வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Thou dost Ever Behold Me - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou dost Ever Behold Me

கண்ணிமைக்காமல் காக்கும் ஸர்வ ரக்ஷகனே,

உன் விழிகள் காலம் தவறாத பகலவனாகவும், வளர்ந்து தேயும் நிலவாகவும் என்னைத் தொடர்ந்து நோக்குகின்றன.

பரந்து விரிந்த உன் பார்வை விதம்விதமான துவாரங்கள் வழியும், இரவில் மின்னும் விண்மீன்கள் மூலமும், எங்கு சென்றாலும் என்னை விடாமல் பார்த்துக் கொள்கின்றது.

அவ்வப்போது வீசும் தென்றலாய் நீ என்னைத் தழுவிப் பேணுகிறாய்.

உன் மேலும், உன் குழந்தைகள் மேலும் நான் கொண்ட பிரேம எண்ணங்களில், நீ உன் அருள்மழையை நிசப்தமாய்ப் பொழிந்து என்னைப் போஷிக்கின்றாய். 

 #PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Thou art Plainly Present - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou art Plainly Present

தெய்வமே என் தந்தையே,

நான் கடல்தீரத்திலோ, ஓடையிலோ அலைகளில் துள்ளிக் குதித்து நீராடும் போது, நான் உன்னுடன் சேர்ந்து ஆடுகிறேன்.

பிரகாசமான வர்ணங்களினால் நீ தீட்டிய மேகச் சித்திரங்களை நாள்தவறாமல் நான் வானில் காண்கிறேன்.

பசும்புல் கொண்டு நீ கட்டாந்தரையைப் போர்த்தும் நேர்த்தியைக் கண்டு நான் ரசிக்கிறேன்.

நீயே ஆதவனின் ஒளியில் உள்ள இதமான கதகதப்பு.

இப்படி, எங்கெங்கு காணினும் எல்லாவற்றிலும் நீ யதார்த்தமாய் விளங்கும் வியன்மிகு காட்சியைக் கண்டு, என் சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன்.

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

The Gaze of Truth - Sri Paramhansa Yogananda

ஓம்

The Gaze of Truth

கடவுளே,

மாற்றமே நிரந்தரமாய் உள்ள வாழ்க்கையும், வண்ணவண்ண பூக்கள், சத்தமின்றி தோன்றி தவழ்ந்து மறையும் மேகங்கள் என நவவிதமாக காட்சிதரும் இயற்கையும்,  என் மனிதக் கண்களை வசியம் செய்கின்றன.
***

என்னுள் இருக்கும் திவ்ய கண்ணை திறக்கச் செய். அதன் மூலம் எல்லா அழகிலும் உன் மாண்புமிகு அழகையே ரசிப்பேன்.

இவ்வுலகில் உன்னையன்றி வேறொன்றையும் காணாத அந்த உண்மைப் பார்வையை எனக்கு அருள்.
***

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

பரப்பிரம்மமே, நாங்கள் அறவொழுக்கத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அன்புடன் அணுகக் கற்றுக் கொடு.

உன் ஒழுக்கநெறிக்கு அடிபணிந்தால் நாம் பெறுவதோ உன் அருட்கொடையான மங்காப் புகழ் மகுடம்!
***

நீ அறனெறிக் கட்டளைகளை விதித்தது எங்கள் சுகநலத்தைக் காப்பதிற்கே. 

மாறாக, தீவொழுக்கத்தின் விளைவு எப்படியும் துன்பத்தில் தான் முடியும் என அறிந்து நாங்கள் அதனிடத்தினின்று விலகச் செய்.

அறத்திற்கு தீநெறியைக் காட்டிலும் அளவிடற்கரிய காந்தசக்தி உண்டு என்பதைக் கண்கூடாய் உணரச் செய்.    
***

கெட்ட பழக்கம் முதலில் நன்கு இனிக்கும், ஆனால் படிப்படியாக விஷமாய் மாறிக் கொல்லும். நன்னெறியோ முதலில் சற்று கசந்தாலும், முடிவில் அமிர்தமாய் இனிக்கும். இந்த சூக்ஷும விஷயத்தைப் புரிந்து செயல்பட எங்களுக்கு விவேகத்தைக் கொடு.  

#PHD

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

பரமான மெய்யொளியே! கதிரவனின் வெப்பக் கதிர்களில் ஆகட்டும், நிலவின் குளிர்க் கிரணங்களில் ஆகட்டும், நீ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தே நிற்கின்றாய். வான விளக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எல்லாம் இயற்கைக் கன்னியை மட்டுமே, உன்னை அல்ல.

ஸ்தூலதீபங்கள்அடையாளம் காட்டும் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு, என்னைப் பொறுத்தவரை  இருள்மயமானதே. இம்முழுப் பிரபஞ்சத்தை உருமாற்றித் தோற்றுவிக்கும், உன் மறைவான ஒளிப்பிரகாசத்தைக் காண என் பார்வைக்குச் சக்தி கொடு.

நான் கண்மூடி அமர்ந்து, நிழல்களைக் கொண்டு நானே பின்னிய என் எண்ணவலையினில் சிக்கித் தவிக்கும் போது, நீ வண்ணமயமான காலைக் கதிரவனாய், மெய்ஞ்ஞானப் பிரகாசத்துடன் எனக்குக் காட்சியளி! இப்பிரம்மாண்டத்தில் செயல்புரியும் உன் லீலா விநோத நடனத்தை, கலைக் கண்களுடன் நான் ரசிக்க எனக்கு வரம் தா!

ஓம் ஸ்ரீ ஸத்குரவே சரணம்

#PHD