வெள்ளி, 30 அக்டோபர், 2020

66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி

என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது.

ஆனால், தெய்வ சிற்பியே, 

என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு; 
எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;
ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு.

என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி.

மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.

Translation: Phd Siva

Original:
66 Burn Thou with frailties in the furnace of trials
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து! 

வெள்ளி, 5 ஜூன், 2020

213. பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

தெய்வீக அன்னையே !, நம் சோதனைக்காலங்களின் தாக்கங்கள் அனைத்தும் உன் அன்புக்காக மட்டுமே அழட்டும். நாங்கள் சுமக்கும்  சோதனைகள் தரும் அழுகை,  உன்னை நோக்கிய, நிற்காத  அழைப்பாக இருக்குமாறு மாற்று.

தெய்வீக அன்னையே!, எங்கள்  வலியின் ஓலத்திற்கு, உன் ஆறுதலுட்டும் கீதத்தை இசைக்கக் கற்பி. எங்கள்  கர்வத்தை உன் தூய்மையாக்கும் ஜுவாலைகளைக் கொண்டுள்ள அடுப்பில் உருக்கி, அதனை பணிவு எனும்  ஆனிப்பொன்னாக உருமாற்று.

தெய்வீக அன்னையே, அறியாமை எனும்  குறும்புச் சிறுவர்கள் கும்மாளம் போடும் எங்கள் சுயநலம் எனும் குக்கிராமத்தை நொறுக்கி, உன் சர்வவியாபகம் எனும்  கோவிலை, பக்தி, மரியாதை, ஆன்மீக அன்பு ஆகியவைகளை ஆதரிக்கும்  பக்தர்கள் உனக்குச் சரணாலயம் எழுப்பி இதயராக கீதம் பாடுவதற்காகக் கட்டுவாயாக.

அந்தப் பொற்கோவிலில், நிற்காத இதயகானத்தால் என்றும் மணக்கும் சுகந்த தூபத்தை அவர்கள் ஏற்றுவார்கள்.

எங்கள் பக்தியார்வத்தில் தினமும் மலரும், என்றும் மணக்கும் மலர்களை உன் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

எங்கள் ஒருங்கிணைந்த இதயபீடத்தில் உன் சர்வவியாபகத்தை  நிலைநாட்டு.

எங்கள் ஆத்மாவின் அன்புக்குரிய ஒரே வஸ்துவாக நீ இரு.

எங்கள் லௌகீகத்தை, உன் அநந்த ஜ்வாலையால் சுட்டெரி
பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள், நிதானமிழப்பு, அறியாமை அகியவற்றை எரி.

எங்கள் மனதை உன் நினைவுகளால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் இதயத்தை உன் அன்பால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் ஆன்மாவை உன்  ஆநந்தத்தால் ஜ்வலிக்கச் செய்!

Translation: V.R. Ganesh Chander

Original:
213 With The Torch of our Devotion, blaze our dark indifference
Whispers from Eternity 1929

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Thou dost Ever Behold Me - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou dost Ever Behold Me

கண்ணிமைக்காமல் காக்கும் ஸர்வ ரக்ஷகனே,

உன் விழிகள் காலம் தவறாத பகலவனாகவும், வளர்ந்து தேயும் நிலவாகவும் என்னைத் தொடர்ந்து நோக்குகின்றன.

பரந்து விரிந்த உன் பார்வை விதம்விதமான துவாரங்கள் வழியும், இரவில் மின்னும் விண்மீன்கள் மூலமும், எங்கு சென்றாலும் என்னை விடாமல் பார்த்துக் கொள்கின்றது.

அவ்வப்போது வீசும் தென்றலாய் நீ என்னைத் தழுவிப் பேணுகிறாய்.

உன் மேலும், உன் குழந்தைகள் மேலும் நான் கொண்ட பிரேம எண்ணங்களில், நீ உன் அருள்மழையை நிசப்தமாய்ப் பொழிந்து என்னைப் போஷிக்கின்றாய். 

 #PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Thou art Plainly Present - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou art Plainly Present

தெய்வமே என் தந்தையே,

நான் கடல்தீரத்திலோ, ஓடையிலோ அலைகளில் துள்ளிக் குதித்து நீராடும் போது, நான் உன்னுடன் சேர்ந்து ஆடுகிறேன்.

பிரகாசமான வர்ணங்களினால் நீ தீட்டிய மேகச் சித்திரங்களை நாள்தவறாமல் நான் வானில் காண்கிறேன்.

பசும்புல் கொண்டு நீ கட்டாந்தரையைப் போர்த்தும் நேர்த்தியைக் கண்டு நான் ரசிக்கிறேன்.

நீயே ஆதவனின் ஒளியில் உள்ள இதமான கதகதப்பு.

இப்படி, எங்கெங்கு காணினும் எல்லாவற்றிலும் நீ யதார்த்தமாய் விளங்கும் வியன்மிகு காட்சியைக் கண்டு, என் சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன்.

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

The Gaze of Truth - Sri Paramhansa Yogananda

ஓம்

The Gaze of Truth

கடவுளே,

மாற்றமே நிரந்தரமாய் உள்ள வாழ்க்கையும், வண்ணவண்ண பூக்கள், சத்தமின்றி தோன்றி தவழ்ந்து மறையும் மேகங்கள் என நவவிதமாக காட்சிதரும் இயற்கையும்,  என் மனிதக் கண்களை வசியம் செய்கின்றன.
***

என்னுள் இருக்கும் திவ்ய கண்ணை திறக்கச் செய். அதன் மூலம் எல்லா அழகிலும் உன் மாண்புமிகு அழகையே ரசிப்பேன்.

இவ்வுலகில் உன்னையன்றி வேறொன்றையும் காணாத அந்த உண்மைப் பார்வையை எனக்கு அருள்.
***

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

பரப்பிரம்மமே, நாங்கள் அறவொழுக்கத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அன்புடன் அணுகக் கற்றுக் கொடு.

உன் ஒழுக்கநெறிக்கு அடிபணிந்தால் நாம் பெறுவதோ உன் அருட்கொடையான மங்காப் புகழ் மகுடம்!
***

நீ அறனெறிக் கட்டளைகளை விதித்தது எங்கள் சுகநலத்தைக் காப்பதிற்கே. 

மாறாக, தீவொழுக்கத்தின் விளைவு எப்படியும் துன்பத்தில் தான் முடியும் என அறிந்து நாங்கள் அதனிடத்தினின்று விலகச் செய்.

அறத்திற்கு தீநெறியைக் காட்டிலும் அளவிடற்கரிய காந்தசக்தி உண்டு என்பதைக் கண்கூடாய் உணரச் செய்.    
***

கெட்ட பழக்கம் முதலில் நன்கு இனிக்கும், ஆனால் படிப்படியாக விஷமாய் மாறிக் கொல்லும். நன்னெறியோ முதலில் சற்று கசந்தாலும், முடிவில் அமிர்தமாய் இனிக்கும். இந்த சூக்ஷும விஷயத்தைப் புரிந்து செயல்பட எங்களுக்கு விவேகத்தைக் கொடு.  

#PHD

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda

பரமான மெய்யொளியே! கதிரவனின் வெப்பக் கதிர்களில் ஆகட்டும், நிலவின் குளிர்க் கிரணங்களில் ஆகட்டும், நீ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தே நிற்கின்றாய். வான விளக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எல்லாம் இயற்கைக் கன்னியை மட்டுமே, உன்னை அல்ல.

ஸ்தூலதீபங்கள்அடையாளம் காட்டும் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு, என்னைப் பொறுத்தவரை  இருள்மயமானதே. இம்முழுப் பிரபஞ்சத்தை உருமாற்றித் தோற்றுவிக்கும், உன் மறைவான ஒளிப்பிரகாசத்தைக் காண என் பார்வைக்குச் சக்தி கொடு.

நான் கண்மூடி அமர்ந்து, நிழல்களைக் கொண்டு நானே பின்னிய என் எண்ணவலையினில் சிக்கித் தவிக்கும் போது, நீ வண்ணமயமான காலைக் கதிரவனாய், மெய்ஞ்ஞானப் பிரகாசத்துடன் எனக்குக் காட்சியளி! இப்பிரம்மாண்டத்தில் செயல்புரியும் உன் லீலா விநோத நடனத்தை, கலைக் கண்களுடன் நான் ரசிக்க எனக்கு வரம் தா!

ஓம் ஸ்ரீ ஸத்குரவே சரணம்

#PHD

வியாழன், 21 ஏப்ரல், 2011

நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Tell me Thou hast loved me always

நான் சத்தமாகவோ, முணுமுணுத்தோ பிரார்த்திக்கும் வார்த்தைகள் உன் மேலுள்ள என் அன்பினை மட்டுப்படுத்தாமல் இருக்கட்டும். தெய்வீக மௌன மொழியினால் பேசி என் நெஞ்சின் காதலை உனக்குத் தெரிவிப்பேன்.

உன் குரல் அமைதிகரமானது; என் ஆன்ம அமைதியில் நீ பேசுவதை நான் கேட்பேனாக.

ஓ நிரந்தரத் தாயே! நான் அறிந்திராத போதிலும், நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்லம்மா!

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

புதன், 13 ஏப்ரல், 2011

காந்தி, மகாத்மா - "பெரிய ஆத்மா"

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Gandhi, the Mahatma - "great soul"

காந்தி! மக்கள் உன்னை வெகு பொருத்தமாக மகாத்மா, "பெரிய ஆத்மா" என்று அழைக்கின்றனர். நீ இருந்தமையால் பல சிறைச்சாலைகள் கோயில்களாயின. உன் குரல், அடக்குமுறைக்கு உட்பட்டு இருந்த போதிலும், மேன்மேலும் அதிக சக்தியுடன் பெருகி, உலகெங்கிலும் ஒலித்தது. சத்தியாகிரகத்தின் ("சத்தியத்தில் உறுதி") மூலம் அடைந்த உன் வெற்றி முழக்கம் மனித இன உள்ளத்தைத் தொட்டது.


பீரங்கியின் மீதல்லாது, கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து, வெளிநாட்டவரின் அரசாட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு பரந்த தேசத்திற்கு வெறுப்பின்றி, ரத்தக் களரின்றி விடுதலை வாங்கிக் கொடுத்து சரித்திரம் காணாத, நிகரில்லாத ஒரு சாதனையைப் படைத்தாய்.

நோன்பினால் நொந்த உன் தேகத்தை ஒரு மதிகலங்கிய மூடனின் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, நீ நிலத்தில் சரியும் போது உன் கைகள் சிரமமின்றி மேலெழும்பி அவனை மன்னித்தருள சைகை செய்தன. உன் வாழ்வின் எல்லா நாட்களிலும் நீ கள்ளங் கபடமற்றக் கலைஞனாய்ச் செயல் புரிந்தாய்; ஆனால் மரணத் தருவயிலோ, நீ உன்னதக் கலைஞனாய்க் காட்சியளித்தாய். உன் தன்னலமற்ற வாழ்வின் அனைத்துத் தியாகங்களே தான் அருளின் சிகரமான அந்தக் கடைசிச் சைகைக்குக் காரணம்.

மனிதனை நல்வழிப்படுத்தக் கடவுள் எப்படித் தனது அற்புத மாயா சக்தியைப் பிரயோகிக்காமல் அன்பினை உபயோகிக்கின்றாரோ, அப்படியே நீயும் முரட்டுச் சக்தியைத் தவிர்த்து சாந்தமான குணங் கொண்ட அறவழியை மேற்கொண்டாய்.

சத்தியத்தின் வடிவான எளிமையான துறவியே! வருங்கால போர்வீரர்கள் உன் உபதேசத்தை உன்னிப்பாகப் படித்து, "மனிதனின் இன்றியமையாத பகைவர்கள் ஒரே தந்தையான கடவுளிடம் தோன்றிய அவனின் இதர சகோதரர்கள் அன்று, அழியத்தகு அறியாமையில் பிறந்த அகங்கார எதிரிகளே அவனின் பகைவர்கள்,"என்ற உட்கருத்தை உணரட்டும்.

குறுகிய சுயதேச நலம், பேராசை, வஞ்சனை, போருக்கான ஆயுத்தம் போன்றவைகளால் தற்சமயம் தடுமாறியிருக்கும் தேசங்கள் உன் தீர்க்க தரிசனமான வார்த்தைகளை திறந்த நெஞ்சத்துடன் உட்கொள்ளட்டும்: "அஹிம்சை மனித சமுதாயத்தில் வேரூன்றியுள்ளது. அது மென்மேலும் ஓங்கி வளரும். அது உலக அமைதிக்கு இட்டுச் செல்லும் அடிகோலி (harbinger)."

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

திங்கள், 13 டிசம்பர், 2010

வீட்டை நோக்கிச் செல்லும் என் கடைசிப் பயணம்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
I am Home-ward bound at last

காலத்தின் பாதையில் நான் பல முறை பிழைக் குழிகளுக்குள் கவனமின்றி தவறி விழுந்துள்ளேன். ஆனால், என்னரசே, ஒவ்வொரு முறையும் உன் கட்புலனாகா கைகளால் என்னைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றியுள்ளாய்.

எனக்கும் உனக்கும் நடுவே நான், அதிருப்தியால் என் குடிசைக் கதவுகளை மூடி, பழக்கம் எனும் முள் வேலி கட்டி, உதாசீனம் எனும் கற்சுவர் எழுப்பி, மடி எனும் மலைகள் இடைப்பட, அவநம்பிக்கை எனும் கடல் விரிய, தடைகளாலான ஒரு மனோலோகத்தை நெடுங்காலமாக சிருஷ்டித்து வந்துள்ளேன்.

கடவுளே! என்னெஞ்சம் இப்பொழுது தெய்வீக உறுதியினால் நிரம்பியுள்ளது. இனி தேவர்கள் இகலோக சுகத்தை கோடானுகோடி வருடங்களுக்குக் கட்டின்றி அனுபவிக்க வரமளிக்க உறுதி மொழிந்தாலும் சரி, ஆத்ம சாக்ஷாத்காரம் (Self-realization) இன்றி அவற்றின் கவர்ச்சி உன்னை நாடும் வழியிலிருந்து விலகும் வண்ணம் என்னைக் கவர்ந்து இழுக்காது.

தடைகளே, ஜாக்கிரதை! என் வழியை விட்டு விலகி ஓடுங்கள். நான் என் வீடு நோக்கிச் செல்கிறேன்.

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.