வியாழன், 31 டிசம்பர், 2020

30. நீ புத்தராய் என்னிடம் வருக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ புத்தராய் என்னிடம் வருக.

புத்தரே, உன் கருணைச் சொற்பொழிவுகளின் பொன் நாளங்கள், இருள்மண்டிய, கல்நெஞ்சங்களில் விரவி அவைகளின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கியது.   

நீ துறவில் வானைத்தொடும் மகிமை பெற்றவன். உன் கடவுட்நோக்குக்  கண்களுக்குக் கீழ், புலன்சுகங்கள் தரும் ராஜ்ஜியம், பருமையான பேராசை நதிகள், காமத்தால் எரிக்கப்பட்ட பரந்துவிரிந்த ஆசைப் பாலைவனங்கள், உயர்வான அநித்தியக் குறிக்கோள் மரங்கள், அரிக்கும் உலக-கவலைக் கள்ளிச் செடிகள் - என இவையாவும் உருகி கண்ணுக்குப் புலனாகாமல் சிறுத்து மறைந்தன. 

புத்தரே, உன் தயையின் ஒளிவீச்சு குரூர நெஞ்சங்களின் கடினத்தை உருக்கி இளக்கியது. நீ ஆட்டின் உயிரை பலியினின்று காக்கும் பொருட்டு, அதற்குப் பதிலாய் உன் உயிரையே தியாகம் செய்ய முனைப்பட்டாய்.

ஆனந்தக்களி-லயத்தை நாடும் நெஞ்சங்களைத் தேடி, உன் சாந்தமான எண்ணங்கள் இன்னம் மனவெளிகளில் அமைதியாக பவனி வருகின்றன. 

போதி ஆலமரத்திற்கடியில் அமர்ந்து, நீ பேருணர்வுடன் அமைதியான ஒரு சபதத்தை மேற்கொண்டாய்: 

"ஆலமரக் கிளைகளுக்குக் கீழே,
புனித ஆசனத்தில் அமர்ந்து நான் இச்சபதம் செய்கிறேன்:
தோல், எலும்புகள், அநித்திய சதை - இவை கரைந்து மறைந்தாலும் சரி;
நான் வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்து,
அனைவரும்-நாடும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை அடையும்வரை,
இவ்விடத்திலிருந்து நான் ஒருபொழுதும் அசையமாட்டேன், இது உறுதி."

நீ கருணையின் சின்னம், தயையின் அவதாரம், உன் உறுதியை எங்களுக்கும் அளி, அதன்மூலம் நாங்களும் உன்னைப் போலவே விடாமுயற்சியால் மெய்ம்மையை நாடுவோம். நாங்களும் உன்னைப் போல மெய்விழிப்புணர்வு பெற்று, பிறரின் சோகத்துடிப்புகள் நிவிருத்தியடைவதற்காக நாங்கள் எங்களுக்காக எப்படி நாடுவோமோ அப்படி அவர்களுக்காகவும் நாட எங்களுக்கு அருள்புரி.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
30 Come to me as Buddha.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 29 டிசம்பர், 2020

161. பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.

எல்லையற்ற பேருணர்வே, பயப்படுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை எனக்கு நன்கு புரியுமாறு கற்பி. மரணம் என்பது ஒருமுறை நேர்ந்தால், அது மறுபடியும் வரப்போவதில்லை என்பதை என் நினைவில் நிறுத்த உதவு; எப்போதோ அது நேரும்போது, இயற்கையின் கருணையால் அதைப் பற்றிக் கவலை ஏதுமின்றி, என் அறிவிற்கு எட்டாமலேயே அது நேர்ந்துவிட்டுப் போகட்டும். அதனால், நான் அனாவசியமாக மரணத்தை நினைத்து நடுங்கத் தேவையில்லை.   

நானே கற்பித்துக் கொண்ட விபத்தின் பயங்கரத்தினாலே என் நரம்புநாளங்களை முடக்கி, அதனை ஒருக்கால் நிஜமாகவே நடக்குமாறு செய்துவிடாமல் இருக்க எனக்குக் கற்பி.

வாழ்க்கையின் கஷ்டங்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள, உன் குழந்தையாகிய எனக்கு அளித்த வரம்பற்ற ஆற்றலை நான் பயத்தினால்  மூர்ச்சையடைவிக்காமல் இருக்க எனக்கு அருள்புரி. நான் உறங்குகையிலும், விழித்திருக்கையிலும், கவனத்துடன் இருக்கும் போதும், கற்பனைக்கனவு கண்டுகொண்டிருக்கும் போதும், உன் எல்லாம்-புரக்கும் இருப்பு என்னைச் சூழ்ந்துள்ளதை நான் அறியுமாறு செய்.

நான் இதை நன்கு உணரும்படி செய்: உறுதியான, மனிதனால் கட்டப்பட்ட கோட்டைக்குள்ளே நான் அங்க கவசங்களை தரித்திக்கொண்டு இருந்தாலும், நீ என்னுடன் கூடி இல்லையெனில் நான் நோய், பூகம்பம், விபத்து இவற்றிற்கு ஆளாகக்கூடும். மாறாக, துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பறந்து கொண்டிருப்பினும், பாக்டீரியக் கிருமிகள் நிறைந்த இடத்திலும், நீ என்னுடன் இருப்பாயெனில் எக்காலத்திலும் காக்கும் உன் கோட்டை மதில்சுவரின் பின் பத்திரமாக நான் இருப்பேன்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
161 Demand to be able to conquer fear.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 28 டிசம்பர், 2020

60. உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.

என் ஆன்ம-ஆன்டெனாவை நுட்பமாகத் தொட்டு மாறுபாடுகள் செய்து, என் உள்ளொலி வானொலியை ஒத்ததிர (tuning) வைத்தேன். முதலில், நான் உன் அருகிலிருந்து வரும் குரல்களைக் கிரகித்தேன் - ஓர் ஆன்ம-இயைபின் பேரின்னிசைக் கச்சேரி, என் பாடும் இதய உணர்வு வாத்தியக்குழுவின் இனிமையான மெல்லிசை, பன்நெடுங்காலமாய் உனக்காக ஏங்கும் என் தாபங்கள் ஒன்றுபட்டு எழுப்பிய கூட்டிசை - இவையாவும் என் ஆன்ம வானொலியில் இசைத்தன. நான் மேலும் என் கிரகிப்பு மாறுபாடுகளைத் தொடர்ந்து செய்து, எல்லா ஜீவாத்மாக்களின் பரதேவதையான உன் குரலைக் கிரகிக்கக் காத்திருந்தேன்.   

வரம்புகாணா பொறுமையுடன் நான் தொடர்ந்து நுட்பமாற்றங்களைச் செய்து கொண்டிருந்தேன்; அப்படியே நான் கண்ணயரப் போகும் வேளையில், உன் கீதம் என் இதயத்தில் துடிப்புடன் ஒலித்தது. உன் கீதங்களின் இன்னிசைத் தொகுப்பை என் வாழ்வின் குரலினால் பாடி அதனை நான் பரவலாக ஒலிபரப்புவேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
60 I will broadcast my Voice with the Chorus of Thy Songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 26 டிசம்பர், 2020

62. குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.

சாத்துக்குடிப் பழம் நசுக்கப்படினும் அல்லது கடிக்கப்படினும் எப்படி தனது இனிய சாற்றை வழங்கத் தவறுவதில்லையோ, அப்படி நானும் ஒழுக எனக்குக் கற்பி. கருணையின்மையால் துன்புறுத்தப்படினும், கடுமையாக குற்றம்சாட்டப்படினும், கொடியவார்த்தைகளாலும் குரூர செயல்களாலும் அறுபட்டு புண்படினும், என் இனிமை தோய்ந்த அன்பினை இடைவிடாமல் வார்க்க எனக்குக் கற்பி.  

சோப்புச் சீவல்களைப் (soap-flakes) போல் நானும் ஆக எனக்குக் கற்பி. அவை நன்கு துவைபட்டு அடிபடினும், அவற்றின் தூய்மைப்படுத்தும் நுரைக்குமிழ்களைத் தருகின்றது. நன்றித் துரோகத்தினால் நான் சோதனைக்குட்பட்டு வெகுவாக அடிபடினும், என் ஞானத்தின் உதவிகொண்டு தூயவெண்ணிற மனப்பாங்கு நுரைக்குமிழ்களை அதற்கு மாறாக நான் வழங்க எனக்குக் கற்றுக்கொடு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
62 Teach me to give Sweet Forgiveness, though crushed by Criticism.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 25 டிசம்பர், 2020

25. ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.

ஏசு கிறிஸ்துவே - அரிய இருதயாம்புஜ மலரே! நீ புயல் கொந்தளிக்கும் உட்கோட்டமுள்ள மனங்களினாலான ஏரியில் இறங்கினாய். அதன் தீயநாற்றமுடைய இருண்ட எண்ண அலைகள் உன் இளகிய அல்லிமலர்நேர்  உள்ளத்தை அடித்துத் துன்புறுத்தின. அவற்றின் கொடிய குரூரத்தினால் நீ சிலுவையில் அறையப்பட்டாய். ஆயினும், உன் பிழைபொறுக்கும் நற்குணமணம் தொடர்ந்து வீசியது; நீ அவர்கள் தங்கள் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்திக் கொள்ள உதவினாய். அதன்மூலம், எல்லாவற்றையும் நேசத்தால் கவர்ந்திழுக்கும் உன் மணங்கமழ் மலருள்ளம் போன்று அவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள உதவியது. 

தவறுதலினால் சிதைந்த மனிதகுலத்தை நேசிக்கும் பேரருளாளா! "அவர்களை மன்னித்தருள், அவர்கள் தாம் செய்வதை அறியார்," என்னும்  உன் இயல்கடந்த வார்த்தைகள், கண்ணுக்குப் புலப்படாத, அன்பின் பேரற்புதமான வானோங்கி உயர்ந்த பெருங்கோபுரத்தை ஒவ்வொரு நெஞ்சிலும் எழுப்பியது.

நீ எங்கள் கண்களில் படர்ந்துள்ள அறியாமைப் புரையை அகற்றினாய். இப்போது, "உன் பகைவராயிருப்பினும் அவர்களை நீ உன்னை நேசிப்பது போல் நேசிப்பாயாக. அவர்களின் மனம் களங்க நோய்ப்பட்டிருப்பினும், மருளில் உறங்கிக் கொண்டிருப்பினும், அவர்கள் யாவரும் உன் சகோதரர்களே," என்னும் உன் உபதேசமொழியின் அழகைக் கண்டு அக்கண்கள் இன்புறுகின்றன.

அவர்களின் கிறுக்கடிக்கும் வெறுப்பின் உதைகளுக்குப் பதிலாக, பழிக்குப் பழிவாங்கும் தடியினால் சரமாரி அடித்து, அவர்களின் பகைமையை அதிகப்படுத்தாமல் இருக்க எங்களுக்குக் கற்றுக் கொடு. உன் மரணமில்லா தயை, கோபப் பித்தத்தினால் அவதியுறும் எங்கள் சகோதரர்களை, நாங்கள்   மன்னிக்கும் பொறுமைக் களிம்பு தடவி, அவர்களை சுகப்படுத்தி விழிப்புறச்செய்ய எங்களுக்கு நல்லூக்கம் நல்குகின்றது.

நீ சிலுவையேற்றப்பட்ட நிகழ்ச்சி, நாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வின் சோதனைகளை: பொறுமையைச் சோதிக்கும் தொந்தரவுகள், அறிவை மயக்கும் அறியாமை, புலனடக்கத்தை நடுக்கும் ஆசைகள், அன்பைத் தகர்க்கும் தப்பெண்ணங்கள் போன்றவைகளை நாங்களும் எதிர்கொள்ள நினைவுறுத்துகின்றது.

சிலுவையில் உன்னை அறைந்த கடும்சோதனை, அறியாமையை ஞானம் வெல்லும், ஊனுடம்பை ஆத்மா வெல்லும், துக்கத்தை சுகம் வெல்லும், வெறுப்பை அன்பு வெல்லும் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சோதனைகளை வீரத்துடன் எதிர்கொள்ள, இச்சம்பவம் என்றும் அழியாத உதாரணமாய் எங்களை உரப்படுத்தட்டும். 

அராஜக அவதிகளுக்குப் பதிலாக பணிவின் இனிமையை அளித்திடவும் , கவலைத் தாக்குதல்களை சாந்தமான பொறுமையினால் தாங்கவும், தவறாகப் புரிந்துகொண்டு எங்களை வெறுப்பவர்களுக்கு நன்மைபயக்கும் புரிதலை இடையறாமல் அளிக்கவும் எங்களுக்குக் கற்றுக் கொடு.

ஆன்மாக்களின் நன்மேய்ப்பனே! அலைந்து திரியும் நெஞ்சங்கள் எல்லாம் ஒருமை பக்தியையே நாடுகின்றன. எங்களை இடைவிடாமல் அழைக்கும் உன் வரம்பற்ற கருணையிசையை நாங்கள் கேட்டுவிட்டோம். எங்கள் ஒரே விருப்பம்: உன்னுடன் நம் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்து, நம் பிரபஞ்சப்  பரமபிதாவை ஆனந்தமாய், ஞானக் கண்களைத் திறந்து வரவேற்று, நாம் அனைவரும் நம் ஒரே கடவுளின் குழந்தைகளே என மெய்யாக அறிவது தான்.  

எல்லா சகோதர-உள்ளங்களும் ஒரே கடவுள்நெறியின் கீழ் ஒன்றுபடுவதைத் தடுத்துக் கூறுபடுத்தும் சுயநல சாத்தானை நீ வென்றதுபோல் நாங்களும் வெற்றி கொள்ள எங்களுக்குக் கற்பி.

நாங்கள் ஒருவரையொருவர், "உன்னை நேசிப்பவரை நீ நேசி; உன்னை நேசிக்காதவர்களையும் நீ நேசிப்பாயாக," என்னும் உன் உறுதிபயக்கும் மொழியினால் அரவணைத்து, பிரபஞ்ச நோக்குடைய ஒருமை-கிறிஸ்துவின் வானத்தினடியில் ஒன்றுகூடி அணிவகுத்துச் செல்வோமாக. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
25 Come to me, O Christ, as the Divine Shepherd of Souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       
------

வியாழன், 24 டிசம்பர், 2020

90. அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.

பரலோகத் தந்தையே, கடந்த காலத்தில் உன்னைப் புதிதாய்க் கண்டுகொண்ட ஒரு அனுபூதிமான் எப்படி உன்னை அன்புசெய்துப் பிரார்த்தித்தாரோ, அத்தகைய அன்பையும், பிரார்த்தனைகளையும் என் இருதயத்தில் தினமும் நிரப்பு. உன்னை யாரெல்லாம் இதுவரை நேசித்துக் கண்டுகொண்டார்களோ அவ்வனைத்து அனுபூதிமான்களின் அன்பினையும் என் இருதயத்தில் நிரப்பச் செய். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
90 Demand to love God as all Saints love Him.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 21 டிசம்பர், 2020

45. என் கனவுகளின் சோலைக்கு வா.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் கனவுகளின் சோலைக்கு வா.

என் கனவுகளின் சோலையில் பல கனவு-மலர்கள் பூத்தன. என் கற்பனையில் மிக அரிய பூக்கள் எல்லாம் அரும்பின. என் கனவுகளின் கதகதப்பில்  இன்னம் விரியாத மொட்டுக்களான நிலவுலக விருப்பங்கள் துணிவுடன் தங்களின் பூர்த்தியடைவெனும் இதழ்களை  விரித்தன. மங்கிய வெளிச்சத்தில், நான் மறந்துபோன என் அன்புக்குரியவர்களின் முகங்களை ஒற்று பார்த்தேன்; வெகுகாலத்திற்கு முன் மரித்து மனநிலத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட நேச உணர்வுகள் பிரகாசமான உடைகளை உடுத்திக்கொண்டு பீறிட்டுக் கிளம்பின. என் கனவு-தேவதைகளின் ஏவலுக்கு, என் எல்லா அனுபவங்களும் புனர்ஜென்மம் பெறுவதை நான் கண்டேன்.

என் கனவுகளின் மற்றும் எண்ணற்ற கனவுலகங்களின் அரசே, உன் கனவு-கேலக்ஸிகளில் (பலகோடி விண்மீன்களின் கூட்டத் தொகுப்பு) , நான் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனாய் இருக்க விரும்புகிறேன்; அல்லது உன் அன்புக்குரிய சிறு கனவு-விண்மீனாக உன் பிரபஞ்ச கனவுகளின் மன்றத்தில் நான் உன்னருகில் மின்ன விழைகிறேன்; அல்லது, அப்படி உன் கனவு மணிமாலையில் வாழ்க்கையின் ஒரு சிறு விண்மீன்-மணியாக நான் ஆகமுடியாவிடில், உன் கனவுகளின் நெஞ்சத்தில் எனக்கு எளிமையான ஒரு இடத்தைக் கொடு.  

உன் இருதய வாசஸ்தலத்தில், நான் புனிதமான வாழ்க்கைக் கனவுகள் உதயமாவதைக் காண்பேனாக. கனவுகளை நெய்வதில் தலைசிறந்த நிபுணனே, உன் நிரந்தரக் கனவுகளின் கோயிலை நோக்கிப் பயணிக்கும் உன் கனவுக் கோலங்களை ரசிக்கும் எல்லா அன்பர்களும் நடந்து செல்லுமாறு விரிக்க, பல வண்ணங்களில் கனவுக் கம்பளங்களை உற்பத்தி செய்ய எனக்குக் கற்றுக்கொடு. மேலும், திவ்யதரிசனக் காட்சிதரும் உன்னை வழிபடும் தேவர்கள் குழாத்துடன் நானும் சேர்வேனாக. அவர்களுடன் சேர்ந்து, புதிதாக உதித்த உன்னைப் பற்றிய என் கனவுகளின் மலர்க்கொத்தை நான் உன் சந்நிதியில் சமர்ப்பிப்பேன்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
45 Come into the Garden of my Dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 19 டிசம்பர், 2020

64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி.

கண்மறைக்கும் தவறுகளின் இரவினில், நாங்கள் சதக்க-வெளிச்சம் போன்ற போலி சுகத்தை நாடிச் சென்றோம். இருளுக்கு மேல் இருள் கவ்வியது. முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த எங்கள் கால்கள் சறுக்கி பாசம் மண்டிய மோகக்குழப்ப சதுப்புநிலக் கழியில் நாங்கள் வீழ்ந்தோம். இந்த மயக்கும் புகைமூட்டத்தினால் ஏற்படும் ஆசைக்கனல், பலபேரை அழிவிற்கு இழுத்துச் செல்கிறது. பல்லாயிரக் கணக்கானோர் திகட்டும் புலனின்ப சதக்கலில் மூழ்குகின்றனர். 

கைகொடுக்கும் தெய்வமே, உன் வீடுநோக்கிப் பயணிக்கும் உன் ரத்தபந்தங்களை தடுமாற்றி நாசமேற்படுத்தும் இந்தப் பொய்யான பந்தவிளக்கை ஊதி அணை. அதற்கு மாறாக, உன் புனித ஒளிவிளக்கை ஏற்று; அதன் துணையால், ஆவலுடன் விரையும் உன் குழந்தைப் பயணிகள் பாதுகாப்பாக உன் வீட்டை வந்தடைவார்கள்.

---
"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp): இரவு வேளைகளில் சதுப்புநில சகதிப் புதர்களிலிருந்து பாக்டீரிய கிருமிகள் மட்கும் செயல்களால் ஒரு வகை வெளிச்சம் தோன்றும். இந்த இரவுநேர வெளிச்சம் பகல்வேளைக் கானல்நீரைப் போன்றது.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
64 Teach us not to follow the Will-o'-the-Wisp of False Happiness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 12 டிசம்பர், 2020

9. ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மூடி மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.

ஓ தெய்வக்காளி அன்னையே, நீ தேச-கால-ரூப-நிகழ்வுண்மையை உருவாக்கி, ஒரு எல்லையுள்ள ஆனால் பிரம்மாண்ட வடிவெடுத்து, எல்லாவற்றிற்கும் இடம்கொடுக்கும் இயற்கை மூர்த்தியாகத் தோன்றுகிறாய். புலனாகா பரப்பிரம்ம உணர்வே புலனாகும் ரூபத்தில் தெய்வத்தாயான உன் வடிவை எடுத்துள்ளது. அனைத்தையும் காத்து ரட்சிக்கும், தாயின் கருணையால் துடிக்கின்ற இதயம் உன்னுள்ளே உறைகின்றது. 

ஓ மகாமாயீ அம்பாளே! சந்தியாகாலம், நிசியெனும் உன் இரு புருவங்களுக்கு மத்தியில் சந்திரனே அழகுப்பொட்டாய் அமைந்துள்ளது. நிரந்தரத்தின் மேகங்கள் உன் முகத்தை மூடிமறைக்கின்றன. அருளாளர்களின் வாழ்வெனும் பருவக்காற்று அவ்வப்போது உன் மர்மமான முகத்திரையைத் துணிவுடன் பொருத்தமாக விலக்கி, எங்கள் அறியாமைப் பார்வைக்குப் புலப்படாத உன் திருமுகத்தை சிறிதுகாலத்திற்குப் புலப்படுத்துகின்றது. 

ஓ மகாமாயீ அம்பாளே, தோற்றத்தின் விடிவுகாலத்தில் நீ நாகரீகம் வளராத பிராகிருத கோலத்தில் சிறு, பருவான பொருட்களுடன் பக்குவமற்ற மனங்களாலான உடைகளையும், கரடுமுரடான இயற்கைக்  கிரீடமும் அணிந்துகொண்டு காலப்பாதையில் சுற்றுவதை நான் கண்டேன். 

தோற்றத்தின் பகல்பொழுதில், தங்கள் பொருளாசைத் தீயினால் வெந்து புழுங்கும் ஜீவாத்மாக்களையும், பளீரெனத் துலங்கும் மனங்களாலாலுமான ஆடை போர்த்திய கோலத்தைக் கண்டேன். உன் செயல் உடம்பு ஆரவாரத்தில் வியர்வை சிந்தியது. உன் எல்லா மக்களும் போராட்டத்தின் வெம்மையைத் தாங்கமுடியாமல், சாந்தமெனும் குளிர்த்தென்றலை அனுப்புமாறு அவர்கள் உன்னிடம் வந்து முறையிட்டனர். 

உன் மத்தியான மனோ வஸ்திரத்துடன், நீ விழாக்கோலமான பல நூற்றாண்டுகளைக் கடந்து பெரும் கனவு கண்டுகொண்டு பயணம் செய்தாய். மனித வாழ்வு-சாவு, கோளங்களின் வளர்வு-சிதைவு, நாகரீகங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளி ஆவிப்படரால் (nebulae) உருவாக்கப்படும் உலகங்கள் - இப்படி புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட கோளங்கள், நிலநடுக்கங்கள், முடிவுறாத பிரளயங்கள் என ஒரு பெருங்கனா.  

அப்புறம் கருமையான இரவு நெருங்கியது. நீ இறுக்கமான, சோகக் கருந்திரையை உடுத்திக் கொண்டு, பிரபஞ்சத்தை பயங்கரமான, ஆனால் சுத்தப்படுத்தும், பிரளயத் தீயில் போட்டுப் புரட்டினாய். சூரியன் வெடித்து, நெருப்பைக் கக்கியது; பிரளய பூகம்பம் வானத்தைப் பிளந்தது; விண்மீன்கள் வானிலிருந்து கனலுடன் நழுவி விழுந்தது; முழுத் தோற்றமும்  பெரும்சுடருடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்புலையாய்க் காட்சியளித்தது. எல்லாமே நெருப்புமயம்: பொருள்கள், பாபம், இருள் என இவையனைத்தும் உன் தீக்குவையில் இடப்பெற்று, அதில் அவை தூய்மையடைந்து பிரகாசமாய் ஒளிவீசின.   

பிரபஞ்சத் தோற்றம் நெருப்பிலிருந்து உருவானது: பொருட்களின் சாம்பலுக்குக் கீழ், தகதகக்கும் பிரபஞ்சம் உறங்கியது; அத்தோற்றம் உன் கரங்களினால், ஓ மகாமாயீ, உலுக்கிவிடப்பட்டு அது தனது சுடரொளி விடும் உடம்பினை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது.

சக்தியினாலான உன் ஒரு கையினால், கட்புலனாகா ஆக்கசக்தியை எழுப்பி, பலவண்ணங்களில் வரம்புக்குட்பட்ட அழகிய ரூபங்களைப் படைக்கின்றாய். மற்றொரு கை, பாதுகாக்கும் சூட்சும அரிவாளைக் கொண்டு, அனைத்து கோளங்களையும் அதனதன் பாதையினில் கதி தவறாமல் சுழற்றிக் காக்கின்றது. உன் மூன்றாவது கை, பிரபஞ்சத்தின் அறுபட்ட தலையைப் பிடித்துக்கொண்டு, பிரளயத்தின்போது எல்லா அகிலாண்டமும் உன்னுள்ளே தான் உறங்குகின்றது என்பதை சூசகமாக உணர்த்துகிறது. உன் நான்காவது கை, மோகக்குழப்பச் சூறாவளிகளைத் தடுத்து அமைதிப்படுத்தி, நாடுகின்ற பக்தர்களுக்கு மோட்சத்தின் ஒளிக்கிரணங்களை நல்குகின்றது. 

ஓ காளி, நீ மனிதமனங்களைத் தார்மாலையாய் அணிந்து ஆக்கச்செயல்களின் ஆழ்ந்த தோற்றுவாயான ஜனனியாய் விளங்குகிறாய்; உன் பாதம், உன் வரம்பற்ற-கட்புலனாகா-பதியாம் சிவபிரானின் அனைத்திற்கும் அப்பாற்பட்ட நெஞ்சினைத் தொடுகையில் மட்டுமே, உன் பிரபஞ்சத் தோற்றத்தின் கோர நடனத்தின் ஆட்டம் முழுதுமாக நிற்கின்றது. அவ்வமயம் தோன்றிய அகில பிரபஞ்சமும், சிவனிடம் லயம் அடைகின்றது.

ஓ முன்னேற்றத்தின் தாயே, உன் வாழ்க்கை நடனத்தை நான் இயற்கை இயைபுடன் வாழ்வோரின் எளிமையான சிரிப்பு மணிகளினில் காண்கின்றேன். என் தளிர்க்கும் எண்ணங்களின் தளத்தில், உன் அண்டகோளங்களின் இசையை ஒத்திசைக்கும் உன்  உற்சாகமூட்டும் எண்ணங்கள் மெதுவாக நடனம் புரிகின்றன.  

பிரபஞ்சத்தோற்றச் சபையில், ஓ காளி, பலத்த அதிரடியுடன் இடிக்கும் மின்னலிலும், சன்னமாக ரீங்காரிக்கும் அணுக்களிலும் என எல்லாப்புறங்களிலும் நான் உன் திருவடித் தாளத்தைக் கேட்கிறேன்.

வரம்பற்ற பரம்பொருள் புரிபடாத மாயமோகத்தினடியில் உறங்குகின்றது; இருப்பினும், பரத்தின் நெஞ்சிலிருந்து புறப்பட்டு, ஓ ரூபங்களின் இறைவியே, உன் எல்லைக்குட்பட்ட அற்புத நடனங்கள் துவங்குகின்றன. என் ஆன்மத்துடிப்பைக் காட்டிலும் அருகாமையிலே நீ நாட்டியமாடுகின்றாய்; உன் பாதங்கள் எழுப்பும் கூட்டு இசையோசையை என் மனத்தின் வெகுகோடியில் உள்ள திசையந்தத்திலும் நான் கேட்கின்றேன். ஓ மகமாயித் தாயே, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடு; ஆனால், நான் உன்னை இறைஞ்சுகிறேன்,  என் ஆன்மாவின் புனித சந்நிதியில் உன் அற்புதத் திருவடிகளின் இசையை என்றும் விடாமல் தொடர்ந்து இசைப்பாயாக!       

ஓ காளி மா, உன் மாறிக்கொண்டேயிருக்கும் உடுப்புகள் தோற்றத்தின் ஆக்குதல், காத்தல், அழித்தல் எனும் கனவு நூல்களால் நெய்யப்பட்டுள்ளது. தெய்வத்தாயே, உன் அழகிய மனத்திரையில் பலகோடிப்  பிரபஞ்ச சினிமாப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனால், உன் நல்ல குழந்தைகளை உல்லாசமாய் பொழுதினைக் கழிக்கச் செய்கின்றாய்; உன் விஷமக் குழந்தைகளை பயமுறுத்துகின்றாய்.  

இறையன்னையே, உன்னை மூடியுள்ள இந்த பளபளக்கும் பிரபஞ்ச சலச்சித்திரத் திரையை நீ விலக்கிக்கொள்; மோகத்தை அழிக்கும் உன் கருணை முகத்தை எனக்குக் காட்டு. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
9 Thou Mother of Flames, show Thy Face, hidden beneath the veil of Cosmic Motion Pictures.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

செவ்வாய், 8 டிசம்பர், 2020

49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

உன் பிரபஞ்ச இருப்பெனும் வானில், உன் வெளிப்பாட்டு மழைத்துளிகளைத் தாகத்துடன் எதிர்நோக்கும் நான் வாழ்க்கையின் ஒரு மேகபட்சி. வதைக்கும் மோன மேகங்களை ஊடுருவி உன் எங்கும் வியாபித்த மழையைப் பொழி.    

வற்றி வாடும் என் உதடுகளைத் தீண்டும் உன் ஒவ்வொரு மழைத்துளிக் காட்சிக்காகவும் நான் கவனத்துடன் எதிர்பார்க்கிறேன். நீ வருகையில் உன்னை நான் அருந்தி உட்கொள்வேன்; வெளிப்புறத்தில் என் நலிந்த உடலின் மேல் சன்னமாகப் பொழியும் உன் மழைத்துளி அனுபவஉணர்வுகளான பாதங்களை நான் வருடி அணைத்துக் கொள்வேன். 

இந்த என் நீண்டகாலத் தாகம் உன் தீண்டலினால் மட்டுமே தணியும். அது ஏங்கும் என் ஆன்மாவை உள்ளுமாகவும், விடாமுயற்சியினால் தகிக்கும் என் உடலைப் புறமுமாகவும் குளிர்விக்கும். என் அவநம்பிக்கை, சோர்வுச் சூறாவளிகள் கடந்துவிட்டன. உன் மழைத்துளி சாந்தம் என்னுள்ளே உள்ள ஒவ்வொரு வறண்ட அணுவையும் நனைத்துக் குளிர்விக்கின்றது. இனி நான் உன் திருப்தி கானத்தைப் பாடிக்கொண்டே எல்லாத்திசைகளிலும் சிறகடித்துப் பறந்துசெல்வேன்.

சொர்க்க லோகங்களின் வழியே பொழியும் உன் எங்கும்நிறை கனிவான ஆறுதலெனும் மழைநீரைத் தவிர வேறு எந்த குடிநீரையும் தேடிச் செல்லாத வகையான உன் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
49 Make me the Lark of Life, looking only for Thy Rain.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 7 டிசம்பர், 2020

125. உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும், உள்ளந்தோறும் பறப்பேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும்,  உள்ளந்தோறும் பறப்பேன்.

என் தந்தையே, ஒரு மலையுச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு உன்னுடன் சேர்ந்து பறந்து செல்ல எனக்கு அனுக்கிரகம் செய். 

பசும்புல்வெளியின் மேல் நான் மல்லாக்கக் கிடந்து உனது பாட்டை பறவைகளை நோக்கிப் பாட எனக்கு அனுக்கிரகம் புரி. 

மனித இதயங்களில் நான் ஊடுருவி உன் புகழ்கானத்தை அவைகளில் இசைவிக்க எனக்கு அருள் செய்.

நான் நட்சத்திர மண்டல விளிம்பினைச் சுழன்று சுற்றி, உன் பெயரை சுடரெழுத்துக்களால் அங்கு பதிக்க எனக்கு அருள்புரி. விண்துகள் ஆவிப்படரினைக் (nebulae) கொண்டு நான் உன் புனிதநாமத்தைப் பரப்புவேன்.

ரீங்காரமிடும் அணுக்களுடன் நான் கூடிச்சேர்ந்து அவைகளுடன் உன் பாடலை சுருதி லயத்துடன் இயைந்து இசைக்க எனக்கு அருளாசி வழங்கு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
125 From peak to peak and heart to heart, I will Fly, singing Thy name.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

99. கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.

தந்தையே, உனக்காக நான் ஏங்கும் ஏக்கத்தினால் தோன்றிய என் குமுறும் வார்த்தைகளைக் கொண்டு, நீ உள்ளபடி தோன்ற உன்னை வேண்டுகிறேன். என் ஆன்மாவில் அரும்பிய பிரார்த்தனைகளால் உன்னை நான் அழைக்கிறேன்: வா! நான் அறியுமாறு நீ உள்ளபடி எனக்குக் காட்சியளி!    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
99 Demand that God reveal Himself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 5 டிசம்பர், 2020

59. நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை மறவாமல் இருக்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை நினைவுகூரச் செய்.

பரம பேருணர்வே, அனைத்து அறநெறி நியதிகளையும்  நான் அச்சத்தினாலன்றி அன்பினால் பகுத்து, அறியுமாறு எனக்குக் கற்றுக்கொடு. நன்னெறி முதலில் பழகச் சற்றுக் கடினமாகவும், அதனை அடிபணிந்து நன்கு பழகியபின், அது என்னை புகழுடைய உன் இன்பத்தால் அலங்கரிக்கும் என்பதையும் நினைவுகூரச் செய். தீயவையோ ஒரு துளி சுகத்தை முதலில் அளிப்பதாகத் தோன்றினாலும், அது நிச்சயமாக முடிவில் பெருந்துக்கத்தையே அளிக்கும் என்பதையும் என் நினைவில் நிறுத்து.    

என் வளர்ச்சிக்கும் நலனுக்காகவும் இயற்றப்பட்டவை நன்னெறிகள்.  என் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பவை தீய செயல்கள். நான் நன்னெறி நியதிகளை மதித்துப் பழகவும், தீய செயல்களை அடியோடு விலக்கவும் எனக்குக் கற்றுக்கொடு. எல்லாக் காலங்களிலும் நன்னெறி வழிகளே தீயநெறி வழிகளைக் காட்டிலும் சாலச்சிறந்தது என்பதை நான் கண்டுகொள்ள உதவும்  பழக்கத்தை என்னுள்ளே பொதித்து விடு.

அறம் முதலில் கசந்தாலும், பின்னர் முடிவில் அமிர்தமாய் இனிக்கும்; ஆனால், தீயன முதலில் இனிப்பாக சுவைத்தாலும், எப்போதும் அவை விஷமாகவே  கடைசியில் முடியும் என்பதனை நான் என் நினைவிலிருந்து மறவாமலிருக்க நீ உதவு. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
59 Make me remember that Virtuous Ways are more charming than vicious ways.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 3 டிசம்பர், 2020

185. எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓ வாழ்வின் ரகசியமான மாண்புமிகு நீதிபதியே, உன்னை நான் என் ஆன்ம-நிஸ்சல நிலையில் "பாபம் எனப்படுவது யாது?" என வினவினேன்.  

உன் சன்னமான நிசப்தமொழி பெருகி என் எண்ண அலைகளாய் விளங்கியது. "பாபம் என்பது எதிரி-அரசனான அறியாமை" என்று உன் பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். அதுவே எல்லாவிதமான தீயவைகளும் ஏற்பட மூலகாரணம். அது நோயெனும்  மரத்திற்கு ஆணிவேர், அதுவே அனைத்து செயல் திறனின்மைக்கும், ஆன்ம-குருட்டுத்தனத்திற்கும் முதற்காரணம். 

அறியாமை அரசன், அவனுடைய படைகளான உடல்நோவை உண்டாக்கும் பாக்டீரியக் கிருமிகள், மனத்தளர்ச்சியைத் தரும் எண்ணக் கோளாறுகள், பேராசை, தவறான குறிக்கோள், கடவுளின் மேல் கவனம் செலுத்தாமை போன்றவைகளுடன் கூடி, போஷாக்கு செய்யும் ஆன்மீகப்பயிர் விளையும் நிலங்களில் அப்பயிர்களை துவம்சம் செய்வதற்கென்றே அணிவகுத்துச் செல்கின்றன.

பல்விதப் பயிர்கள் உனது அனுக்கிரகத்தால் போகமடைந்து அறுவடையாகும் சமயத்தில், அந்தத் தவறின் கொடூரமான அணிநடை அறுவடையை மிதித்து அழித்தது. நான் தாளாத் துயரத்தில் அழுகத் தொடங்கும் போது, உனது குரலோசை, "செம்மையுடன் பிரகாசிக்கும் உனது நாட்களிலும், கருமையாய் இருண்ட நாட்களிலும் எனது சூரியக் கரங்கள் உனக்கு சமமாகப் பாதுகாப்பை அளிக்கும். அதனால், நீ நம்பிக்கையுறுதி கொள், புன்னகை புரி; சந்தோஷம் இன்மையே எனக்கு எதிராகச் செய்யும் எல்லா பாபங்களிலும் கொடிய பாபம். உனது முகத்தில் என்றும் புன்னகை பூத்துக் குலுங்கட்டும். உனது கள்ளமற்ற புன்னகையின் வாயிலாய் என் ஒளி உனக்கு வந்து உதவும். நீ மகிழ்வாய்  இருத்தலே, எனக்கு நீ செய்யும் திருப்திதரும் தொண்டு!" எனச் சொல்ல நான் கேட்டேன்.  
  
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
185 Driving the Rebel-King, Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 2 டிசம்பர், 2020

5. ஆன்மீக நோக்கில் "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்மீக நோக்கில்  "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).

பரலோகத் தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான என் கடவுளே! உன் இருப்பின் ஒளிப்பிரகாசம் எங்கள் எல்லா மனங்களிலும் பரவட்டும். 

பொருளுலகத்தை நோக்கிச் செய்யும் துதி உன்னை நோக்கிச் செய்யும் துதியாய் மாறட்டும். நீ இல்லாமல் நாங்கள் எதனையும் உண்மையில் விரும்பமுடியாது. ஆகையால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் உன்னை நேசிக்க நாங்கள் கற்போமாக. உன் பேருணர்வில் உள்ள பரமான ஆனந்த ராஜ்ஜியம் எல்லா தெய்வீகக் குணங்களுடன் இந்நிலவுலகில் நன்கு விளங்கட்டும். பரிச்சேதம், குறைபாடு, துன்பங்கள் போன்றவைகளில் இருந்து எல்லா தேசங்களும் விடுபடட்டும். உள்ளிருக்கும் உன் ராஜ்ஜியம் வெளியிலும் வெளிப்படட்டும்.

தந்தையே, நாங்கள் கொடையாக உன்னிடமிருந்து  பெற்ற அறிவினைத் தவறாக உபயோகித்ததினால், ஆசையெனும் பெருங்குழியில் வீழ்ந்துள்ளோம். எங்களை அந்தக்குழியிலேயே விழுந்து  கிடக்குமாறு விட்டுவைக்காதே. நாங்கள் உள்ளதைவிட அதிக விடுதலையுணர்வும் பலமும் பெற்ற பின்னர் -- நாங்கள் உன்னை விட எங்கள் ஆசைகளை அதிகமாக நேசிக்கிறோமா என எங்களை நீ சோதித்துப் பார்க்க விரும்பினால் -- அப்போது நீ உன்னை எல்லா விருப்பங்களுக்கும் மேலான விருப்பமாய் ஆக்கிக்கொள். தந்தையே, எங்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது உன் விருப்பமெனில்,  உன் சோதனைகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெல்லுமாறு எங்கள் இச்சாசக்தி நன்கு வலிமையடைவதற்கு நீ உதவு.

எங்களுக்கான தினசரி அமுதான: உடலுக்கு உணவையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும்; மனதிற்கு செயல்திறனையும்; எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் உள்ளங்களுக்கு உன் ஞானத்தையும், அன்பையும் எங்களுக்கு நீ நல்கு. எங்கள் சுய கவனக்குறைவினால் பின்னப்பட்ட அறியாமை வலையினில் சிக்கியுள்ள எங்களை நாங்கள் மீட்டுக்கொள்ள எங்களுக்குக் கற்பித்து உதவு.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
5 Spiritual Interpretation of the Lord's Prayer
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 29 நவம்பர், 2020

184. அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.

ஓ பராசக்தித் தாயே! நான் உன் குரலால் இச்செய்தியைச் சொல்லக் கேட்டேன், "நீ வெகுகாலமாய் தவறான மனிதப் பழக்கங்களாலான கூட்டினில் அடைப்பட்டுக் கிடக்கிறாய். பட்டுஇழைகளை சேகரிக்கும் அந்தகன் வந்து உன்னை அழிக்குமுன்னர், நீ சீக்கிரம் வெளியே வா! மயக்கமுறுத்தும், சொகுசு தரும், கவரும் பழக்கங்களெனும் பட்டுக்கயிறுகளால், நீ காலனின் பிரத்தியேக  அறைக்குள் பிணைக்கப்பட்டுள்ளாய். 

"வெளியே வா! தவறுதலாக, பலவீனத்தைத் தன் சுபாவமென எண்ணி உறங்கும் மனிதப் புழுவாய் இருப்பதை விட்டொழி. மோகக் கூட்டிலிருந்து வெளியே வா! உன் வேண்டுதல்களையும், குறிக்கோள்களையும் ஆன்மீகப்படுத்தி, அதன் மூலம்  உன் இறகுகளில் வரம்பற்ற சக்தியையும், தேஜஸையும் பெருக்கி, அவைகளை விரித்துப் பரப்பு.

"வெளியே வா! நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் நீ ஆகு! இயற்கையின் எண்ணற்ற அழகுகளினால் உன் உணரும் இறகுகளை அலங்கரித்துக் கொள்; அவைகளைக் கொண்டு விண் முழுதிலும் எல்லாப்புறங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப்படுத்து.

"எல்லையற்ற வானவெளியில் உன் அழகிய இறகுகளினால் சிறகடித்துப் பறந்து செல்; அழகை ஆராதிக்கும் அனைவரையும் ஈர்த்து உன் கவின்மிகு அழகினை ரசிக்கச் செய். சூரிய-விண்மீன் பொறிகள் உன் இறகுகளினில் மினுமினுக்கும்; நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய், ஆனந்த மார்க்கத்தில் நீ சிறகடித்துப் பறக்கும்போது, உன் வழியில் தென்படும் நெஞ்சங்களினில் உள்ள கலக்கத்தை எல்லாம் அது துரத்தியடிக்கும்."  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
184 Cutting through the Cocoon of Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

வெள்ளி, 27 நவம்பர், 2020

33. ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.

எங்கள் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஒரு ஒளிச் சந்நிதியை அடைய பல நிஜ வழிகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். எல்லா மதநம்பிக்கைகளெனும் துணைவழித் தடங்களும் ஒன்றுகூடும் பொதுவான ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையை எங்களுக்குக் காண்பி. 

வேறுபட்ட மதங்கள் மெய்ம்மையெனும் உன் ஒரே மரத்தின் கிளைகள் தான் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட எல்லா ஆகம போதனைகளாலான கிளைகளிலும் தொங்கும், அறிவால் சோதிக்கப்பட்ட, கனிந்த, இனிமையான ஆத்மஞானப் பழங்களை நாங்கள் புசித்துமகிழ எங்களுக்கு அனுக்கிரகம் செய். 

உன் அமைதிக் கோயிலில் நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் அந்த ஆன்ம கீதம் நீ உன் அமைதிச் சபதத்தை மீறி, அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் நீ எங்களைத் தூக்கி அமர்த்தத் துணைபுரியட்டும்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
33 Demand to travel on the one Highway of Realization
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

புதன், 25 நவம்பர், 2020

185. நான் நிரந்தரத்திலிருந்து நிரந்தரத்திற்கு தாவுவேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் நிரந்தரத்திலிருந்து நிரந்தரத்திற்கு தாவுவேன்.

உன் மரணமற்ற ஒளிப்பொறியினால் மின்னும் என் பொன்மய நீராவி போன்ற சூட்சும உடல், பிரபஞ்ச இருப்பின் ஒரு புல்லில் இருந்து இன்னொரு புல்லிற்கு தாவிக் கொண்டுள்ளது.

வெட்டவெளி நிரந்தரத்தை நீ மாறிமாறித் தோன்றும் பலவண்ண நிறங்களாலான பசும் புற்களைக் கொண்டு ஆடையாகப் போர்த்தியுள்ளாய். நான் ஒவ்வொறு புல்லாக எல்லாவற்றையும் தாவிக் கடந்து செல்வேன். உன் காக்கும் அபயக்கரங்களில் வந்துபுகும் வரை நான் ஒரு சுகப் புல்லிலிருந்து மற்றொன்றிற்கு குதூகலத்துடன் குதித்துக் கொண்டே இருப்பேன். உன் அழகின் உயிரோட்டமுள்ள இழைகளினால் என் கள்ளமற்ற அழகிய இறகுகள் பின்னப்பட்டுள்ளன. உன் என்றும் மாறா சாம்ராஜ்ஜியத்தை நான் வந்தடையும் வரை, என்னை விடாமல் துரத்திக் களங்கப்படுத்தும் ஒவ்வொரு மாற்றத்தின் பிடியினின்றும் நான் பிடிபடாமல் தப்பிச் செல்வேன்.  

பிரபஞ்ச வளர்ச்சிப் பிறப்புகளெனும் மெதுவாய் நடைபோடும் ஒட்டகங்களில் ஏறி, இறப்புகளெனும் பாலைவனங்களைக் கடந்து, கடைசியில் உள்ளிருந்து சுரக்கும் உன் ஞானமெனும் மிருதுவான மெத்தையை அடைவதற்காக, இந்த பிராண சரீரம் ஒரு லோகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிமாறிப் பயணித்துக் கொண்டுள்ளது.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
185 I will hop from Eternity to Eternity
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

செவ்வாய், 24 நவம்பர், 2020

53. என் கனவுகளின் கடலின் நடுவே உடைபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் கனவுகளின் கடலின் நடுவே உடைந்து இடிபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.

என் கனவுகளின் கடலின் நடுவே நான் பயணிக்கும் படகு உடைபட்டது. என் இன்பசுகத் தாங்கி உடைந்து நொறுங்கி விட்டது. அச்சமுறுத்தும், சோகமான இருண்ட கனவுகளின் கடல்நீரினூடே நான் மிக்க சிரமத்துடன் தத்தளித்து நீந்தினேன். உன் கருணைக் காற்றினால், ஒரு நம்பிக்கை நல்கும் சிறுதுடுப்பு என்னருகே மிதந்து வந்தது! அதை உடனே பற்றி இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மிதந்து கடைசியில் சுகமான அமைதியெனும் பொன்மயத் தீவினை அடைந்தேன். உன் அனுக்கிரகக்  கடல்தேவதைகள் அங்கு குழுமி, என்னை நிரந்தர பாதுகாப்புள்ள உன் சாந்நித்தியத்திற்கு அழைத்துச் செல்ல வந்துசேர்ந்துள்ளனர்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
53 Save me from shipwreck on the Ocean of my Dreams
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

திங்கள், 23 நவம்பர், 2020

65. நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.

என் மனசாம்ராஜ்யம் குழப்பக் குப்பையால் மண்டிக் கிடக்கிறது. என் ஆன்ம அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட நகரத்தில் உன் சக்தி மழையைப் பொழி. என்னுள்ளே இருக்கும் கொடூரமான ஆன்ம அறியாமையை முற்றிலும் அகற்ற, உன் கருணை நீரோட்டத்தை வெள்ளமாக அனுப்பு. உன் அன்பின் பெருமழை வெள்ளம் நிற, ஜாதி, இன வேற்றுமைத் தடைகளை அடித்துத் தள்ளட்டும். 

அழுக்கடைந்த, சீர்மையில்லா என் எண்ணக்குழந்தைகளை உன் ஞானப் பொழிவினால் குளிப்பாட்டு.

என் கரடுமுரடான இருண்ட வாழ்க்கைப் பாதையில், உன் அன்பு ரோஜா மலர்களினால் தூவப்பட்ட கம்பளத்தை விரி. உன் சுகந்த மணத்தை நுகர்ந்துகொண்டு, மிருதுவான மலர்ப்பாதையில் நடைபோட்டு, விரைவில் உன் ரோஜா அரண்மனைக்கு வந்துசேர்வேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
65 May the showers of Thy love flood through the walls of Color, Class, and Race-Prejudice
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       

ஞாயிறு, 22 நவம்பர், 2020

190. ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.

பார்வையற்ற மனிதன் ஒளியின் அழகையும், மகத்துவத்தையும் பார்த்து ரசிக்க முடியுமா? காதுகேளா மனிதன் தெய்வீகக் குரல்களால் இசைக்கும் பண்களைக் கேட்டு ரசிக்க முடியுமா?

எங்கள் தந்தையே! தற்காலிகப் புலனின்பங்களால் கண்மறைக்கப்பட்டவன், எப்படி சுயஒழுக்கச் சூரியனின்று தோன்றும் ஆரோக்கிய, அழகுக் கதிர்களைக் கண்டுகொள்ள முடியும்? 

தந்தையே, ஒரு பெரும் செல்வந்தன் ஆனால் ஆன்மீகச் செவிடன் எப்படி புனித ஆன்மாவின் உன்னத குணங்கள் எழுப்பும் சாந்தி தரும் விண்ணுலக இன்னிசையைக் கேட்க முடியும்? 

நற்குணங்களின் ஒளியால், அறவினை தீவினையைக் காட்டிலும் அதிகப் பொலிவும் இனிமையும் உடையதெனக் காணுமாறும், உன் வழிகாட்டும் குரலை மற்ற எல்லா சத்தங்களுக்கும் மேலாக கேட்குமாறும்  எங்களுக்கு அனுக்கிரகம் செய்.   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
190 Cure Spiritual Deafness and make me listen to the chorus of Noble Qualities
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       

சனி, 21 நவம்பர், 2020

46. நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.

உன் நெஞ்சச் சுடரிலிருந்து, பிரபஞ்சத் தோற்றத்தின் ஒளிப்பொறிகள் ஆதியில் வெளிப்பட்ட போது, உருவாகப்போகும் உலகங்களை எதிர்நோக்கிப் பாடும் ஒளித்தோரணங்களுடன் நானும் சேர்ந்து பண்ணிசைத்தேன். 

நான் உன் பிரபஞ்ச நெருப்பின் ஒரு தீப்பொறி.  நீ வாழ்வின் சூரியன், உயிர்ப்பொறி திரவத்தால் நிறைந்துள்ள எங்கள் அநித்தியமான மனக்குவளைகளில் நீ எட்டிப்பார்க்கையில், எங்கள் பொன்மயமான சிறு மனித உணர்ச்சிகளில் அகப்பட்டுக் கொண்டாய். 

அழியும் தன்மையுடைய மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் தசைக் கண்ணாடிகளிலும், நான் உன் எங்கும்நிறை சக்தியின் சஞ்சலமான நாட்டியத்தைக் காண்கிறேன். சலசலக்கும் வாழ்க்கை ஏரியில், நான் உன் சர்வ வல்லமை கொண்ட வாழ்வினைக் காண்கிறேன்.

என் சாந்தமான மன ஏரியின் மேல் ஆரவாரித்து எழும் சஞ்சல ஆசைப் புயல்களை, நான் என் கவன ஒருமுகத்தினால் அவற்றைத் தடுத்து நிறுத்த, கிறிஸ்துவிற்கு கற்றுவித்ததைப் போல எனக்கும் நீ கற்றுக் கொடு. சலனமற்ற என் ஆன்ம ஏரியில், நான் உன் அசைவற்ற, அமைதியான முகத்தைத் தரிசிக்க விரும்புகிறேன். என் வாழ்வாகிய சிறு அலையின் எல்லைத் தடுப்பை உடைத்து விடு, உன் அளப்பரிய பெருவெளி என்மேல் பரவட்டும்.

என் இதயம் உன் நெஞ்சில் துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உணரச்செய். நீயே என் கால்கள் மூலம் நடக்கின்றாய், என் மூச்சின் வழியே சுவாசிக்கின்றாய், என் கைகள் மூலம் செயலாற்றுகின்றாய், என் மூளையில் எண்ணங்களைக் கோர்க்கின்றாய் என்பதனையும் நான் உணரச்செய். நான் அழுது பெருமூச்சு விடுகையில் உன் உறங்கும் சுவாசம் விழிப்படையும். உன் லீலா விநோதத்தினால், உன் கனவுக்குமிழ்களாலான பிரபஞ்சம் எனை மயக்கிக் குழப்பும் உறக்கத்திலான அறைக்குள் மிதக்கின்றன.  

உன் விண்மீன் மழையான இச்சா சக்தியே என் இச்சை வானில் பொழிகிறது. நீ தான் நானாக ஆகியுள்ளாய் என்பதை எனக்கு உணர்த்து. ஓ, என்னை நீயாகவே ஆக்கிக் கொள்; நானெனும் சிறுகுமிழ் உன்னுள்ளே மிதப்பதை நான் காணுமாறு செய்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
46 Let me feel that Thou and I art One
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!      

வெள்ளி, 20 நவம்பர், 2020

120. உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி.

அனாதைகள், துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உன் குணப்படும் சக்தியைக் கேள்விப்பட்டுள்ளார்கள். அவர்கள் உன் வாசலுக்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை வெறும்கையுடன் திருப்பி அனுப்பலாமா? 

சோகத்தாலும், பயத்தாலும் பீடிக்கப்பட்டு நெஞ்சுடைந்து அவர்கள் சிந்தும் எரிக்கும் கண்ணீர்த் துளிகளை, உன் கண்ணுக்குப் புலனாகா கரங்களால் துடைத்து உலர்த்துவாயாக.

மோகக்குழப்பத்தால் வழிதொலைந்தவர்கள் உன்னைத் தவிர வேறு யாரிடம் செல்வார்கள்? உன்னைப் பார்க்கமுடியாமல் மறைக்கும் திரையை விலக்கு, உன் எல்லாம்வல்ல பேரருள் முகத்தைக் காட்டு. 

நீ தோன்றும் விடிவுகாலம் நெருங்கும்போதே, அவர்களின் இருண்ட கவலைகள் சுவடின்றிப் பறந்து ஓடிவிடும். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
120 Receive the orphans and the stricken, who have come to Thy door
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!      

வியாழன், 19 நவம்பர், 2020

34. என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

நான் என் இறந்தகாலத்தை எரித்து சாம்பலாக்கினேன்; அரும்பும் விதியினின்று முளைக்கும் வருமுன்னர் உரைக்கும் விதைகளை ஒதுக்கித்தள்ளினேன். இறந்தகால, எதிர்கால பயங்களெனும் சிதறிக்கிடந்த சாம்பல்களுக்கு இடையே நான் சிரமப்பட்டு அவற்றைக் கடந்து சென்றேன்.

நான் என்றும் இருக்கும் நிகழ்காலம். நான் என் இச்சா சக்தியின் கூர்மையினால், அறியாமை வலைக்கூடுகளை நார்நாராக கிழித்து எரிந்துவிட்டேன். 

இப்பொழுது, நான் உன் நிரந்தரத்தின் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, கணக்கிடமுடியாத காலப்பாதையின் வழியே நான் மிதந்து செல்கிறேன். இயற்கை ஈந்த என் இறக்கைகளின் அழகினை  எல்லாப்பக்கங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப் படுத்துகிறேன். சூரியர்கள், விண்மீன் துகள்கள் என் இறகுகளில் விரவிக் கிடக்கின்றன. பார், என் அழகை! உன்னை ஏமாற்றிக் கட்டும் அனைத்து பட்டுநூல் பின்னல்களையும் அறுத்து ஏறி! நான் என் அகத்துக்குள்ளே பறந்து செல்வதைப் போல் நீயும் அதனைப் பின்பற்று!   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
34 Make me Thy Butterfly of Eternity
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     

புதன், 18 நவம்பர், 2020

68. எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.

நாங்கள் அமைதியான கடலில் சுகமாய் நீந்திக் கொண்டிருந்தோம்; பின்பு புகழ், நட்பு, பிரபலமெனும் தூண்டில்-புழுக்கள் எங்களைக் கவர்ந்தன. எங்களில் சில அத்தூண்டில் புழுக்களைத் தொட்டுப் பதம் பார்த்தன; வேறுசில அவற்றைக் கண்டவுடன் ஓடிப் பறந்தன.

அய்யகோ, ஆனால் சில உலகக்கவர்ச்சி தூண்டில்-புழுக்களை, மயக்கும் புலனின்ப வலை-மாகுக்களை (sinker) விழுங்கிவிட்டன; மாட்டிக்கொண்ட அவைகள் மிகுதியால் தெவிட்டும் கரைக்கு இழுத்துச்  செல்லப்பட்டன. 

வலியின் துக்கம் தாங்கமுடியாமல் அவை துடித்து, உதாசீனத்தின் இறுக்கத்தால் நெருக்கப்பட்டு இறுதியில் மூச்சுமுட்டி மடிந்தன.

ஏ காலமெனும் தெய்வ ஆசிரியனே, எங்களை திளைத்து மயக்கும் புலனனுபவ தூண்டில்களை நாங்கள் தொடமாலிருக்க எங்களைப் பழக்கு. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
68 Save us from the bait of Modern Comforts
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     

செவ்வாய், 17 நவம்பர், 2020

55. நான் மெய்யுணர்விற்கு வானவிற் பாலம் கட்ட விரும்புகிறேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் மெய்யுணர்விற்கு வானவிற் பாலம் கட்ட விரும்புகிறேன்.

பலயுகங்கள் எனக்கும் உனக்கும் இடையில் பெரும் வளைகுடாவை உருவாக்கியுள்ளது. அது உன்னை நான் மறந்த என் மறதி வெள்ளநீரினால் மென்மேலும் விரிவடைந்துள்ளது.  

நான் இந்தக் கரடுமுரடான பாறைகளுடைய உலகாயதக் கரையில் நின்றுகொண்டு, கண்ணுக்கெட்டா உன் சீரான சாந்திக் கரையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். என் உள்ளத்தின் கட்டிடவல்லுனர்கள் உன்மீதான என் இடைவிடா நினைவினைக் கொண்டு, எனக்காக ஒரு பாலத்தைக் கட்டுகிறார்கள். அதனை என் திண்மையான ஒழுக்கக்கட்டுப்பாடு எனும் தாங்கும் தூண்களால் பொருத்தி அமைக்கிறார்கள். 

உனைப் பற்றிய என் கனாக்கள் ஒன்று திரண்டு மெய்யுணர்விற்கு வானவிற் பாலத்தை உருவாக்குகிறது. அதன்மூலம், உன்னை விரைவில் வந்தடைவேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
55 I want to build a Rainbow-Bridge of Self-Realization
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     

திங்கள், 16 நவம்பர், 2020

69. நான் என் குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில் மிகுந்த அறுவடை செய்ய அருள்புரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் என் குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில் மிகுந்த அறுவடை செய்ய அருள்புரி.

எனக்கு வழங்கப்பட்ட உணர்வுதள நிலம் சிறியது. அதில் வாழ்வை-வளமாக்கும் பயிர்களை இடாமல் அதனை தரிசாகவே போட்டு வைத்திருந்தேன். இப்போது, வாய்ப்புகளைக் கொல்லும் கடுங்குளிர்காலம் முடக்கும் மூடுபனியுடன் நெருங்குகிறது.

என் பூமி சிறியது; என் பருவக்காலமும் சிறியது. இருப்பினும் நான் மகத்தான அறுவடையை விரும்பி எதிர்பார்க்கிறேன். ஆதலால், எனக்குள்ளே உள்ள ராஜ்யங்களை போரிட்டு வாகைசூடி, பல தேசங்களை ஆக்கிரமித்து விட்டேன். இப்போது, என் உணர்வுதள எல்லைப்பரப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.

ஆனால், என் தெய்வத்தந்தையே, எனக்குள் பல்கோடி எண்ண-குடும்பங்கள் பசியுடன், அவைகளுடைய குழந்தைகளுக்கு ஊட்டவேண்டி காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த சிறுபருவப் புவிவாழ்வில் எனக்கு உனது மௌனபோதனை எனும் அறுவடை பெருத்த அளவு தேவையாயிருப்பதை நீ நன்கு அறிய வேண்டும். 

ஏக்கமெனும் நீர்ப்பாய்ச்சல் பன்முறை என் நிலத்தில் விழுந்துள்ளது; ஆயினும் அதன் விளைமண் உழக்கப் படாமலேயே இருந்தது.  இப்பொழுது, இடைவிடாமல், விஞ்ஞானமுறையில் தொடர்ந்து தேடும் எந்திர ஏர்க்கருவியை உபயோகிக்கின்றேன்.

ஏ விதை விதைக்கும் தெய்வமே, உன் புலனாகா கரங்களினால், நன்கு உழக்கப்பட்ட என் பண்பட்ட மனத்தினில் உன் உயிர்பொதிந்த விதைகளைத் தூவு! 

இந்த குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில், நான் உன் பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுவதனால் விளையும் மாபெரும் விளைச்சலை அறுவடை செய்ய விருப்பம் பூணுகிறேன்.   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
69 May I reap the greatest Harvest in the short season of Earthly Life
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!    

ஞாயிறு, 15 நவம்பர், 2020

44. நான் உன் தேவலோக விமானத்தில் ஏற விரும்பும் உன் சொர்க்கலோகப் பறவை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன் தேவலோக விமானத்தில் ஏற விரும்பும் உன் சொர்க்கலோகப் பறவை.

பூலோகத்திலிருந்து விடைபெறும் காலத்தில், என் ஜீவாத்மாவை அழைத்துச் செல்ல உன் தேவலோக விமானம் வந்துள்ளது. நான் வியப்புடன், எப்படிப்பட்ட ஆகாயமார்க்கத்தில் மேலெழும்பி, எந்தெந்த லோகங்களில் பயணிக்கப் போகிறோமோ? என எண்ணினேன்.

நான் பிரபஞ்ச நியதியின் அந்த ரகசிய மாலுமியைக் கேட்டேன். அந்த பேசாமாலுமி மௌனமொழியில் பதிலுரைத்தான்: 
"நான் வாழ்க்கையின் மாலுமி. ஆனால் அறியாத பூலோகத்தவர்களால் தவறாக அச்சமூட்டும் காலன் என அழைக்கப்படுகிறேன். நான் உன் சகோதரன், உன்னை உயர்த்துபவன், உன் மீட்பாளன், உன் நண்பன் - பளுவான உன் உடற்துன்பச் சுமையை இறக்குபவன். உன் சிதிலமடைந்த கனவுகளெனும் பள்ளத்தாக்கிலிருந்து உன்னை மீட்டு, உயர்தள ஒளியுலகத்திற்கு கூட்டிச் செல்ல வந்துள்ளேன். துயரத்தின் விஷப்புகை அந்த மேலுலகினை ஒருக்காலும் எட்டாது. 

"நான் உன் ஜீவாத்ம-பறவையை உன் ஊனுடம்புக் கூண்டிலிருந்து விடுவிக்க அக்கூண்டை கருணையின்றி நொறுக்கியுள்ளேன். உன்னைப் பிணைத்த நோய், பயம் எனும் சங்கிலிகளை அறுத்து எறிந்துள்ளேன். நீ நீண்டகாலமாக சதையெலும்புக் கூட்டினிற்குள் சிறைப்பட்டுக் கிடந்ததனால், பழக்க தோஷத்தால் அக்கூட்டை விட்டு வெளியேறத் தயங்குகிறாய். நீ எப்போதும் சுதந்திரத்தையே விரும்புபவன். இப்போது, வெகுநாட்களாய் நீ ஏங்கிய இந்த விடுதலையைப் பெறும்போது, உனக்கு ஏனிந்த நடுக்கம்?"

"ஏ சொர்க்கலோகப் பறவையே! ஏறு என் எங்கும்நிறை விமானத்தில்! நெடுநாளாய் சிறகடித்து களைத்த உன் இறகுகளுக்கு ஓய்வுகொடு, என்னுடன் இளைப்பாறிக் கொண்டு, எங்கும், எல்லா இடங்களிலும் பரந்து விரிந்த உன் ஆகாய வீட்டிற்குப் பிரயாணம் செய்யப் புறப்படு!"    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
44 I am Thy Bird of Paradise wishing to fly in Thine Astral Airplane
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!   

சனி, 14 நவம்பர், 2020

207. தெய்வத்தாயே, உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் குடிபுக வா.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வத்தாயே, உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் குடிபுக வா.

தெய்வத்தாயே, எங்கள் நெஞ்சங்களில் நீ மட்டுமே முழுவதுமாக விளங்கி சுடரொளி வீசு; எங்களுக்குள் இருக்கும் எல்லா இருள்களையும் சுட்டு எரித்துவிடு. 

தெய்வத்தாயே, எங்கள் இதய பூஜாடிகளில் நீ எப்போதும் இருந்து நறுமணம் வீசு; அது உன்னிடம் பக்தி செய்யும் எங்கள் அன்பர்களுக்கு, அவர்கள் எந்த மூலையில் இருப்பினும் அங்கு சென்று பரவட்டும். 

உன்மேல் கொண்ட எங்கள் அன்புக்கண்ணீரால், பொருட்கள் மேல் உள்ள எங்கள் எல்லா ஆசைகளையும் கழுவித் தூய்மைப்படுத்து. உன்னைச் சேர்கையில் தோன்றும் ஆனந்தக் கண்ணீரால், எங்கள் துயரங்கள் அனைத்தையும் அவை மீண்டுவராவண்ணம் துடைத்து அப்புறப்படுத்து. 

தெய்வத்தாயே, எங்கள் சிறிய இதயங்களை இணைத்துப் பெரிதாக்கி உன் எங்கும்நிறைத்தன்மை இடையறாமல் என்றும் அதில் தங்குமாறு செய். உன் புனிதக் கண்ணாடியில் எங்களை நாங்கள் உள்ளபடி காணுமாறு பழக்கு. உன்மேல் கொண்ட எங்கள் அன்புச்சுடர், உலகாயத ஆசைகளெனும் சிறிதாகச் சீறும் கனல்களைத் தாண்டி வானுயரத்திற்கு மேல் எழும்பட்டும்.

என் தெய்வத்தாயே, மறதியெனும் இருண்ட வானில், முழங்கும் இடியாய் எங்கள் அன்றாடவேலைகள் இடித்தபோதிலும், உன்மேல் கொண்ட எங்கள் பக்தி வால்-நட்சத்திரமாக ஒளிர்ந்து பாயட்டும்.   

இறைவியே, கோயில்கள், நிறுவனங்கள், பணம், கோடிக்கணக்கான அலைக்கழிப்புகள் என அவை உன் தெய்வீக ரூபத்தில் வந்து எங்களை குழப்பமடையச் செய்கிறது. போதும் இச்சோதனை, இதுவே தருணம்! நீ உள்ளபடி நிஜரூபத்தில் வந்து உனக்காகக் காத்திருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் உடனே குடிபுகு.

அம்மா! அறியாமையெனும் இருண்ட இரவினில் உழலும் எங்கள் செயல்களுக்கு, நீ துருவ நட்சத்திரமாய் இருந்து எங்களை பத்திரமாக உன் இருப்பிடத்திற்கு வழிநடத்திச் செல்.   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
207 Divine Mother, come Thyself into the waiting Temple of our Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

வியாழன், 12 நவம்பர், 2020

41. என்னை விழிப்புறச் செய், நடுக்கும் மோக நிகழ்வுகளைக் கனவென அறிய!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை விழிப்புறச் செய், நடுக்கும் குழப்ப நிகழ்வுகளைக் கனவென அறிய!

விருப்பப் போர்வையைப் போர்த்திக் கொண்டு வெகுகாலம் உறக்கத்தில் கழித்தேன். நான் அரியணையில் அமர்ந்திருப்பதாய் கனவு கண்டேன். என் முகத்தில் புன்னகை பூத்துக்குலுங்கியது. 

பின்னர், என் புன்னகை தளர்ந்து, இன்பத்தின் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது. திடீரென நான் கிழிந்த துணிகளுடன் பிச்சைக்காரனாய், வறுமையின் கடூரமான கல்லில் உட்கார்ந்திருப்பதாய்க் கண்டேன். நான் அழுதேன், கேளா, இரக்கமில்லா என் சூழ்நிலைக் கற்களின் மேல் என் கண்ணீர் சிந்தியது.

உலகம் பறைசாற்றா பரிகாசத்துடன் என்னைக் கடந்து சென்றது. நான் உன் உதவிக்காக கதறினேன். நான் தொடர்ந்து சிந்திய கண்ணீரின் ஏக்கத்தினால் என்னை வேறு வழியின்றி எழுப்பி விழிப்புறச் செய்தாய். அப்போது, நான் செல்வந்தனுமல்ல, ஏழையுமல்ல என்பதைக் கண்டு நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.   

மகிழும் செல்வச்செழிப்பும், வாட்டும் வறுமையும் என மாறிமாறி வரும் இந்தக் கனவிலிருந்து என்னை நீ அவசியமாக விழிப்படையச் செய்.

நிழல்-உலகங்களைப் படைப்பவனே, மரணமெனும் இந்த அருவருப்பான,  கெட்ட சிம்ம சொப்பனங்களிலிருந்து என்னை விடுவி! 

மரணமில்லாப் பெருவாழ்வினை என்னில் விழிப்படையச் செய்: சலனமற்ற அமைதியை என்னுள்ளத்துள் எழுப்பு. அதன்மூலம், குழப்ப வைக்கும் இந்த அதிபயங்கரமான உலக நிகழ்வுகள் எல்லாம் வெறும் கனவுகளே என அறிவேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
41 Wake me, that I may know the terrors of mundane delusion to be but Dreams.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

புதன், 11 நவம்பர், 2020

43. என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.

இறைவியின் சிங்கக்குட்டியான நான் துர்பலமுடைய மனித ஆட்டுமந்தை வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் தூக்கி எறியப்பட்டேன்.

பயம், தோல்வி, நோய்களுக்கு வசமாகும் ஆடுகளின் நடுவே வெகுகாலமாய் வாழ்ந்து, நானும் அவைகளைப் போலே 'மே-மே'யென கோழைத்தனமாய் கத்தினேன். வஞ்சகமாய், தொடர்ந்து நைக்குந் துன்பங்களை நடுக்கி அச்சமுறுத்தும் என் உறுமலை மறந்து போனேன்.

மெய்யணர்வின் சிங்கமே,  நீ என்னை ஆட்டுமந்தையில் இருந்து வெளியிலிழுத்து என்னை தியானக் குளத்திற்கு இட்டுச்சென்றாய்.  'கண்ணைத்திற! உறுமல் செய்!' என நீ எனக்குக் கட்டளையிட்டாய். ஆனால், நான் என் விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டு 'மே-மே'யென பயத்தில் அலறினேன். உன் ஞான கர்ஜனை என்னுள்ளே முழுதும் பரவி அதிரவைத்தது. உன்னுடைய பலமான ஆன்ம வலுவுள்ள ஆட்டுவித்தலினால் என் கண்கள் திறந்தன. ஆ! அங்கு சலனமற்ற தெளிந்த குளத்தில் பிரதிபலிக்கும் என் முகம் உன் முகத்தைப் போலவே இருப்பதை எனக்குக் காட்டினாய்!

நான் என்னை இப்போது பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கிய சிங்கமாய் அறிகிறேன். அச்சத்தால், தளர்வால், துன்பத்தால்  நடுங்கி எழும்  ஆட்டுக்கத்தல் இன்றோடு ஒழிந்தது; இனி, எல்லாம் வல்லவனின் உயிரூட்டும் சக்தியைக் கொண்டு நான் கர்ஜிப்பேன்!  அனுபவமெனும் காட்டில் உலாவி, சிறு ஜந்துக்களாய்த் திரியும் விரக்தியூட்டும் கவலைகள், தளர்த்தும் அச்சங்கள், அலைக்கும் கோணாய் அவநம்பிக்கைகள் போன்றவைகளைக் கவ்விக் பிடித்து இரக்கமற விழுங்குவேன்.

மரணமில்லா சிங்கமே, என்மூலம் சர்வவல்லமை படைத்த உன் ஞான கர்ஜனையால் உறுமுவாயாக! 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
43 Make me a lion of Thy all-conquering Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

செவ்வாய், 10 நவம்பர், 2020

165. என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே

என் வானவில்-கனவு விறகுகளால் மூட்டப்படும் என் லட்சியத்தீ மேன்மேலும் வளர்கிறது. பழைய கனவுகள் நினைவிலிருந்து மறைய மறைய, விடாப்பிடியான புது எதிர்பார்ப்புகள் தணிக்க முடியாத, புதிதான சுடர்களாய் பெருகி, என் புத்துணர்வு சக்தியெனும் திடமான பல மரங்களைச் சுட்டெரித்து விழுங்குகின்றன.

என் தோட்டத்தை வாழ்க்கையின் பசுமை நிறைத்திருந்தது. இப்போது, உயிருணர்ச்சி பாதி இழந்த, ஒளிமங்கிய நடைப்பிணங்கள் இருண்ட சந்தேகங்களினூடே உலவுகின்றன. அவை உன்னை நோக்கி நான் எடுத்து வைக்கும் என் தயக்கமான காலடிகளை மிரள வைக்கின்றன.

தெய்வ நண்பா, என் உதவிக்கு வா, வழித்துணையாக வந்து என்னை இடைவிடாமல் முன்னோக்கி விரைவாக வழிநடத்து.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
165 The fire of my ambition and all my rainbow-dreams are for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

ஞாயிறு, 8 நவம்பர், 2020

42. நான் "வீடு" திரும்ப வேண்டுகிறேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் "வீடு" திரும்ப உரிமையுடன் வேண்டுகிறேன்

தடைகளே, உஷார்! என் பாதையை விட்டு அகலுங்கள்! நான் "வீடு" நோக்கிச் செல்கிறேன். 

காலத்தின் நீள் பாதையில், நான் தவறெனும் குழிகளில் பன்முறை விழுந்து, விழும்போதெல்லாம் உன் மறைவான கைகளால் தூக்கிவிடப்பட்டு, நான் என் நடையைத் தொடர்ந்துள்ளேன்.

உன் வீடு நோக்கி பயணிக்கும் என் வழியில் விரக்திதரும் இருள், முள்வேலியிடும் பழக்கங்கள், கல்பாறைநிகர் சோம்பல், மலைபோல் உதாசீனம், கடலளவு அவநம்பிக்கை, புலன் அபாயங்கள் போன்றவை குறுக்கிட்டு இடைமறிக்கலாம்; ஆனால் கோடிக்கணக்கான ராஜ்யங்கள், எண்ணிலடங்கா வருடங்களுக்கு மைந்துற அளவில்லா உலக இன்பங்கள் பெறினும், அவைகள் நான் உன்னை விட்டுவிடுவதற்கு என்னை தூண்டாது.

ஏ மஹா சமுத்திரமே, எனது மனிதத் தேவைகளெனும் நதிகள் உன்னிடம் கலந்து நிறைவுறுகின்றன. பல்வேறு இடும்பைப் பாலைவனங்கள் வழியே சுற்றி ஓடிய என் ஆசைநதிகள் உன்னில் சங்கமமாகி லயிக்க வேண்டுகிறேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
42 I Demand to return Home
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

சனி, 7 நவம்பர், 2020

24. என் குருநாதர்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் குருநாதர்

என் வாழ்வின் ஒளியே - நீங்கள் என் ஆன்ம பாதையை ஞானசுடரால் ஒளிர்விக்க வந்துள்ளீர்கள். பலநூற்றாண்டுகளாகப் படிந்துகிடந்த இருள் உங்கள் ஒளிப்பிரகாசத்தின் அருளால் மறைந்து போயின. 

சிறுவயதில், நான் தெய்வத்தாய்க்காக ஏங்கி அழுததின் பயன் அவள் என் குருவாய் - சுவாமி யுக்தேஸ்வராய் [பரமஹம்ஸ  யோகானந்தராய்] - வடிவெடுத்து என்னை அணுகினாள். என் குருநாதரே, அச்சந்திப்பின் போது ஒரு ஒளிக்கீற்று உங்களிடமிருந்து வெளிப்பட்டு, பிறவிதோறும் கடவுளுக்காக ஏங்கிய என் தாபங்களை உருக்கி, ஆனந்தச்சுடராய்ப் பரிமளித்தது.  என் எல்லா கேள்விகளும் அந்த சுடரும் பொன்மய ஸ்பரிசத்தில் விடைபெற்றன. உங்கள் அருளால் நிலையான, நிரந்தர திருப்தி என்னில் குடிபுகுந்தது.

கடவுளின் குரலாய் ஒலிக்கும் என் குருதேவரே, உங்களைக் கண்டது என் ஆன்மதாபங்களின் பயனே. என் துன்பகர உறக்கம் ஒழிந்தது, நான் எல்லையில்லா ஆனந்தத்தில் விழிப்படைந்து விட்டேன்.

எல்லா தேவர்கள் என்மேல் குறைகாணிணும் பரவாயில்லை, உங்கள் மகிழ்ச்சி ஒன்றே எனக்குப் போதும், நான் உங்கள் திருப்தியெனும் கோட்டையில் பத்திரமாய் இருப்பேன். மாறாக, எல்லா தேவர்களும் என்னை அவர்கள் ஆசீர்வாத வரங்களினால் காக்கினும், உங்கள் அருளாசி எனக்கு கிட்டவில்லையெனில், நான் ஒரு அனாதையாய், உங்கள் ஆன்ம  அதிருப்தியெனும் பாழடைந்த இடுபாடுகளில் அலைந்து  உழல்வேன். ஏ குருநாதரே, நீங்கள் என்னை அடியில்லாத புதைகுழி இருளிலிருந்து மீட்டு சாந்தி சொர்க்கத்தில் புகுவித்தீர்கள்.

நம் உள்ளங்கள் வெகுகாலம் பொறுத்து சந்திக்கின்றன. அவை இப்போது எங்கும்நிறை பூரிப்பினால் நம்முள்ளே அதிர்கிறது. நாம் முன்னர் சந்தித்துள்ளோம், அதனால் தான் இங்கு சந்தித்திருக்கின்றோம்.

நாம் இருவரும் இணைந்து கடவுளின் தீரத்திற்கு பறந்து செல்வோம். அங்கு நம் குறுகிய விமானங்களை முழுதுமாய் சுவடு தெரியாமல் நொறுக்கி அழித்து, நம் எல்லையற்ற வாழ்வினில் கலந்து மறைவோம். 

அமைதியான கடவுளின் பேசும் குரலாயுள்ள உங்களை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். முக்திக் கோயிலின் தெய்வ வாசலாய் இருக்கும் உங்களை என்றும் தலை வணங்குகிறேன். உங்களையும், உங்கள் குருநாதர் - யோகா அவதாரமாய் தோன்றிய லாஹிரி மஹாசாயரையும் நான் மறவாமல் தலைவணங்குகின்றேன்; என் பக்தி மலர்களை நம் மாபெரும் குருவான மஹாவதார் பாபாஜி பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
24 My Guru
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!  

வெள்ளி, 6 நவம்பர், 2020

192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எனக்காக நான் செலவிடுவதைப்  போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

எனக்கு தூய நலத்தைக்  கொடு, ஆனால் என் உடன்பிறந்தவர்களுக்கு அதிக நலத்தைக் கொடு. அதனால், நான் என் விரிவுபெற்ற உள்ளத்தினில் என் மேம்பட்ட நலத்தினால் மகிழ்வேன்.

எனக்கு ஆற்றலைக் கொடு, ஆனால் என் நேசர்களுக்கு அதனை விட அதிகமாய் அள்ளிக் கொடு. அதனால், நான் எல்லா மனங்களின் சக்தியையும்  ஒருங்கிணைக்கப்பட்ட என் மனத்தினால்  உபயோகிப்பேன்.

எனக்கு ஞானத்தைக் கொடு, அதன் மூலம் என் அன்பர்களை நான் மேன்மையான ஞானியர்களாக்குவேன். அதனால், எல்லையில்லாமல் அகன்று இணைந்த என் சகோதர உள்ளங்களில் விரியும் ஞானஒளிக்கதிர்களை நான் உணர்வேன்.

நான் அனைவருடைய விழிகளினால் காணவும், அனைவருடைய கைகளின் மூலம் செயல்புரியவும், அனைவருடைய இதயத்துடிப்பை உணரவும் எனக்கு கற்றுக் கொடு.

நான் எவ்விதம் எனக்கு செய்துகொள்கிறேனோ, அவ்விதமே நான் அனைவருக்காகவும் நெஞ்சுணர, செயலாற்ற, கடினமாய் உழைக்க, ஊதியம்பெற, குறிப்பாக, செலவிட எனக்கு கற்றுக் கொடு.

எனக்கு ஆரோக்கியம் வேண்டும், எனக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வதற்காக. நான் திறனாளியாக வேண்டும், புவியின் வாசலிலிருந்து திறனின்மையை விரட்டுவதற்காக. எனக்கு ஞானத்தின் சுதந்திரம் வேண்டும், அதனால் நான் என் உரிமையை அனைவரின் ஆன்ம விடுதலையுடன் கூடிய பூரண சுதந்திரத்தில் மட்டுமே மகிழ்ந்து அனுபவிக்க!   

Translation: Phd Siva

Original:
192 Teach me to spend for God's work as I spend for myself
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வியாழன், 5 நவம்பர், 2020

160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

பரப்ரம்மமே! எங்கள் எல்லோருக்கும் தந்தையே! என் மூளையைத் தகிக்கும், நரம்புகளைப் புடைக்கும், ரத்தத்தை விஷமாக்கும் கோபம் என்னும் தீய நோய் என்னை அணுகாமல் காப்பாயாக.

என்னைச் சினம் தீண்டும் போதெல்லாம், மனக்கண்ணால் என்னை ஆராய்ந்து பார்க்கும் கண்ணாடியை என் முன் காட்டு. அஷ்டகோணலாய், அசிங்கமாய் என்னாலேயே சகிக்க முடியாத சினம் தாக்கிய மூஞ்சியை நான் பிறரிடம் காட்டும்படி செய்து விடாதே!

என்னையும், பிறரையும் துயர்ப்பட வைக்கும் கோபத்தைக் கரைக்க எனக்குக் கற்பி. எனக்கும் பிறருக்கும் இடையிலுள்ள பரஸ்பர அன்பினை என் சுயவிரக்தியால் மாசு படுத்தாமல் இருக்க அருள்புரி!

மேன்மேலும் கோபம் கொண்டு என் கோபத்தை வளர்க்காதிருக்க ஆசிர்வதி. என் சினத் தீயினால் பொசுங்கிய பிறர் நெஞ்சங்களில், சுயமரியாதை மருந்து கொடுத்து, கருணைக்களிம்பு தடவி நான் அவர்களைக் குணப்படுத்த எனக்கு வரம் அருள்!

துன்புறுத்தும் கோபப்புயலால் என் அன்புப்பொய்கை எப்போதும் சஞ்சலமடையாதிருக்க ஆணையிடு!
 
மிக மோசமான என் பகைவனும் என் சகோதரனே என எனக்கு அறிவுறுத்து. என்னை நேசிப்பது போலவே அவனையும் நீ நேசிக்கின்றாய் என்னும் உண்மை எனக்கு எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வரமருள வேண்டும்!

Translation: Phd Siva, VR Ganesh Chander

Original:
160 Demand for the cure for the anger habit
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

புதன், 4 நவம்பர், 2020

67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

என் வழிபாட்டு ஊர்தி உனை நோக்கி நகர்கிறது. தயை பொழியும் எல்லா மனிதர்களின் விழிகளிலும், உன் கருணையொளி சிந்துவதைக் காண்கிறேன். இருண்ட ஜீவித மரங்களில், உன் பிரகாசம் மின்மினிப்பூச்சியாய் அவ்வப்போது மின்னுகிறது.

மனக்கலக்கமெனும் கடூரமான புழுதிப்புயலினூடே சிக்கி என் வழிபாட்டு ஊர்தி மெதுவாய் முன்னோக்கி ஊர்கிறது. மிக்க சிரமத்திற்குப் பின், கடைசியாக உன் அமைதியான உறுதிமொழிப் பாலைவனச்சோலையின் அறிகுறி தென்படுகிறது. அது என் தளர்ந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. 

உன் ஆனந்தச்சுனையில் என் வறண்ட நம்பிக்கை உதடுகளை அமிழ்த்தி அதிலூறும் ஆரா அமுதை அகங்குளிரச் சுவைத்துப் பருகுவேன்.  

Translation: Phd Siva

Original:
67 The Caravan of my Prayers is moving toward Thee
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 30 அக்டோபர், 2020

66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது.

ஆனால், தெய்வ சிற்பியே, 

என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு; 
எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;
ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு.

என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி.

மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.

Translation: Phd Siva

Original:
66 Burn Thou with frailties in the furnace of trials
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 5 ஜூன், 2020

213. பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

தெய்வீக அன்னையே !, நம் சோதனைக்காலங்களின் தாக்கங்கள் அனைத்தும் உன் அன்புக்காக மட்டுமே அழட்டும். நாங்கள் சுமக்கும்  சோதனைகள் தரும் அழுகை,  உன்னை நோக்கிய, நிற்காத  அழைப்பாக இருக்குமாறு மாற்று.

தெய்வீக அன்னையே!, எங்கள்  வலியின் ஓலத்திற்கு, உன் ஆறுதலுட்டும் கீதத்தை இசைக்கக் கற்பி. எங்கள்  கர்வத்தை உன் தூய்மையாக்கும் ஜுவாலைகளைக் கொண்டுள்ள அடுப்பில் உருக்கி, அதனை பணிவு எனும்  ஆனிப்பொன்னாக உருமாற்று.

தெய்வீக அன்னையே, அறியாமை எனும்  குறும்புச் சிறுவர்கள் கும்மாளம் போடும் எங்கள் சுயநலம் எனும் குக்கிராமத்தை நொறுக்கி, உன் சர்வவியாபகம் எனும்  கோவிலை, பக்தி, மரியாதை, ஆன்மீக அன்பு ஆகியவைகளை ஆதரிக்கும்  பக்தர்கள் உனக்குச் சரணாலயம் எழுப்பி இதயராக கீதம் பாடுவதற்காகக் கட்டுவாயாக.

அந்தப் பொற்கோவிலில், நிற்காத இதயகானத்தால் என்றும் மணக்கும் சுகந்த தூபத்தை அவர்கள் ஏற்றுவார்கள்.

எங்கள் பக்தியார்வத்தில் தினமும் மலரும், என்றும் மணக்கும் மலர்களை உன் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

எங்கள் ஒருங்கிணைந்த இதயபீடத்தில் உன் சர்வவியாபகத்தை  நிலைநாட்டு.

எங்கள் ஆத்மாவின் அன்புக்குரிய ஒரே வஸ்துவாக நீ இரு.

எங்கள் லௌகீகத்தை, உன் அநந்த ஜ்வாலையால் சுட்டெரி
பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள், நிதானமிழப்பு, அறியாமை அகியவற்றை எரி.

எங்கள் மனதை உன் நினைவுகளால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் இதயத்தை உன் அன்பால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் ஆன்மாவை உன்  ஆநந்தத்தால் ஜ்வலிக்கச் செய்!

Translation: V.R. Ganesh Chander

Original:
213 With The Torch of our Devotion, blaze our dark indifference
Whispers from Eternity 1929