செவ்வாய், 30 அக்டோபர், 2007

இறைவா! எங்கள் முதல் கடமை நின்னதே

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

O LORD, OUR FIRST DUTY IS TO THEE
By Paramahansa Yogananda

இறைவா! தன்னந்தனி நின்று அதுதான் என்றறியும்
உன் புண்ணிய கடமையைச் செய்வதைத் தவிர
வேறெந்தவொரு வேலையும் முக்கியமல்ல. ஏனென்றால்,
எந்தவொரு காரியம் செய்யவும் நீ தான் எங்களுக்கு
சக்தி கொடுத்து செயல்புரிய வைக்கின்றாய்.

உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பேனாக.
ஏனெனில், உன்னருட் கொடையான உலக
வாழ்க்கையும், பேரன்பும் இன்றி நாங்கள் வாழவோ,
அன்பு செலுத்தவோ ஒருக்காலும் இயலாது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

திங்கள், 29 அக்டோபர், 2007

நான் உன்னுள்ள மிகுதியுடன் எல்லா கள்ளங்கபடமற்ற இன்பங்களையும் சுவைப்பேனாக

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

MAY I SAVOR WITH THY ZEST ALL INNOCENT PLEASURES
By Paramahansa Yogananda

திவ்ய மாதா! நான் மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொடு.
நான் என் உலக கடமைகளை சிறப்புடன் செய்தும், படைப்பின்
எண்ணிலடங்கா எழிலினை ரசித்தும் திளைப்பேனாக.
என் புலன்கள் ஆச்சரியமான உன் இயற்கைவனப்பைப்
பார்த்துக் கொண்டாட நீ உதவு.

நான் உன் உள்ளமிகுதியுடன் எல்லா கள்ளங்கபடமற்ற
இன்பங்களையும் சுவைப்பேனாக. என்னை தவறான
எண்ணங்களிலிருந்தும், அநாவசியமான ஆனந்தக்கொல்லி
மனோநிலைகளிலிருந்தும் காப்பாயாக.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
உள்ளமிகுதி - zest
ஆனந்தக்கொல்லி மனோநிலை - kill-joy attitude

வியாழன், 25 அக்டோபர், 2007

உனது மாயாசக்தி

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

THY MAGIC POWER
By Paramahansa Yogananda

என் கண்கள் நீ பார்ப்பன பார்க்கட்டும்.
என் காதுகள் அலையலையாக வரும் படைப்பில்
ஒலிக்கும் உன் குரலோசையைக் கேட்கட்டும்.
என் வாக்கு கசந்து கருகிய நெஞ்சங்களில்
அமிர்த ஊற்றாக வார்த்தைகளைப் பொழியட்டும்.
என் உதடுகள் உன் அருளும் இன்பமும் பொதிந்த
பாட்டுக்களையல்லது மற்றதைப் பாடமலிருக்கட்டும்.

அன்பே! சத்தியத்தின் வேலையை என்மூலம் செயல்படுத்து.
என் கைகள் என்னெல்லா சகோதரர்களுக்காகவும்
முனைப்பாக பணிசெய்யட்டும்.
என் குரல் எப்பொழுதும் உன்னன்பின் விதையை
நாடும் நெஞ்சங்களில் விதைக்கட்டும்.
என் கால்கள் சரியான செயல் பாதையில் ஓயாமல் இயங்கட்டும்.
என்னை இருள் மலிந்த மருட்சியிலிருந்து ஞானஜோதியில் சேர்.
என்னை நில்லாத சிற்றின்பங்களிலிருந்து விடுத்து
உன் ஆராத இன்பத்தை என்னுள்ளே அனுபவிக்கச் செய்.
உன்னருள் என்னன்பாகட்டும்; அதன்மூலம் அனைத்தையும்
எனதென போற்றுவேன்.

அப்பா! என்னிதயத்தில் துடித்துக்கொண்டேயிரு, எல்லா
உயிர்கள் மீதும் கருணை பொங்கட்டும்.
உன் ஞானக்கனலை என்னுள்ளே தூண்டிவிடு, இகபோக
சுகமென்னும் அடர்ந்த காட்டைத் தீக்கிரைக்காக்கட்டும்.
உன் திறம் என்னுக்திக்கு குருவாகட்டும்.
என் எண்ணங்கள் மூலம் எண்ணுக; ஏனெனில்
உனது மாயாசக்தி தான் என் மனதை உன் மனதாகவும்,
என் கைகளை உன் கைகளாகவும்,
என் கால்களை உன் கால்களாகவும்,
என் ஆத்மாவை உன் இருப்பிடமாகவும்,
உன் புனிதசெயல் செய்யும் வண்ணம் அமைத்திருக்கிறது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

திங்கள், 22 அக்டோபர், 2007

தப்பான கருத்துக்களிலிருந்து என்னைக் கார்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

SAVE ME FROM WRONG BELIEFS
by Paramahansa Yogananda

நான் தப்பான கருத்துக்களாலான தரிசு நிலத்தில் தொலைந்து,
வழி தெரியாமல் தவிக்கிறேன். கருணைக் கடலே! என்னை
உன்னிடத்தில் வழிநடத்து; அதுவே என் நிரந்தர வீடு.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

சனி, 20 அக்டோபர், 2007

உன் பிரபஞ்சத் திரையை நீக்கு

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

REMOVE THOU THE VEILS OF CREATION
By Paramahansa Yogananda

இறைவா! பிரபஞ்சப்பொருட்கள் உன்னை என்னிடமிருந்து
மறைக்கின்றன. இன்னும் எத்தனை காலம் தான் இந்த அழகிய
அல்லி, ரோஜா மலர்கள் பின்னும் தங்க வண்ண முகில், நட்சத்திரம்
பொதிந்த அரவமற்ற வானம் பின்னும் ஒளிந்திருப்பாய்? ஓர் ஆறுதல்!
இவை உன்னை மறைத்த போதிலும், உன்னிருப்பை குறிப்பால்
உணர்த்துவதால் என் மனத்தைக் கவர்கிறது. ஆயினும், உன்
பிரபஞ்சத் திரை நீக்கப்பெற்று, உன்னை உண்மையில்
தன்னந்தனியாக காண ஏங்குகிறேன்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

வெள்ளி, 19 அக்டோபர், 2007

கர்வப்படாமல் இருக்க உபதேசி

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

HUMILTY AFFIRMATION
By Paramahansa Yogananda

என்னுடைய எல்லா சக்தியும் உன்னிடமிருந்து கடன்கொண்டவையே.
எந்தையே! எவரும் உன்னைவிட பெரியவர் அல்லர். உன் ஞானமும்,
வலிமையும் இல்லாமல் நான் வாழவோ செயல்படவோ முடியாது.
நீ மிகப் பெரியன்! நானோ அடிப்பொடியன்!
நான் ஒருபோழ்தும் கர்வப்படாமல் இருக்க உபதேசி.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

புதன், 17 அக்டோபர், 2007

பழக்கத்தினாலன்றி சுதந்திரவுரிமை கொண்டு செயல்பட

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

MAY I ACT FROM FREE CHOICE, NOT HABIT
By Paramahansa Yogananda

எந்தையே! நில்லாத புலனின்பத்தை விடுத்து ஆத்மாவின்
நிலையான பேரின்பத்தை நாட கற்றுக் கொடு.

தன்னிச்சையை உரப்படுத்து. அதன் மூலம் தீய
பழக்கத்தை ஒழித்து, தவத்தின் சிறந்த பெரியாரின் துணை
கொண்டு, த்யானத்தினால் என்னைச் சீர்படுத்துவேன்.

அற வழியில் ஆனந்தமாய்ச் செல்ல எனக்கு ஞானத்தை
அருள்வாயாக. தீயன நுண்ணியதாயினும் அறிவறிந்து,
பணிவான நற்பாதையில் என்னை வழிநடத்த என் ஆத்ம
குணமான பகுத்தறியும் ஆற்றலைச் செம்மைப்படுத்துவாயாக.

முற்றிய பழக்கத்தினாலன்றி கடவுளருளிய சுதந்திரவுரிமை
கொண்டு என்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வேன்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
தன்னிச்சை - (self) will