைகளை பயமுறுத்துகின்றாய்.  

இறையன்னையே, உன்னை மூடியுள்ள இந்த பளபளக்கும் பிரபஞ்ச சலச்சித்திரத் திரையை நீ விலக்கிக்கொள்; மோகத்தை அழிக்கும் உன் கருணை முகத்தை எனக்குக் காட்டு. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
9 Thou Mother of Flames, show Thy Face, hidden beneath the veil of Cosmic Motion Pictures.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

செவ்வாய், 8 டிசம்பர், 2020

49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

உன் பிரபஞ்ச இருப்பெனும் வானில், உன் வெளிப்பாட்டு மழைத்துளிகளைத் தாகத்துடன் எதிர்நோக்கும் நான் வாழ்க்கையின் ஒரு மேகபட்சி. வதைக்கும் மோன மேகங்களை ஊடுருவி உன் எங்கும் வியாபித்த மழையைப் பொழி.    

வற்றி வாடும் என் உதடுகளைத் தீண்டும் உன் ஒவ்வொரு மழைத்துளிக் காட்சிக்காகவும் நான் கவனத்துடன் எதிர்பார்க்கிறேன். நீ வருகையில் உன்னை நான் அருந்தி உட்கொள்வேன்; வெளிப்புறத்தில் என் நலிந்த உடலின் மேல் சன்னமாகப் பொழியும் உன் மழைத்துளி அனுபவஉணர்வுகளான பாதங்களை நான் வருடி அணைத்துக் கொள்வேன். 

இந்த என் நீண்டகாலத் தாகம் உன் தீண்டலினால் மட்டுமே தணியும். அது ஏங்கும் என் ஆன்மாவை உள்ளுமாகவும், விடாமுயற்சியினால் தகிக்கும் என் உடலைப் புறமுமாகவும் குளிர்விக்கும். என் அவநம்பிக்கை, சோர்வுச் சூறாவளிகள் கடந்துவிட்டன. உன் மழைத்துளி சாந்தம் என்னுள்ளே உள்ள ஒவ்வொரு வறண்ட அணுவையும் நனைத்துக் குளிர்விக்கின்றது. இனி நான் உன் திருப்தி கானத்தைப் பாடிக்கொண்டே எல்லாத்திசைகளிலும் சிறகடித்துப் பறந்துசெல்வேன்.

சொர்க்க லோகங்களின் வழியே பொழியும் உன் எங்கும்நிறை கனிவான ஆறுதலெனும் மழைநீரைத் தவிர வேறு எந்த குடிநீரையும் தேடிச் செல்லாத வகையான உன் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
49 Make me the Lark of Life, looking only for Thy Rain.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 7 டிசம்பர், 2020

125. உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும், உள்ளந்தோறும் பறப்பேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும்,  உள்ளந்தோறும் பறப்பேன்.

என் தந்தையே, ஒரு மலையுச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு உன்னுடன் சேர்ந்து பறந்து செல்ல எனக்கு அனுக்கிரகம் செய். 

பசும்புல்வெளியின் மேல் நான் மல்லாக்கக் கிடந்து உனது பாட்டை பறவைகளை நோக்கிப் பாட எனக்கு அனுக்கிரகம் புரி. 

மனித இதயங்களில் நான் ஊடுருவி உன் புகழ்கானத்தை அவைகளில் இசைவிக்க எனக்கு அருள் செய்.

நான் நட்சத்திர மண்டல விளிம்பினைச் சுழன்று சுற்றி, உன் பெயரை சுடரெழுத்துக்களால் அங்கு பதிக்க எனக்கு அருள்புரி. விண்துகள் ஆவிப்படரினைக் (nebulae) கொண்டு நான் உன் புனிதநாமத்தைப் பரப்புவேன்.

ரீங்காரமிடும் அணுக்களுடன் நான் கூடிச்சேர்ந்து அவைகளுடன் உன் பாடலை சுருதி லயத்துடன் இயைந்து இசைக்க எனக்கு அருளாசி வழங்கு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
125 From peak to peak and heart to heart, I will Fly, singing Thy name.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

99. கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.

தந்தையே, உனக்காக நான் ஏங்கும் ஏக்கத்தினால் தோன்றிய என் குமுறும் வார்த்தைகளைக் கொண்டு, நீ உள்ளபடி தோன்ற உன்னை வேண்டுகிறேன். என் ஆன்மாவில் அரும்பிய பிரார்த்தனைகளால் உன்னை நான் அழைக்கிறேன்: வா! நான் அறியுமாறு நீ உள்ளபடி எனக்குக் காட்சியளி!    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
99 Demand that God reveal Himself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 5 டிசம்பர், 2020

59. நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை மறவாமல் இருக்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை நினைவுகூரச் செய்.

பரம பேருணர்வே, அனைத்து அறநெறி நியதிகளையும்  நான் அச்சத்தினாலன்றி அன்பினால் பகுத்து, அறியுமாறு எனக்குக் கற்றுக்கொடு. நன்னெறி முதலில் பழகச் சற்றுக் கடினமாகவும், அதனை அடிபணிந்து நன்கு பழகியபின், அது என்னை புகழுடைய உன் இன்பத்தால் அலங்கரிக்கும் என்பதையும் நினைவுகூரச் செய். தீயவையோ ஒரு துளி சுகத்தை முதலில் அளிப்பதாகத் தோன்றினாலும், அது நிச்சயமாக முடிவில் பெருந்துக்கத்தையே அளிக்கும் என்பதையும் என் நினைவில் நிறுத்து.    

என் வளர்ச்சிக்கும் நலனுக்காகவும் இயற்றப்பட்டவை நன்னெறிகள்.  என் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பவை தீய செயல்கள். நான் நன்னெறி நியதிகளை மதித்துப் பழகவும், தீய செயல்களை அடியோடு விலக்கவும் எனக்குக் கற்றுக்கொடு. எல்லாக் காலங்களிலும் நன்னெறி வழிகளே தீயநெறி வழிகளைக் காட்டிலும் சாலச்சிறந்தது என்பதை நான் கண்டுகொள்ள உதவும்  பழக்கத்தை என்னுள்ளே பொதித்து விடு.

அறம் முதலில் கசந்தாலும், பின்னர் முடிவில் அமிர்தமாய் இனிக்கும்; ஆனால், தீயன முதலில் இனிப்பாக சுவைத்தாலும், எப்போதும் அவை விஷமாகவே  கடைசியில் முடியும் என்பதனை நான் என் நினைவிலிருந்து மறவாமலிருக்க நீ உதவு. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
59 Make me remember that Virtuous Ways are more charming than vicious ways.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 3 டிசம்பர், 2020

185. எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓ வாழ்வின் ரகசியமான மாண்புமிகு நீதிபதியே, உன்னை நான் என் ஆன்ம-நிஸ்சல நிலையில் "பாபம் எனப்படுவது யாது?" என வினவினேன்.  

உன் சன்னமான நிசப்தமொழி பெருகி என் எண்ண அலைகளாய் விளங்கியது. "பாபம் என்பது எதிரி-அரசனான அறியாமை" என்று உன் பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். அதுவே எல்லாவிதமான தீயவைகளும் ஏற்பட மூலகாரணம். அது நோயெனும்  மரத்திற்கு ஆணிவேர், அதுவே அனைத்து செயல் திறனின்மைக்கும், ஆன்ம-குருட்டுத்தனத்திற்கும் முதற்காரணம். 

அறியாமை அரசன், அவனுடைய படைகளான உடல்நோவை உண்டாக்கும் பாக்டீரியக் கிருமிகள், மனத்தளர்ச்சியைத் தரும் எண்ணக் கோளாறுகள், பேராசை, தவறான குறிக்கோள், கடவுளின் மேல் கவனம் செலுத்தாமை போன்றவைகளுடன் கூடி, போஷாக்கு செய்யும் ஆன்மீகப்பயிர் விளையும் நிலங்களில் அப்பயிர்களை துவம்சம் செய்வதற்கென்றே அணிவகுத்துச் செல்கின்றன.

பல்விதப் பயிர்கள் உனது அனுக்கிரகத்தால் போகமடைந்து அறுவடையாகும் சமயத்தில், அந்தத் தவறின் கொடூரமான அணிநடை அறுவடையை மிதித்து அழித்தது. நான் தாளாத் துயரத்தில் அழுகத் தொடங்கும் போது, உனது குரலோசை, "செம்மையுடன் பிரகாசிக்கும் உனது நாட்களிலும், கருமையாய் இருண்ட நாட்களிலும் எனது சூரியக் கரங்கள் உனக்கு சமமாகப் பாதுகாப்பை அளிக்கும். அதனால், நீ நம்பிக்கையுறுதி கொள், புன்னகை புரி; சந்தோஷம் இன்மையே எனக்கு எதிராகச் செய்யும் எல்லா பாபங்களிலும் கொடிய பாபம். உனது முகத்தில் என்றும் புன்னகை பூத்துக் குலுங்கட்டும். உனது கள்ளமற்ற புன்னகையின் வாயிலாய் என் ஒளி உனக்கு வந்து உதவும். நீ மகிழ்வாய்  இருத்தலே, எனக்கு நீ செய்யும் திருப்திதரும் தொண்டு!" எனச் சொல்ல நான் கேட்டேன்.  
  
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
185 Driving the Rebel-King, Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 2 டிசம்பர், 2020

5. ஆன்மீக நோக்கில் "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்மீக நோக்கில்  "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).

பரலோகத் தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான என் கடவுளே! உன் இருப்பின் ஒளிப்பிரகாசம் எங்கள் எல்லா மனங்களிலும் பரவட்டும். 

பொருளுலகத்தை நோக்கிச் செய்யும் துதி உன்னை நோக்கிச் செய்யும் துதியாய் மாறட்டும். நீ இல்லாமல் நாங்கள் எதனையும் உண்மையில் விரும்பமுடியாது. ஆகையால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் உன்னை நேசிக்க நாங்கள் கற்போமாக. உன் பேருணர்வில் உள்ள பரமான ஆனந்த ராஜ்ஜியம் எல்லா தெய்வீகக் குணங்களுடன் இந்நிலவுலகில் நன்கு விளங்கட்டும். பரிச்சேதம், குறைபாடு, துன்பங்கள் போன்றவைகளில் இருந்து எல்லா தேசங்களும் விடுபடட்டும். உள்ளிருக்கும் உன் ராஜ்ஜியம் வெளியிலும் வெளிப்படட்டும்.

தந்தையே, நாங்கள் கொடையாக உன்னிடமிருந்து  பெற்ற அறிவினைத் தவறாக உபயோகித்ததினால், ஆசையெனும் பெருங்குழியில் வீழ்ந்துள்ளோம். எங்களை அந்தக்குழியிலேயே விழுந்து  கிடக்குமாறு விட்டுவைக்காதே. நாங்கள் உள்ளதைவிட அதிக விடுதலையுணர்வும் பலமும் பெற்ற பின்னர் -- நாங்கள் உன்னை விட எங்கள் ஆசைகளை அதிகமாக நேசிக்கிறோமா என எங்களை நீ சோதித்துப் பார்க்க விரும்பினால் -- அப்போது நீ உன்னை எல்லா விருப்பங்களுக்கும் மேலான விருப்பமாய் ஆக்கிக்கொள். தந்தையே, எங்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது உன் விருப்பமெனில்,  உன் சோதனைகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெல்லுமாறு எங்கள் இச்சாசக்தி நன்கு வலிமையடைவதற்கு நீ உதவு.

எங்களுக்கான தினசரி அமுதான: உடலுக்கு உணவையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும்; மனதிற்கு செயல்திறனையும்; எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் உள்ளங்களுக்கு உன் ஞானத்தையும், அன்பையும் எங்களுக்கு நீ நல்கு. எங்கள் சுய கவனக்குறைவினால் பின்னப்பட்ட அறியாமை வலையினில் சிக்கியுள்ள எங்களை நாங்கள் மீட்டுக்கொள்ள எங்களுக்குக் கற்பித்து உதவு.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
5 Spiritual Interpretation of the Lord's Prayer
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!