திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Thou art Plainly Present - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou art Plainly Present

தெய்வமே என் தந்தையே,

நான் கடல்தீரத்திலோ, ஓடையிலோ அலைகளில் துள்ளிக் குதித்து நீராடும் போது, நான் உன்னுடன் சேர்ந்து ஆடுகிறேன்.

பிரகாசமான வர்ணங்களினால் நீ தீட்டிய மேகச் சித்திரங்களை நாள்தவறாமல் நான் வானில் காண்கிறேன்.

பசும்புல் கொண்டு நீ கட்டாந்தரையைப் போர்த்தும் நேர்த்தியைக் கண்டு நான் ரசிக்கிறேன்.

நீயே ஆதவனின் ஒளியில் உள்ள இதமான கதகதப்பு.

இப்படி, எங்கெங்கு காணினும் எல்லாவற்றிலும் நீ யதார்த்தமாய் விளங்கும் வியன்மிகு காட்சியைக் கண்டு, என் சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன்.

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

The Gaze of Truth - Sri Paramhansa Yogananda

ஓம்

The Gaze of Truth

கடவுளே,

மாற்றமே நிரந்தரமாய் உள்ள வாழ்க்கையும், வண்ணவண்ண பூக்கள், சத்தமின்றி தோன்றி தவழ்ந்து மறையும் மேகங்கள் என நவவிதமாக காட்சிதரும் இயற்கையும்,  என் மனிதக் கண்களை வசியம் செய்கின்றன.
***

என்னுள் இருக்கும் திவ்ய கண்ணை திறக்கச் செய். அதன் மூலம் எல்லா அழகிலும் உன் மாண்புமிகு அழகையே ரசிப்பேன்.

இவ்வுலகில் உன்னையன்றி வேறொன்றையும் காணாத அந்த உண்மைப் பார்வையை எனக்கு அருள்.
***

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

பரப்பிரம்மமே, நாங்கள் அறவொழுக்கத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அன்புடன் அணுகக் கற்றுக் கொடு.

உன் ஒழுக்கநெறிக்கு அடிபணிந்தால் நாம் பெறுவதோ உன் அருட்கொடையான மங்காப் புகழ் மகுடம்!
***

நீ அறனெறிக் கட்டளைகளை விதித்தது எங்கள் சுகநலத்தைக் காப்பதிற்கே. 

மாறாக, தீவொழுக்கத்தின் விளைவு எப்படியும் துன்பத்தில் தான் முடியும் என அறிந்து நாங்கள் அதனிடத்தினின்று விலகச் செய்.

அறத்திற்கு தீநெறியைக் காட்டிலும் அளவிடற்கரிய காந்தசக்தி உண்டு என்பதைக் கண்கூடாய் உணரச் செய்.    
***

கெட்ட பழக்கம் முதலில் நன்கு இனிக்கும், ஆனால் படிப்படியாக விஷமாய் மாறிக் கொல்லும். நன்னெறியோ முதலில் சற்று கசந்தாலும், முடிவில் அமிர்தமாய் இனிக்கும். இந்த சூக்ஷும விஷயத்தைப் புரிந்து செயல்பட எங்களுக்கு விவேகத்தைக் கொடு.  

#PHD

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

பரமான மெய்யொளியே! கதிரவனின் வெப்பக் கதிர்களில் ஆகட்டும், நிலவின் குளிர்க் கிரணங்களில் ஆகட்டும், நீ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தே நிற்கின்றாய். வான விளக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எல்லாம் இயற்கைக் கன்னியை மட்டுமே, உன்னை அல்ல.

ஸ்தூலதீபங்கள்அடையாளம் காட்டும் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு, என்னைப் பொறுத்தவரை  இருள்மயமானதே. இம்முழுப் பிரபஞ்சத்தை உருமாற்றித் தோற்றுவிக்கும், உன் மறைவான ஒளிப்பிரகாசத்தைக் காண என் பார்வைக்குச் சக்தி கொடு.

நான் கண்மூடி அமர்ந்து, நிழல்களைக் கொண்டு நானே பின்னிய என் எண்ணவலையினில் சிக்கித் தவிக்கும் போது, நீ வண்ணமயமான காலைக் கதிரவனாய், மெய்ஞ்ஞானப் பிரகாசத்துடன் எனக்குக் காட்சியளி! இப்பிரம்மாண்டத்தில் செயல்புரியும் உன் லீலா விநோத நடனத்தை, கலைக் கண்களுடன் நான் ரசிக்க எனக்கு வரம் தா!

ஓம் ஸ்ரீ ஸத்குரவே சரணம்

#PHD

வியாழன், 21 ஏப்ரல், 2011

நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Tell me Thou hast loved me always

நான் சத்தமாகவோ, முணுமுணுத்தோ பிரார்த்திக்கும் வார்த்தைகள் உன் மேலுள்ள என் அன்பினை மட்டுப்படுத்தாமல் இருக்கட்டும். தெய்வீக மௌன மொழியினால் பேசி என் நெஞ்சின் காதலை உனக்குத் தெரிவிப்பேன்.

உன் குரல் அமைதிகரமானது; என் ஆன்ம அமைதியில் நீ பேசுவதை நான் கேட்பேனாக.

ஓ நிரந்தரத் தாயே! நான் அறிந்திராத போதிலும், நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்லம்மா!

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

புதன், 13 ஏப்ரல், 2011

காந்தி, மகாத்மா - "பெரிய ஆத்மா"

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Gandhi, the Mahatma - "great soul"

காந்தி! மக்கள் உன்னை வெகு பொருத்தமாக மகாத்மா, "பெரிய ஆத்மா" என்று அழைக்கின்றனர். நீ இருந்தமையால் பல சிறைச்சாலைகள் கோயில்களாயின. உன் குரல், அடக்குமுறைக்கு உட்பட்டு இருந்த போதிலும், மேன்மேலும் அதிக சக்தியுடன் பெருகி, உலகெங்கிலும் ஒலித்தது. சத்தியாகிரகத்தின் ("சத்தியத்தில் உறுதி") மூலம் அடைந்த உன் வெற்றி முழக்கம் மனித இன உள்ளத்தைத் தொட்டது.


பீரங்கியின் மீதல்லாது, கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து, வெளிநாட்டவரின் அரசாட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு பரந்த தேசத்திற்கு வெறுப்பின்றி, ரத்தக் களரின்றி விடுதலை வாங்கிக் கொடுத்து சரித்திரம் காணாத, நிகரில்லாத ஒரு சாதனையைப் படைத்தாய்.

நோன்பினால் நொந்த உன் தேகத்தை ஒரு மதிகலங்கிய மூடனின் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, நீ நிலத்தில் சரியும் போது உன் கைகள் சிரமமின்றி மேலெழும்பி அவனை மன்னித்தருள சைகை செய்தன. உன் வாழ்வின் எல்லா நாட்களிலும் நீ கள்ளங் கபடமற்றக் கலைஞனாய்ச் செயல் புரிந்தாய்; ஆனால் மரணத் தருவயிலோ, நீ உன்னதக் கலைஞனாய்க் காட்சியளித்தாய். உன் தன்னலமற்ற வாழ்வின் அனைத்துத் தியாகங்களே தான் அருளின் சிகரமான அந்தக் கடைசிச் சைகைக்குக் காரணம்.

மனிதனை நல்வழிப்படுத்தக் கடவுள் எப்படித் தனது அற்புத மாயா சக்தியைப் பிரயோகிக்காமல் அன்பினை உபயோகிக்கின்றாரோ, அப்படியே நீயும் முரட்டுச் சக்தியைத் தவிர்த்து சாந்தமான குணங் கொண்ட அறவழியை மேற்கொண்டாய்.

சத்தியத்தின் வடிவான எளிமையான துறவியே! வருங்கால போர்வீரர்கள் உன் உபதேசத்தை உன்னிப்பாகப் படித்து, "மனிதனின் இன்றியமையாத பகைவர்கள் ஒரே தந்தையான கடவுளிடம் தோன்றிய அவனின் இதர சகோதரர்கள் அன்று, அழியத்தகு அறியாமையில் பிறந்த அகங்கார எதிரிகளே அவனின் பகைவர்கள்,"என்ற உட்கருத்தை உணரட்டும்.

குறுகிய சுயதேச நலம், பேராசை, வஞ்சனை, போருக்கான ஆயுத்தம் போன்றவைகளால் தற்சமயம் தடுமாறியிருக்கும் தேசங்கள் உன் தீர்க்க தரிசனமான வார்த்தைகளை திறந்த நெஞ்சத்துடன் உட்கொள்ளட்டும்: "அஹிம்சை மனித சமுதாயத்தில் வேரூன்றியுள்ளது. அது மென்மேலும் ஓங்கி வளரும். அது உலக அமைதிக்கு இட்டுச் செல்லும் அடிகோலி (harbinger)."

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

திங்கள், 13 டிசம்பர், 2010

வீட்டை நோக்கிச் செல்லும் என் கடைசிப் பயணம்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
I am Home-ward bound at last

காலத்தின் பாதையில் நான் பல முறை பிழைக் குழிகளுக்குள் கவனமின்றி தவறி விழுந்துள்ளேன். ஆனால், என்னரசே, ஒவ்வொரு முறையும் உன் கட்புலனாகா கைகளால் என்னைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றியுள்ளாய்.

எனக்கும் உனக்கும் நடுவே நான், அதிருப்தியால் என் குடிசைக் கதவுகளை மூடி, பழக்கம் எனும் முள் வேலி கட்டி, உதாசீனம் எனும் கற்சுவர் எழுப்பி, மடி எனும் மலைகள் இடைப்பட, அவநம்பிக்கை எனும் கடல் விரிய, தடைகளாலான ஒரு மனோலோகத்தை நெடுங்காலமாக சிருஷ்டித்து வந்துள்ளேன்.

கடவுளே! என்னெஞ்சம் இப்பொழுது தெய்வீக உறுதியினால் நிரம்பியுள்ளது. இனி தேவர்கள் இகலோக சுகத்தை கோடானுகோடி வருடங்களுக்குக் கட்டின்றி அனுபவிக்க வரமளிக்க உறுதி மொழிந்தாலும் சரி, ஆத்ம சாக்ஷாத்காரம் (Self-realization) இன்றி அவற்றின் கவர்ச்சி உன்னை நாடும் வழியிலிருந்து விலகும் வண்ணம் என்னைக் கவர்ந்து இழுக்காது.

தடைகளே, ஜாக்கிரதை! என் வழியை விட்டு விலகி ஓடுங்கள். நான் என் வீடு நோக்கிச் செல்கிறேன்.

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

செவ்வாய், 27 நவம்பர், 2007

நீதான் அவனிடமிருந்து ஒளிந்து கொண்டிருந்தாய்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

YOU WERE HIDING FROM HIM
By Paramahansa Yogananda

நீ மறந்து தடுமாறும் ஆட்டத்தை ஒழிப்பாயாக!
உனது உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் மெளனி
அதிதியை நீ என்றும் மதிக்கத் தவறுதலாகாது
என்பதைப் புரிந்து கொண்டு அடங்கியிருப்பாயாக.
எந்தவொரு பகைவனையும் மன்னிக்கலாம்!
ஆனால், உன் ஆத்மாவின் மிகப்பெரிய எதிரியான
உன்னை மன்னிக்கவே முடியாது, ஏனெனில்
தற்காலிக நிலையமான இவ்வாழ்க்கையில்
என்றும் காத்திருக்கும் உன் தலைசிறந்த
நண்பனை நீ நட்பு கொள்ள மறந்ததினால்!

வாழ்வின் ஒளி மங்குகிறது; இருள் விரைவாக
சூழ்கிறது. ஆதலின், அன்பென்னும் அணையா
விளக்கை ஏற்று; உன் மரண தருவாயில்
வெங்காலன் கரிய திரையால் சூழும் நேரம்
அவ் விளக்கொளியால் அவனைக்
(கடவுளைக்) காணலாம்.

இவ்வளவு காலம் நீ எங்கோ விலகியிருந்தாய்;
அவன் உன் நெஞ்சுக்குள்ளே இமைக்காமல்,
சலிக்காமல் உனக்காக காத்துக் கொண்டே
இருக்கின்றான். இப்போது வந்து நீ, "நான் தான்
காத்துக் கொண்டிருந்தேன்" என்று புலம்புகிறாய்.
இது முறையல்ல, நீயே தான் அவனிடமிருந்து
மறைந்திருந்தாய்! சரி, போனது போகட்டும்,
இப்பொழுது நீ அவனை கண்டுகொண்டாகிய
பின், உன் அறிவற்ற வலையால் பின்னப்பட்ட
கூட்டிலகப்பட்டு, அவனை உன் பார்வையிலிருந்து
மறுபடியும் நழுவ விட்டுவிடாதே.

தவறின் மயக்கத்தில் சொருகும் உன் கண்களைத்
திறந்து, மூடிய இமைகளுக்குப் பின்னால் ஒளிரும்
ஜோதியைக் காண்பாயாக! சாந்தம் தவழ் அகக்
கண்களைத் திறப்பாயாக; அவன் உன்னில்
எங்கும் பரவியிருப்பதைப் பார்ப்பாய்.
கவலைத் திரையை விலக்கு; அவனுடைய
ஆனந்தக் கூத்தைக் கண்டுகளி.
தன்பிழையாலான இருள்மயக்கத்தை நீக்கி,
அவனை உன் உள்ளத்துக்குள்ளே கண்டுகொள்.

நீ எல்லாம் நிறைந்த ஆத்ம வீட்டினிலிருந்து ஓடி,
துச்சமான சுகத்தை நாடி, இருண்ட குடிசையில்
வாழ நேர்ந்தாய். இப்பொழுது வா! எல்லா
செல்வங்களையும் ஈனும் அகத்தை நீ உன்னகத்தே
காண்! அவனல்ல உன்னிடமிருந்து ஒளிந்து
கொண்டிருந்தது; நீதான் அவனிடமிருந்து ஒளிந்து
கொண்டிருந்தாய்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

வெள்ளி, 23 நவம்பர், 2007

மருட் குப்பையை அகற்றுதல்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

REMOVING THE DEBRIS OF DELUSION
By Paramahansa Yogananda

என் மனோராஜ்யம் அடர்ந்த மருளினால்
கல்மஷம் அடைந்துள்ளது. என் ஆத்ம கவனக்
குறைவுள்ள நகரங்களில் மனமாசு பன்னெடுங்
காலமாய் குப்பைமேடாகக் குவிந்துள்ளது.
அவைகளை என் சுயக்கட்டுப்பாட்டு முயற்சியான
தொடர்மழையின் மூலம் நான் அகற்றுவேனாக.

குறுகிய மனப்பான்மை, இன மதங்களினால்
வேறுபடுத்தும் தப்பெண்ணம் போன்ற உருமாற்றும்
சேரிகளை ஊழிவெள்ளம் அடித்துச் செல்லட்டும்.

இறைவா! மண்ணில் உழன்று களைத்த என்
எண்ணக் குழந்தைகள் உன் தூய்மையான
ஒழுக்கப் புனலில் நீராடிப் புனிதமடையட்டும்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

---
ஆத்ம கவனக் குறைவுள்ள நகரங்கள் - the cities of spiritual carelessness
கல்மஷம் அடைதல் - begrimed
மருள், மனமாசு - delusion
குப்பை - debris
தப்பெண்ணம் - prejudice

சனி, 17 நவம்பர், 2007

அகண்ட ஏகத்துவம்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

UNBROKEN ONENESS
By Paramahansa Yogananda

எந்தையே! உள்ளே சாந்தத்தில் ஆகட்டும்,
வெளியே அமளியில் ஆகட்டும், நான்
உன்னுடன் இரண்டறக் கலந்து ஐக்கியம்
காண வழி சொல்லிக் கொடு.

நிசப்தம் நிலவினுமென்ன? கூச்சல்
அலறினுமென்ன? எனக்கு கவலையேயில்லை!
உன்னுடைய காக்கும் கரங்கள் எந்நேரத்திலும்,
எவ்விடத்திலும் எனை சூழ்ந்திருப்பதை நான்
உணரும் போது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
அகண்ட - Unbroken
ஏகத்துவம், ஐக்கியம் - Oneness