வெள்ளி, 6 நவம்பர், 2020

192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எனக்காக நான் செலவிடுவதைப்  போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி

எனக்கு தூய நலத்தைக்  கொடு, ஆனால் என் உடன்பிறந்தவர்களுக்கு அதிக நலத்தைக் கொடு. அதனால், நான் என் விரிவுபெற்ற உள்ளத்தினில் என் மேம்பட்ட நலத்தினால் மகிழ்வேன்.

எனக்கு ஆற்றலைக் கொடு, ஆனால் என் நேசர்களுக்கு அதனை விட அதிகமாய் அள்ளிக் கொடு. அதனால், நான் எல்லா மனங்களின் சக்தியையும்  ஒருங்கிணைக்கப்பட்ட என் மனத்தினால்  உபயோகிப்பேன்.

எனக்கு ஞானத்தைக் கொடு, அதன் மூலம் என் அன்பர்களை நான் மேன்மையான ஞானியர்களாக்குவேன். அதனால், எல்லையில்லாமல் அகன்று இணைந்த என் சகோதர உள்ளங்களில் விரியும் ஞானஒளிக்கதிர்களை நான் உணர்வேன்.

நான் அனைவருடைய விழிகளினால் காணவும், அனைவருடைய கைகளின் மூலம் செயல்புரியவும், அனைவருடைய இதயத்துடிப்பை உணரவும் எனக்கு கற்றுக் கொடு.

நான் எவ்விதம் எனக்கு செய்துகொள்கிறேனோ, அவ்விதமே நான் அனைவருக்காகவும் நெஞ்சுணர, செயலாற்ற, கடினமாய் உழைக்க, ஊதியம்பெற, குறிப்பாக, செலவிட எனக்கு கற்றுக் கொடு.

எனக்கு ஆரோக்கியம் வேண்டும், எனக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வதற்காக. நான் திறனாளியாக வேண்டும், புவியின் வாசலிலிருந்து திறனின்மையை விரட்டுவதற்காக. எனக்கு ஞானத்தின் சுதந்திரம் வேண்டும், அதனால் நான் என் உரிமையை அனைவரின் ஆன்ம விடுதலையுடன் கூடிய பூரண சுதந்திரத்தில் மட்டுமே மகிழ்ந்து அனுபவிக்க!   

Translation: Phd Siva

Original:
192 Teach me to spend for God's work as I spend for myself
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வியாழன், 5 நவம்பர், 2020

160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்

பரப்ரம்மமே! எங்கள் எல்லோருக்கும் தந்தையே! என் மூளையைத் தகிக்கும், நரம்புகளைப் புடைக்கும், ரத்தத்தை விஷமாக்கும் கோபம் என்னும் தீய நோய் என்னை அணுகாமல் காப்பாயாக.

என்னைச் சினம் தீண்டும் போதெல்லாம், மனக்கண்ணால் என்னை ஆராய்ந்து பார்க்கும் கண்ணாடியை என் முன் காட்டு. அஷ்டகோணலாய், அசிங்கமாய் என்னாலேயே சகிக்க முடியாத சினம் தாக்கிய மூஞ்சியை நான் பிறரிடம் காட்டும்படி செய்து விடாதே!

என்னையும், பிறரையும் துயர்ப்பட வைக்கும் கோபத்தைக் கரைக்க எனக்குக் கற்பி. எனக்கும் பிறருக்கும் இடையிலுள்ள பரஸ்பர அன்பினை என் சுயவிரக்தியால் மாசு படுத்தாமல் இருக்க அருள்புரி!

மேன்மேலும் கோபம் கொண்டு என் கோபத்தை வளர்க்காதிருக்க ஆசிர்வதி. என் சினத் தீயினால் பொசுங்கிய பிறர் நெஞ்சங்களில், சுயமரியாதை மருந்து கொடுத்து, கருணைக்களிம்பு தடவி நான் அவர்களைக் குணப்படுத்த எனக்கு வரம் அருள்!

துன்புறுத்தும் கோபப்புயலால் என் அன்புப்பொய்கை எப்போதும் சஞ்சலமடையாதிருக்க ஆணையிடு!
 
மிக மோசமான என் பகைவனும் என் சகோதரனே என எனக்கு அறிவுறுத்து. என்னை நேசிப்பது போலவே அவனையும் நீ நேசிக்கின்றாய் என்னும் உண்மை எனக்கு எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வரமருள வேண்டும்!

Translation: Phd Siva, VR Ganesh Chander

Original:
160 Demand for the cure for the anger habit
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

புதன், 4 நவம்பர், 2020

67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது

என் வழிபாட்டு ஊர்தி உனை நோக்கி நகர்கிறது. தயை பொழியும் எல்லா மனிதர்களின் விழிகளிலும், உன் கருணையொளி சிந்துவதைக் காண்கிறேன். இருண்ட ஜீவித மரங்களில், உன் பிரகாசம் மின்மினிப்பூச்சியாய் அவ்வப்போது மின்னுகிறது.

மனக்கலக்கமெனும் கடூரமான புழுதிப்புயலினூடே சிக்கி என் வழிபாட்டு ஊர்தி மெதுவாய் முன்னோக்கி ஊர்கிறது. மிக்க சிரமத்திற்குப் பின், கடைசியாக உன் அமைதியான உறுதிமொழிப் பாலைவனச்சோலையின் அறிகுறி தென்படுகிறது. அது என் தளர்ந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. 

உன் ஆனந்தச்சுனையில் என் வறண்ட நம்பிக்கை உதடுகளை அமிழ்த்தி அதிலூறும் ஆரா அமுதை அகங்குளிரச் சுவைத்துப் பருகுவேன்.  

Translation: Phd Siva

Original:
67 The Caravan of my Prayers is moving toward Thee
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 30 அக்டோபர், 2020

66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது.

ஆனால், தெய்வ சிற்பியே, 

என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு; 
எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;
ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு.

என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி.

மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.

Translation: Phd Siva

Original:
66 Burn Thou with frailties in the furnace of trials
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 5 ஜூன், 2020

213. பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

தெய்வீக அன்னையே !, நம் சோதனைக்காலங்களின் தாக்கங்கள் அனைத்தும் உன் அன்புக்காக மட்டுமே அழட்டும். நாங்கள் சுமக்கும்  சோதனைகள் தரும் அழுகை,  உன்னை நோக்கிய, நிற்காத  அழைப்பாக இருக்குமாறு மாற்று.

தெய்வீக அன்னையே!, எங்கள்  வலியின் ஓலத்திற்கு, உன் ஆறுதலுட்டும் கீதத்தை இசைக்கக் கற்பி. எங்கள்  கர்வத்தை உன் தூய்மையாக்கும் ஜுவாலைகளைக் கொண்டுள்ள அடுப்பில் உருக்கி, அதனை பணிவு எனும்  ஆனிப்பொன்னாக உருமாற்று.

தெய்வீக அன்னையே, அறியாமை எனும்  குறும்புச் சிறுவர்கள் கும்மாளம் போடும் எங்கள் சுயநலம் எனும் குக்கிராமத்தை நொறுக்கி, உன் சர்வவியாபகம் எனும்  கோவிலை, பக்தி, மரியாதை, ஆன்மீக அன்பு ஆகியவைகளை ஆதரிக்கும்  பக்தர்கள் உனக்குச் சரணாலயம் எழுப்பி இதயராக கீதம் பாடுவதற்காகக் கட்டுவாயாக.

அந்தப் பொற்கோவிலில், நிற்காத இதயகானத்தால் என்றும் மணக்கும் சுகந்த தூபத்தை அவர்கள் ஏற்றுவார்கள்.

எங்கள் பக்தியார்வத்தில் தினமும் மலரும், என்றும் மணக்கும் மலர்களை உன் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

எங்கள் ஒருங்கிணைந்த இதயபீடத்தில் உன் சர்வவியாபகத்தை  நிலைநாட்டு.

எங்கள் ஆத்மாவின் அன்புக்குரிய ஒரே வஸ்துவாக நீ இரு.

எங்கள் லௌகீகத்தை, உன் அநந்த ஜ்வாலையால் சுட்டெரி
பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள், நிதானமிழப்பு, அறியாமை அகியவற்றை எரி.

எங்கள் மனதை உன் நினைவுகளால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் இதயத்தை உன் அன்பால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் ஆன்மாவை உன்  ஆநந்தத்தால் ஜ்வலிக்கச் செய்!

Translation: V.R. Ganesh Chander

Original:
213 With The Torch of our Devotion, blaze our dark indifference
Whispers from Eternity 1929

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Thou dost Ever Behold Me - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou dost Ever Behold Me

கண்ணிமைக்காமல் காக்கும் ஸர்வ ரக்ஷகனே,

உன் விழிகள் காலம் தவறாத பகலவனாகவும், வளர்ந்து தேயும் நிலவாகவும் என்னைத் தொடர்ந்து நோக்குகின்றன.

பரந்து விரிந்த உன் பார்வை விதம்விதமான துவாரங்கள் வழியும், இரவில் மின்னும் விண்மீன்கள் மூலமும், எங்கு சென்றாலும் என்னை விடாமல் பார்த்துக் கொள்கின்றது.

அவ்வப்போது வீசும் தென்றலாய் நீ என்னைத் தழுவிப் பேணுகிறாய்.

உன் மேலும், உன் குழந்தைகள் மேலும் நான் கொண்ட பிரேம எண்ணங்களில், நீ உன் அருள்மழையை நிசப்தமாய்ப் பொழிந்து என்னைப் போஷிக்கின்றாய். 

 #PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Thou art Plainly Present - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou art Plainly Present

தெய்வமே என் தந்தையே,

நான் கடல்தீரத்திலோ, ஓடையிலோ அலைகளில் துள்ளிக் குதித்து நீராடும் போது, நான் உன்னுடன் சேர்ந்து ஆடுகிறேன்.

பிரகாசமான வர்ணங்களினால் நீ தீட்டிய மேகச் சித்திரங்களை நாள்தவறாமல் நான் வானில் காண்கிறேன்.

பசும்புல் கொண்டு நீ கட்டாந்தரையைப் போர்த்தும் நேர்த்தியைக் கண்டு நான் ரசிக்கிறேன்.

நீயே ஆதவனின் ஒளியில் உள்ள இதமான கதகதப்பு.

இப்படி, எங்கெங்கு காணினும் எல்லாவற்றிலும் நீ யதார்த்தமாய் விளங்கும் வியன்மிகு காட்சியைக் கண்டு, என் சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன்.

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

The Gaze of Truth - Sri Paramhansa Yogananda

ஓம்

The Gaze of Truth

கடவுளே,

மாற்றமே நிரந்தரமாய் உள்ள வாழ்க்கையும், வண்ணவண்ண பூக்கள், சத்தமின்றி தோன்றி தவழ்ந்து மறையும் மேகங்கள் என நவவிதமாக காட்சிதரும் இயற்கையும்,  என் மனிதக் கண்களை வசியம் செய்கின்றன.
***

என்னுள் இருக்கும் திவ்ய கண்ணை திறக்கச் செய். அதன் மூலம் எல்லா அழகிலும் உன் மாண்புமிகு அழகையே ரசிப்பேன்.

இவ்வுலகில் உன்னையன்றி வேறொன்றையும் காணாத அந்த உண்மைப் பார்வையை எனக்கு அருள்.
***

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

பரப்பிரம்மமே, நாங்கள் அறவொழுக்கத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அன்புடன் அணுகக் கற்றுக் கொடு.

உன் ஒழுக்கநெறிக்கு அடிபணிந்தால் நாம் பெறுவதோ உன் அருட்கொடையான மங்காப் புகழ் மகுடம்!
***

நீ அறனெறிக் கட்டளைகளை விதித்தது எங்கள் சுகநலத்தைக் காப்பதிற்கே. 

மாறாக, தீவொழுக்கத்தின் விளைவு எப்படியும் துன்பத்தில் தான் முடியும் என அறிந்து நாங்கள் அதனிடத்தினின்று விலகச் செய்.

அறத்திற்கு தீநெறியைக் காட்டிலும் அளவிடற்கரிய காந்தசக்தி உண்டு என்பதைக் கண்கூடாய் உணரச் செய்.    
***

கெட்ட பழக்கம் முதலில் நன்கு இனிக்கும், ஆனால் படிப்படியாக விஷமாய் மாறிக் கொல்லும். நன்னெறியோ முதலில் சற்று கசந்தாலும், முடிவில் அமிர்தமாய் இனிக்கும். இந்த சூக்ஷும விஷயத்தைப் புரிந்து செயல்பட எங்களுக்கு விவேகத்தைக் கொடு.  

#PHD

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

பரமான மெய்யொளியே! கதிரவனின் வெப்பக் கதிர்களில் ஆகட்டும், நிலவின் குளிர்க் கிரணங்களில் ஆகட்டும், நீ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தே நிற்கின்றாய். வான விளக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எல்லாம் இயற்கைக் கன்னியை மட்டுமே, உன்னை அல்ல.

ஸ்தூலதீபங்கள்அடையாளம் காட்டும் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு, என்னைப் பொறுத்தவரை  இருள்மயமானதே. இம்முழுப் பிரபஞ்சத்தை உருமாற்றித் தோற்றுவிக்கும், உன் மறைவான ஒளிப்பிரகாசத்தைக் காண என் பார்வைக்குச் சக்தி கொடு.

நான் கண்மூடி அமர்ந்து, நிழல்களைக் கொண்டு நானே பின்னிய என் எண்ணவலையினில் சிக்கித் தவிக்கும் போது, நீ வண்ணமயமான காலைக் கதிரவனாய், மெய்ஞ்ஞானப் பிரகாசத்துடன் எனக்குக் காட்சியளி! இப்பிரம்மாண்டத்தில் செயல்புரியும் உன் லீலா விநோத நடனத்தை, கலைக் கண்களுடன் நான் ரசிக்க எனக்கு வரம் தா!

ஓம் ஸ்ரீ ஸத்குரவே சரணம்

#PHD